Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உள்ளூர் திட்ட குழுமத்துக்கு 15 மீட்டர் உயரம் வரை கட்டடம் கட்ட அனுமதி

Print PDF

தினகரன்    05.01.2010

உள்ளூர் திட்ட குழுமத்துக்கு 15 மீட்டர் உயரம் வரை கட்டடம் கட்ட அனுமதி

தஞ்சை, ஜன.5:

தஞ்சையில் அதிகபட்சம் 15 மீட்டர் உயரம் வரை கட்டடம் கட்ட அனுமதி வழங்க உள்ளூர் திட்டக் குழுமத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கலெக்டர் சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நகர் ஊரமைப்பு இயக்குநர் சுற்றறிக்கைபடி தஞ்சை உள்ளூர் திட்ட பகுதிக்கு உட்பட்ட வளர்ச்சிகளுக்கு திட்ட அனுமதி& கட்டட அனுமதி பெறுவது தொடர்பாக பொதுமக்கள் நகர் ஊரமைப்பு துறையின் தலைமை அலுவலகம் சென்னைக்கு செல்வதை குறைக்கும் வகையில் தஞ்சை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலருக்கு திட்ட அனுமதி, கட்டட அனுமதி வழங்க கூடுதல் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அதன்படி 50 குடியிருப்புகள் கொண்ட தொகுப்பு குடியிருப்பு, சிறப்பு கட்டடங்கள், மொத்த தளப்பரப்பு 2,500 சதுர மீட்டருக்கு மிகாமல் இருந்தால் அதற்கு அனுமதி வழங்கலாம். இதே அளவில் தளப்பரப்புள்ள வணிக கட்டடங்கள், அலுவலக கட்டடங்களுக்கும் அனுமதி வழங்கலாம்.

குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து கட்டடங்களுக்கும் அதிகபட்சம் 15 மீட்டர் உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். இதேபோன்று தரைத்தளத்துடன் 2 தளங்கள் கொண்ட பள்ளி கட்டடங்களுக்கும் அனுமதிவழங்கலாம்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அமையும் மனைப்பிரிவுகளில் அதிகபட்சமாக 5 ஏக்கர் பரப்பளவு வரையிலும் கிராம பகுதிகளில் அமையும் மனைப்பிரிவுகளில் அதிகபட்சமாக 10 ஏக்கர் பரப்பளவு வரையிலும் திட்ட அனுமதி மற்றும் தொழில்நுட்ப அனுமதி வழங்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற மேம்பாட்டு இயக்கம், சிட்கோ, சிப்காட், சமத்துவபுரம், சுனாமி மற்றும் ஆதிதிராவிடர் நல வாரியம் தொடர்புடைய மனைப்பிரிவுகள் அனைத்திற்கும் ஒப்புதல் வழங்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

தமிழ்நாடு நகராட்சிகள் கட்டட விதி 1,972 மற்றும் ஊராட்சிகள் கட்டட விதி 1997ல் குறிப்பிட்டுள்ள குறைந்தபட்ச பரப்பளவுக்கு குறையாமல் மனை உட்பிரிவு மற்றும் மனை ஒருங்கிணைப்புக்கு ஒப்புதல் வழங்க அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒப்புதல் வழங்கப்பட்ட வரைபடம், மனைப்பிரிவு வரைபடத்தில் மீள் ஒப்புதல் வழங்கவும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த இனங்களுக்கான திட்ட அனுமதி& கட்டட அனுமதி பெற பொதுமக்கள் தஞ்சை உள்ளூர் திட்ட குழும அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு கலெக்டர் சண்முகம் தெரிவித்துள்ளார்.