Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ரூ56 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கியது

Print PDF
தினகரன்        27.04.2013

ரூ56 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணி துவங்கியது


உடுமலை:   திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி பகுதியில் 33 வார்டு உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்ற கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பபட்டது. உடுமலை &செஞ்சேரி மலை ரோடு ஏரி பாளையம் அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் சுத்திகரிப்பு நிலையம்அமைக்கவும், தளி ரோட்டில் நீர் மேலோட்டம் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு இதற்கான திட்ட மதீப்பீடு அனுப்பப் பட்டுள்ளது.  கட்டுமான பொருட்களின் விலை உயர்வை அடுத்து பாதாள சாக்கடை திட்டத்திற்காக மதிப்பீடு உயர்த்தப்பட்டு மீண்டும் அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது.

தொடர்ந்து தற்போது பாதாள சாக்கடை திட்டத்திற்காக நகராட்சி செலுத்த வேண்டிய தொகைக்காக மக்களிடம் வரிவசூல் நடந்து வருகிறது. கட்டட அமைப்பு மற்றும் கட்டிட அளவுகளை பொறுத்து ரூ.5 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை திட்டம் தாமதமானதால் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் ஓடை சீரமைத்தல், சிறு பாலம் கட்டுதல் போன்ற பணிகள் தொய்வடைந்தன. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், நகராட்சி தலைவர் ஷோபனா மேற்கொண்ட முயற்சியால்  பாதாள சாக்கடை திட்டத்திற்கான பணிகளை துவங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு கடந்த வாரம் வழங்கியது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் அளிக்கப்பட்ட ஆணையை குடிநீர் வடிகால் வாரிய உதவி கோட்ட பொறியாளர் நகராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். இதையடுத்து பாதாள சாக்கடை திட்டத்திற்கான ஆய்வு பணிகள் நேற்று முன்னதினம் துவங்கின. வித்யாசாகர் நகர் பகுதியில் பாதாளசாக்கடை அமைப்பதற்கான அளவீடு செய்யும் பணி துவங்கியது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் ரங்கராஜன் கூறுகையில், பாதாள சாக்கடை திட்டத்திற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நகராட்சி முழுவதும் அளவீடு செய்யும் பணி துவங்கி உள்ளது. விரைவில் முழு அளவிலான பணிகள் துவங்கும். பணிகள் அனைத்தும் குறித்த காலத்திற்குள் செய்து முடிக்கப்படும் என்றார்.