Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இம்மாதம் முதல் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படும்: மாநகராட்சி மேயர் அறிவிப்பு

Print PDF
தினமணி           01.03.2013

இம்மாதம் முதல் மழைநீர் சேகரிப்பு திட்டம் கட்டாயமாக்கப்படும்:  மாநகராட்சி மேயர் அறிவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் இம் மாதம் முதல் கட்டாயமாக்கப்படும் என மேயர் விஜிலா சத்தியானந்த் வியாழக்கிழமை அறிவித்தார்.

மேலும் கட்டடங்களுக்கு ஒரு வாரத்தில் திட்ட அனுமதி அளிக்க கிரீன் சேனல் திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாநகராட்சி சாதாரண மற்றும் அவசர கூட்டம் மேயர் விஜிலா சத்தியானந்த் தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பூ. ஜகநாதன், ஆணையர் மு. சீனி அஜ்மல்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய மேலப்பாளையம் மண்டலத் தலைவர் ஹைதர் அலி, உறுப்பினர்கள் தவுலத், குறிச்சி சேகர் உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறினர். மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. எந்த குறைகளை கூறினாலும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என அவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த மேயர், மாமன்ற உறுப்பினர்களை அதிகாரிகள் மதிக்க வேண்டும். உறுப்பினர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.

கட்டுப்பாடு இல்லாத அதிகாரிகள் இந்த மாநகராட்சிக்கு தேவையில்லை என்றார்.

மேலும் உறுப்பினர்களின் புகார்களுக்கு ஆணையர் சீனி அஜ்மல்கான் பதிலளித்து பேசுகையில், அதிகாரிகள் மீது ஏதேனும் புகார் இருந்தால் எழுத்துப் பூர்வமாக உரிய ஆதரங்களுடன் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

கீரின் சேனல் திட்டம்: துணை மேயர் பூ. ஜகநாதன் பேசுகையில், கட்டடங்களுக்கு திட்ட அனுமதி (பிளான் அப்ரூவல்) விரைவாக வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட கிரீன் சேனல் திட்டம் குறித்து பிரச்னை கிளப்பினார். அனைத்து ஆவணங்களும் முறையாக இருக்கும் பட்சத்தில் திட்ட அனுமதியை ஒரு வாரத்திற்குள் வழங்கும் வகையில் கிரீன் சேனல் திட்டத்தை மார்ச் மாதம் முதல் அமல்படுத்த இயலுமா என அதிகாரிகளிடம் அவர் வினவினார்.

இதற்கு பதிலளித்த செயற்பொறியாளர் (திட்டம்) செüந்திரராஜன், இந்த திட்டத்தை வரும் திங்கள்கிழமை முதல் அமல்படுத்த முடியும் என தெரிவித்தார்.

இதையடுத்து பேசிய மேயர் விஜிலா சத்தியானந்த், கிரீன் சேனல் திட்டம் வரும் திங்கள்கிழமை முதல் நடைமுறைப்படுத்தப்படும். அனைத்து ஆவணங்களும் முறையாக இருந்து செவ்வாய்க்கிழமை மனு கொடுத்தால், அடுத்த செவ்வாய்க்கிழமை பிளான் அப்ரூவல் வழங்கப்படும் என்றார் மேயர்.

மழைநீர் சேகரிப்பு திட்டம்: தொடர்ந்து பேசிóய துணை மேயர் ஜெகநாதன் தமிழக முதல்வரின் சிறந்த திட்டமான மழைநீர் சேகரிப்பு திட்டத்தை திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் கட்டாயமாக்கி செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து மேயர் விஜிலா சத்தியானந்த் கூறியதாவது:

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் மழைநீர் சேகரிப்பு திட்டம் மார்ச் மாதம் முதல் கட்டாயமாக்கப்படும். அனைத்து அரசு அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டடங்களிலும் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும். மழைநீர் வசதி ஏற்படுத்தாத கட்டடங்களுக்கு பிளான் அப்ரூவல் வழங்கப்படமாட்டாது.

அனைத்து கட்டடங்களிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் மழைநீர் சேகரிப்பு வசதியை ஏற்படுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த காலத்திற்குள் மழைநீர் வசதி செய்யாவிட்டால், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்றார் மேயர்.

தொடர்ந்து பேசிய காங்கிரஸ் உறுப்பினர் உமாபதி சிவன், திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகளை வைத்ததில் ரூ. 5 கோடி வரி பாக்கி இருப்பதாக கூறப்படுகிறதே என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆணையர் சீனி அஜ்மல்கான், விளம்பர பலகைகளைப் பொருத்தவரை மாவட்ட ஆட்சியர் தான் முழு பொறுப்பு. மாநகராட்சி பகுதியில் விளம்பர பலகைகளை வரைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியருடன் கலந்து ஆலோசித்து விரைவில் முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

தி.மு.க. உறுப்பினர் வி. பொன்னையாபாண்டியன் பேசுகையில், திருநெல்வேலி - தென்காசி பிரதான சாலையில் பழைய பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 21 கோடி ஆகும். இந்த நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். எனவே, அந்த நிலத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

இதற்கு பதிலளித்த மேயர், அந்த நிலத்தை சுற்றி முள்வேலி அமைத்து, மாநகராட்சி சார்பில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

Last Updated on Friday, 01 March 2013 10:32