Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தின் வடிவத்தை மாற்ற முடியுமா? புது சிக்கல்

Print PDF

தினமலர்                                            30.07.2012

திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தின் வடிவத்தை மாற்ற முடியுமா? புது சிக்கல்

அடுக்குமாடி கட்டுமான திட்ட வரைபடங்களில் திருத்தங்கள் செய்யும்போது, திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களின் வடிவத்தை மாற்றக்கோரும் நிறுவனங்களால், சி.எம்.டி.ஏ., அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. சி.எம்.டி.ஏ., வின் வளர்ச்சி விதிகளின்படி, 3,000 சதுர அடிக்கு அதிகமான கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளும்போது, அந்த நிலத்தின் மொத்தப்பரப்பில், 10 சதவீத நிலத்தை திறந்தவெளி பகுதியாக ஒதுக்க வேண்டும். பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் பயன்பாட்டுக்காக, இவ்வாறு ஒதுக்கப்படும் நிலங்களை, கொடை ஆவணம் மூலம் சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்க வேண்டும். இதன்பின், சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரரின் திட்ட அனுமதி கோரும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

இவ்வாறு பெறப்படும் திறந்தவெளி நிலங்களை, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் மாநகராட்சியிடம் ஒப்படைக்கும். இத்தகைய திறந்தவெளி ஒதுக்கீடாக வழங்கப்படும் நிலங்களை பெற மட்டுமே சி.எம்.டி.ஏ.,வுக்கும், மாநகராட்சிக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலங்களை திருப்பி அளிக்கவும், அளவுகளை மாற்றவும் அதிகாரம் வழங்கப்படவில்லை.சிக்கல்திட்ட அனுமதி கோரும் நிலையில், ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை திறந்தவெளி நிலமாக காட்டி, கொடை ஆவணம் மூலம், சி.எம்.டி.ஏ.,விடம் கட்டுமான நிறுவனங்கள் ஒப்படைத்து விடுகின்றன. ஆனால், இந்நிறுவனங்கள், தங்களது திட்டங்களுக்கு இறுதி ஒப்புதல் பெறும் சமயத்தில், திறந்தவெளி நிலத்தின் அளவு, வடிவத்தை மாற்ற அனுமதி கேட்கின்றன.

உதாரணமாக, அண்ணா சாலையில், ஹால்டா சந்திப்பில், நட்சத்தில் ஓட்டல் கட்டும் திட்டத்தை மேற்கொண்டுள்ள, ஐ.டி.சி., நிறுவனம், முதலில், திட்ட அனுமதிக்கு விண்ணப்பிக்கும்போது, அங்குள்ள 10 சதவீத நிலமான 14.5, "கிரவுண்ட்' நிலத்தை திறந்தவெளி பகுதி ஒதுக்கீடாக சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைத்தது. இந்நிறுவனத்தின் திட்ட வரைபடத்தில் திருத்தங்கள் செய்யும் போது, திறந்தவெளி ஒதுக்கீடு நிலத்தை மாற்றுவதில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.மாற்றக் கோரிக்கை இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத சி.எம்.டி.ஏ., அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஐ.டி.சி., நிறுவனம் ஒதுக்கீடு செய்து, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்ட நிலம், மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இத்தகைய சூழலில், இந்நிலத்தில் பூங்கா அமைத்து பராமரிக்கும் பொறுப்பை, மாநகராட்சியின் தீர்மானம் மூலம், ஐ.டி.சி., நிறுவனம் பெற்றுள்ளது. இதில், ஐ.டி.சி., நிறுவனம் கட்டும் ஓட்டலில், "ஹெலிபேட்' அமைக்கும் வகையில் திட்டத்தை மாற்றி அமைத்தது. இதற்கு சி.எம்.டி.ஏ., ஒப்புதல் அளிக்கவில்லை. இதையடுத்து, திட்ட வரைபடத்தை ஐ.டி.சி., நிறுவனம் மீண்டும் திருத்தி அமைத்தது. இவ்வாறு, திட்ட வரைபடத்தை திருத்தியதில், திறந்தவெளி ஒதுக்கீடுக்கான நிலத்தின் வடிவமைப்பு உள்ளிட்ட விவரங்களையும் மாற்ற அந்த நிறுவனம் அனுமதி கோரியது. இதை ஆய்வு செய்த அதிகாரிகள், திறந்தவெளி நிலத்தின் அளவை மாற்ற முடியாததால், குறிப்பிட்ட சில நிபந்தனைகள் அடிப்படையில் இந்நிறுவனத்துக்கு திட்ட அனுமதி வழங்கியுள்ளது. அதிகாரம் இல்லை இந்த நிறுவனம் மட்டுமல்ல, மேலும் சில அடுக்குமாடி கட்டுமான திட்டங்களுக்கான வரைபடங்களில் திருத்தம் செய்யும்போதும், திறந்தவெளி நிலங்களின் அமைப்பை மாற்றுவது தொடர்பாக சிக்கல் எழுகின்றன.இதில், திறந்தவெளி நிலத்தின் அளவை மாற்றுவது குறித்து, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைதான் முடிவு செய்ய வேண்டும். அவர்களும், அரசிடமிருந்து வழிகாட்டுதல்கள் பெற்று அதன் அடிப்படையிலேயே முடிவெடுக்க முடியும். இச்சிக்கலுக்கு தீர்வுக்காணும் வழிமுறைகளை எளிமைபடுத்துவது குறித்து அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.

-நமது நிருபர்-