Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு அதிகாரிகள்.. திட்டத்தை நிறைவேற்ற காலக்கெடு நீட்டிப்பு

Print PDF
தினமலர்                   28.02.2013

பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு அதிகாரிகள்.. திட்டத்தை நிறைவேற்ற காலக்கெடு நீட்டிப்பு

கடலூர்:கடலூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டப் பணி வரும் ஏப்ரல் மாதத்தில் நிறைவடையும் என குடிநீர் வடிகால் வாரிய செயற் பொறியாளர் கூறினார்.

கடலூர் நகரில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத் திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நகரப் பகுதியில் உள்ள 157 கி.மீ., தொலைவிற்கு அமைக்கப்பட வேண்டிய பைப் லைன் பணிகள் முடிக்கப்பட்டு முதுநகர், கே.கே. நகர் உட்பட ஒரு சில இடங்களில் மட்டுமே பாக்கி உள்ளது.

கடலூர் முதுநகரில் பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்கள் தேசிய நெடுஞ்சாலையில் மங்கை மகால் முதல் மோகினிப் பாலம் வரை சாலையின் இரு பக்கங்களிலும் பெரிய சைஸ் குழாய்கள் புதைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டன.

இதனால் முதுநகர் மற்றும் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். சாலையில் தோண்டிப் போட்ட மண் மேடுகளின் மீது வாகனங்கள் செல்வதால் புழுதி பறந்து அப்பகுதியே புகை மண்டலமானது. இதனால் தேசிய நெடுஞ்சாலைத் துறையினரின் தார்சாலை புதுப்பிக்கும் பணி மற்ற இடங்களில் போடப்பட்டும் கூட கடலூர் முதுநகரில் சாலை போடாமல் பணிகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், ஆமை வேகத்தில் நடந்து வந்த பாதாள சாக்கடைப் பணி நேற்றுடன் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து சிமென்ட் பேக்கிங் செய்யும் பணி நடந்து வருகிறது. ஒரு வழியாக பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் முதுநகர் பகுதியில் நிறைவடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தற்போது நகரம் முழுவதும் சேகரிக்கப்படும் கழிவு நீர், நேரு நகரில் உள்ள நீரேற்று நிலையத்திற்கு, ராட்சத குழாய் வழியாக சுத்திகரிப்பு செய்வதற்கான குழாய் புதைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் உப்பனாறு வழியாக கெடிலம் ஆற்றில் கலக்கும் படி திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு பணி துவங்குவதற்கான உத்தரவு வழங்கியும் பணிகள் துவக்கவில்லை.

இதற்கிடையே பாதாள சாக்கடைத் திட்டப் பணி துவங்கி 6 ஆண்டுகளைக் கடந்து விட்டதால் அதிகாரிகள் அமைச்சரிடம் இதோ, அதோ என வாய்தா வாங்கி வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் நடந்த கூட்டத்தில் இத்திட்டம் பிப்ரவரி மாதம் முடிக்கப்பட்டு விடும் என அமைச்சரிடம் அதிகாரிகள் வாக்குறுதியளித்தனர். ஆனால் இது வரை நிறைவேற்றப்படவில்லை.

இது குறித்து குடிநீர் வடிகால்வாரிய செயற்பொறியாளர் தங்கவேல் கூறுகையில், "முதுநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த பணிகள் முழுவதும் நிறைவடைந்து விட்டது. பீச் ரோடில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் வரும் ஏப்ரல் மாதம் முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்' என மீண்டுமொருமுறை பாதாள சாக்கடைத் திட்டப் பணிக்காக வாய்தா வாங்கியுள்ளார்.

Last Updated on Friday, 01 March 2013 10:32