Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டடம் கட்ட இணையத்தில் விண்ணப்பிக்க அனுமதி : சென்னை மாநகராட்சியில் வருகிறது புதிய திட்டம்

Print PDF

தினமலர்       04.09.2012

கட்டடம் கட்ட இணையத்தில் விண்ணப்பிக்க அனுமதி : சென்னை மாநகராட்சியில் வருகிறது புதிய திட்டம்

சென்னை : பணிகளுக்காக சாலைகளை தோண்டும் அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, இணைய தளம் மூலம் அனுமதி வழங்கும் நடைமுறையை மாநகராட்சி விரைவில் கொண்டு வருகிறது. விதிமீறல் கட்டடங்கள் குறித்தும், இணையத்தளத்தில் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சாலைகள் கண்டபடி தோண்டும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு, பொதுமக்களாக இருந்தாலும், குடிநீர் வாரியம், மின் வாரியம், பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட சேவைத்துறைகளாக இருந்தாலும், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறவேண்டும். தோண்டிய இடத்தில், மீண்டும் அதேப் போல் சாலை அமைக்க தேவையான செலவு தொகையையும், கட்டணமாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியது கட்டாயம்.

இணைய தள அனுமதிஆனால், சேவைத்துறைகளும், பொதுமக்களும் முறையான அனுமதி கோரி விண்ணப்பித்தாலும், மாநகராட்சி அதிகாரிகள், குறித்த நாட்களுக்குள் அதற்கான அனுமதி கொடுப்பதில்லை. இழுத்தடிப்ப தாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், சாலை வெட்டு பணி செய்வதற்கான அனுமதியை பெற, இணைய தளத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெறும் நடைமுறையை கொண்டுவர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான, மாநகராட்சி அதிகார பூர்வ இணைய தளத்தில், பிரத்யேக வடிவமைப்பு செய்யப்படுகிறது.
 
என்ன நடக்கும்?
 
இதன்படி,
 
சேவைத்துறைகள், பொதுமக்கள் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். உடனடியாக ஒரு பதிவு எண் இணைய தளம் மூலமே வழங்கப்படும். இதை பயன்படுத்தி, பொதுமக்கள் விண்ணப்பத்தின் நிலை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை ஆய்வு செய்து அலுவலர்கள், கட்டணமாக செலுத்தவேண்டிய தொகை விவரங்களை இணைய தளத்திலேயே பதிவாக வெளியிடுவார்கள்.

உரிய கட்டணத்தை செலுத்தியதும், உரிய அனுமதி இணைய தளம் மூலமே வழங்கப்படும். சாலையை வெட்டும் காலம், பணி முடிக்க வேண்டிய காலம் பற்றிய விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்படும்.

அனுமதி பெற்ற சாலையை வெட்டுவது குறித்த விவரம் அடங்கிய நகல், பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்திலேயே வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், காலதாமதம் மற்றும் முறைகேடுகளை தடுக்கவும் முடியும் என, மாநகராட்சி அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கட்டட ஆய்வும் பதிவு

மாநகராட்சி பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி பெற்றவர்கள் பணி துவங்கியதும், ஆரம்ப நிலையிலிருந்தே மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். இதன்படி, கட்ட உரிமையாளர் கட்டுமான பணி குறித்து, குறிப்பிட்ட பகுதியில் உள்ள இளநிலைப் பொறியாளரிடம் தெரிவிக்க வேண்டும். இளநிலை பொறியாளர் கட்ட டத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கையாக இணையத்தில் விவரங்களை பதிவு செய்வார்.
கட்டடப்பணி முடியும் வரை, தொடர் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மாறாக கட்டடப் பணி நடந்தால் அந்த விவரங்களையும்

அதிகாரி பதிவு செய்வார். விதிமீறல் இருப்பின், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதையும் இணைய தளத்திலேயே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதன் மூலம், விதிமீறல் கட்டடங்கள் குறித்த விவரங்களை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் கண்காணிப்பை அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரி நம்பிக்கை

இந்த நடைமுறைகள் அனைத்தும் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதற்காக இணையதளத்தில் உரிய, வடிவமைப்பை மாநகராட்சி செய்து வருகிறது. இது நடைமுறையில் சாத்தியம்தானா என, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது,"இதை செயல்படுத்துவதில், மேயரும், ஆணையரும் சிறப்புக்கவனம் செலுத்தி வருகின்றனர். வடிவமைப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.விரைவில் நடைமுறைக்கு வரும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும்,' என்றார்.