Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக்கிரமிப்பு இடத்தில் பிஎஸ்யுபி திட்டத்தில் வீடு கட்ட அனுமதி

Print PDF

தினமணி            28.08.2012

ஆக்கிரமிப்பு இடத்தில் பிஎஸ்யுபி திட்டத்தில் வீடு கட்ட அனுமதி

மதுரை, ஆக. 27: ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தில், பிஎஸ்யுபி திட்டத்தில் வீடு கட்ட மாநகராட்சி அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளிலுள்ள குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டுவதற்கு ஜவாஹர்லால் நேரு, தேசிய நகர புனரமைப்புத் திட்டத்தில் ரூ.100 கோடிக்கு மேல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சொந்த பட்டா இடத்தில் குடிசையில் வாழும் மக்களுக்கு, கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. 2009-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில், பெரும்பாலான பயனாளிகள் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் தேர்வு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

கோவில் ஆக்கிரமிப்பு இடங்கள், அரசு புறம்போக்கு இடங்கள், மாநகராட்சி இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த குடிசை வீடுகளுக்கும் பிஎஸ்யுபி திட்டத்தில் நிதி வழங்கப்பட்டுள்ளது.

மாநகரப் பகுதியில் தகுதியான பயனாளிகள் பலர் இருந்தபோதும், ஆக்கிரமிப்பு இடங்களில் வீடு கட்ட முறைகேடாக அனுமதி வழங்கி இருப்பதாகப் பாதிக்கப்பட்ட பயனாளிகள் கூறுகின்றனர். இந்த வகையில், பிஎஸ்யுபி திட்டத்தின்கீழ் சுந்தர்ராஜபுரம் மார்க்கெட் இடத்தில் 10-க்கும் மேற்பட்டோருக்கு நிதி ஒதுக்கீடு செய்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மாநகராட்சி இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு, மாநகராட்சி அதிகாரி நிதி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆக்கிரமிப்பிலிருந்து மாநகராட்சி இடத்தை மீட்கவும், இதற்குத் துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மாநகராட்சி ஆணையர் ஆர்.நந்தகோபாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது..

Last Updated on Tuesday, 28 August 2012 10:43