Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள்

Print PDF
தினகரன்    16.08.2012

அரசு உத்தரவுக்காக காத்திருக்கும் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள்

கோவை, : வரன்முறைப்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்குமா என அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் அரசின் உத்தரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.கோவை மாநகராட்சி 72 வார்டுகளுடன் 110 சதுர கி.மீ பரப்பளவு கொண்டதாக இருந்தது. தற்போது, குறிச்சி, குனியமுத்தூர், கவுண்டம்பாளையம் என 11 உள்ளாட்சி அமைப்பு இணைக்கப்பட்ட பிறகு, 100 வார்டுகளுடன் 257.04 சதுர கி.மீ பரப்பளவாக உயர்ந்துள்ளது.பழைய வார்டுகளில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகள் அபராத தொகையுடன் ஓரளவுக்கு வரன்முறைபடுத்திக்கொள்ளப்பட்டது.

ஆனால், புதிதாக இணைக்கப்பட்ட 11 உள்ளா ட்சி அமைப்புகளில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவு ஏராளம் உள்ளன. குறிப்பாக, 10 ஏக்கரில் மனைப்பிரிவு உருவாக்கப்படும்போது 60 சதவீத நிலம் மட்டுமே மனைப்பிரிவுகளுக்கு பயன்படுத்த வேண்டும். மீதமுள்ள 40 சதவீத நிலம் தார்ச்சாலை, பூங்கா, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு விடவேண்டும்.

ஆனால், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் இந்த விதிமுறை மீறப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 90 சதவீத மனைப்பிரிவுகள் விதிமுறை மீறல்களுடன் உள்ளன. இதுபற்றி கணக்கெடுக்க மாநகராட்சி மேயர் செ.ம.வேலுசாமி மற்றும் கமிஷனர் பொன்னுசாமி ஆகியோர் டவுன் பிளானிங் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அவர்கள், கடந்த 6 மாத காலமாக கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். சமீபத்தில் கணக்கெடுப்பு பணியை நிறைவுசெய்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர். அதில், ‘‘இம்மனைப்பிரிவுகளிடமிருந்து அபராத தொகை பெற்று, முறைப்படுத்திக்கொண்டால் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். அத்துடன், இதர பகுதிகளைப்போல் இப்பகுதி மக்களுக்கும் தார்ச்சாலை, தெருவிளக்கு, குடிநீர் உள்ளி ட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கலாம்‘‘ என குறிப்பிட்டுள்ளனர். இதுபற்றி நகரமைப்பு அதிகாரிகள் கூறியதாவது:

பழைய 72 வார்டுகளில் 620க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் உள்ளன. புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் 1,700க்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவு உள்ளன. இவற்றில், 78 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது. உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைப்படி இக்குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதி எதுவும் செய்துகொடுக்க முடியாத நிலை உள்ளது. தமிழகம் முழுவதும் இதுபோன்ற குடியிருப்புகளை அங்கீகாரம் செய்துகொள்வதற்கு வசதியாக தமிழக அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது. அதற்கான உத்தரவு இதுவரை கோவை மாநகராட்சிக்கு வரவில்லை. அந்த உத்தரவை எதிர்பார்த்து இம்மனைப்பிரிவு மக்கள் காத்திருக்கின்றனர். உத்தரவு வந்த பிறகு தார்ச் சாலை, குடிநீர் விநியோகம் உள்ளிட்ட பணிகள் முறைப்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.