Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ.3,000 கோடியில் மழைநீர் கால்வாய் சிறப்பு திட்டம்

Print PDF

தினமலர்            30.08.2012

ரூ.3,000 கோடியில் மழைநீர் கால்வாய் சிறப்பு திட்டம்

சென்னை:சென்னை மாநகராட்சி விரிவாக்கப் பகுதிகள், வெள்ளத்தால் பாதிக்காத வகையில், 3,000 கோடி ரூபாயில் சிறப்புத் திட்டம் ஒன்றை மாநகராட்சி தயாரித்து வருகிறது. புதிதாக உருவாக்கப்பட்ட எட்டு மண்டலங்களிலும், 1,056 கி.மீ., தூரத்திற்கு மழை நீர் கால்வாய் அமைய உள்ளது.இந்த திட்டத்தை தயாரிக்க, "டுபிசல்' நிறுவனம், "டெட்ராடெக்' என்ற ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்தது. இந்த நிறுவனம், ஒன்பது மாதங்களாக, திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில், ஆய்வு நடத்தி, மாதிரி திட்ட வரைவு ஒன்றை தயாரித்து உள்ளது.ஆலோசனைஇதன்படி, விரிவாக்க பகுதிகளில் அமைக்கப்படும் கால்வாய்களிலிருந்து மழை நீர் கொற்றலை ஆறு, கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர் வழிகளில், சென்று சேரும் வகையில், 1,056 கி.மீ., தூரத்திற்கு மழை நீர் கால்வாய்கள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது.

இதற்கான உத்தேச மதிப்பீடு, 3,000 கோடி ரூபாய் என, தெரிவிக்கப் பட்டு உள்ளது.மாதிரி திட்ட வரைவு குறித்த ஆலோசனை கூட்டம், செவ்வாயன்று ரிப்பன் மாளிகையில் நடந்தது. அதில், மழை நீர் கால்வாய் அமைப்பு முறைகள் குறித்தும், அதற்கான வரைவுகளையும், ஆலோசனை நிறுவனம் முன் வைத்தது. அதில் தேவைக்கேற்ப சில மாற்றங்கள் செய்யப்படும் என, தெரிவிக்கப் பட்டது. தற்போது நடந்து வரும் மழை நீர் கால்வாய் திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் போல் வராமல், திட்ட வரைவில் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டுமென, மேயரும், ஆணையரும் வலியுறுத்தினர்.
 
இது குறித்து, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் கூறுகையில், ""விரிவாக்க பகுதியில், வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், மழை நீர் கால்வாய்க்கு, பெரிய அளவில் சிறப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்த உள்ளோம். ஆலோசனை நிறுவனம் திட்ட வரைவை தயாரித்து வருகிறது. திட்டம், மிகப்பெரிய அளவில் மேற்கொள்ளப்படுவதால், விரிவாக்க பகுதிகளுக்கு பெரிய விடியலை ஏற்படுத்துவதாக அமையும்,'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.ஆறு மாதங்கள்ஆலோசனை நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறுகையில், ""திட்ட வரைவு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், சிற்சில மாற்றங்கள் செய்து,செப்., 20 அன்று இறுதி வரைவை ஒப்படைப்போம்,'' என்றார்.மேலும், ""திட்ட வரைவை அரசுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற வேண்டும். அரசு, எந்த நிதியின் கீழ் இதை செயல்படுத்துவது என முடிவு செய்யும். அதன்பின், ஒப்பந்தம் கோரப்படும். இந்த பணிகள் துவங்க, குறைந்தபட்சம் ஆறு மாதங்கள் ஆகும்,'' என்று மற்றொரு அதிகாரி கூறினார்.1,447 கோடி ரூபாய் பணிகளில் மந்தம்பழைய மாநகராட்சி பகுதிகளில் வெள்ள பாதிப்பை தடுக்கும் வகையில், தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 1,447.91 கோடி ரூபாயில் திட்டம் செயல்பட்டு வருகிறது.இது, 2010ல் துவங்கியது, அடுத்த ஆண்டு திட்டம் நிறைவடையும் என, எதிர்பார்க்கப் பட்டது.
 
ஆனால், இதுவரை 25 சதவீத பணிகளே முடிந்து உள்ளன.அடுத்தடுத்து தேர்தல், மெட்ரோ ரயில் பணி, பருவமழை பாதிப்பு என, பல காரணங்கள் கூறப்படும் நிலையில், திட்டத்தை செயல்படுத்த, கூடுதலாக 27 கோடி ரூபாய் தேவை என, திட்ட மதிப்பீடு, 1,475.43 கோடி ரூபாயாக திருத்தப் பட்டு உள்ளது. திருத்திய மதிப்பீடு, மத்திய அரசின் அனுமதிக்காக, அனுப்பப் பட்டு உள்ளது. கடந்த ஆட்சியில் துவங்கப் பட்ட திட்டம் என, கருதாமல், சென்னைவாசிகளின் நலனை கருதி இந்த திட்டத்தில் மாநகராட்சி மேலும் முனைப்பாக இருக்க  வேண்டும்.
 
இந்த திட்டம் தொய்வடைந்ததற்கான  காரணிகள், புதிய திட்டத்தையும் முடக்காத வகையில் கவனம் செலுத்தப்பட வேண்டும். பல, அனுபவமில்லாத சிறு ஒப்பந்த தாரர்கள் பணியமர்த்தப் பட்டதால், பழைய திட்டம் முடங்கியது. புதிய திட்டத்திலாவது, சென்னைபோன்று ஓரிரு பெரிய ஒப்பந்ததாரர்களிடம் பணியை ஒப்படைக்க வேண்டும்.மேலும், பழைய பாணியில் குழி வெட்டி, கம்பி அமைத்து, கான்கிரீட் ஊற்றி, அது செம்மையாக காத்திருக்கும் நடைமுறையை கைவிட்டு, புதிய தொழில்நுட்பங்களை கையாண்டால், திட்டம், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தாமல் நிறைவடையும்.
Last Updated on Thursday, 30 August 2012 07:36