Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நான்கு ஏரிகளை மேம்படுத்தும் திட்டம் ஒரு வழியாக துவங்கியது! சென்னை வாசிகளுக்கு கூடுதல் குடிநீருக்கு வாய்ப்பு

Print PDF
தினமலர்               29.04.2013

நான்கு ஏரிகளை மேம்படுத்தும் திட்டம் ஒரு வழியாக துவங்கியது! சென்னை வாசிகளுக்கு கூடுதல் குடிநீருக்கு வாய்ப்பு

சென்னை:சென்னையை ஒட்டியுள்ள நான்கு ஏரிகளை மேம்படுத்தும் திட்டப் பணிகள், இரண்டு ஆண்டு இழுபறிக்கு பிறகு, துவங்கப் பட்டு உள்ளன. திட்டமிட்டபடி பணிகள் நிறைவடைந்தால், சென்னை நகருக்கு அடுத்தாண்டு முதல் கூடுதல் குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு புழல், பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளில் இருந்து குடிநீர் பெறப்படுகிறது. இது தவிர நெம்மேலி, மீஞ்சூர் திட்டங்கள் மூலமும் குடிநீர் கிடைக்கிறது.

நகரின் குடிநீர் தேவை, நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், சென்னையை ஒட்டியுள்ள நேமம், அயனம்பாக்கம் ஏரிகளை குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி கொள்ள அரசு திட்டமிட்டது.

ரூ.130 கோடி ஒதுக்கீடு

இதற்காக போரூர், நேமம், அயனம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளை மேம்படுத்த 130 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, கடந்த 2011ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

அப்போது போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ளவும் அவர் உத்தரவிட்டிருந்தார்.

இத்திட்டத்தின் கீழ் போரூர் ஏரி கொள்ளளவு 70 மில்லியன் கனஅடி,நேமம் ஏரி 577 மில்லியன் கனஅடி, அயனம்பாக்கம் ஏரி 314 மில்லியன் கனஅடியாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு, போரூர் ஏரிக்கு 20 கோடி ரூபாய், நேமம் ஏரிக்கு 79.50 கோடி ரூபாய், அயனம்பாக்கம் ஏரிக்கு 30 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாட்டு பணிகளை செய்ய திட்ட அறிக்கை தயாரானது.

இரண்டு ஆண்டு இழுபறிக்கு பின்னர், இந்த நான்கு ஏரிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

எங்கெங்கே?பணிகள் விவரம்:

பருத்திப்பட்டு அணைக்கட்டில் இருந்து அயனம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது. மொத்தம் 2100 மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் இந்த கால்வாய், இரண்டு மீட்டர் அகலத்திலும், ஒன்றரை மீட்டர் உயரத்திலும் மூடிய நிலையில் கட்டப்படுகிறது.

தற்போது 700 மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிந்துள்ளன. இதில், வினாடிக்கு 100 கனஅடி வரை நீரை அனுப்ப முடியும். ஜூன் மாதம் இதற்கான பணிகள் முழுமையாக முடியும். அயனம்பாக்கம் ஏரி கரைகளை பலப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன.

நேமம் ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு உபரிநீர் கொண்டு செல்ல திறந்த நிலை கால்வாய் கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. ஆறு கி.மீ., தூரத்திற்கு இந்த கால்வாய் அமையும். கிருஷ்ணா கால்வாயில் இருந்து நேமம் ஏரிக்கு, கிருஷ்ணாநீரை கொண்டு செல்வதற்காக சூடைவர்டிங் பாயின்ட்' கட்டும் பணிகளும் துவங்கப்பட்டுள்ளன. நேமம் ஏரி கரையை பலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

போரூர் ஏரியையும், செம்பரம்பாக்கம் ஏரியையும் இணைக்கும் தந்தி கால்வாய், சீரமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து போரூர் ஏரிக்கு நீரை அனுப்ப முடியும்.

மேலும், போரூர் ஏரிக்குள் மழைநீர் தடையின்றி வர வசதியாக, மழைநீர் கால்வாய்களை ஏரியுடன் இணைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.
சோழவரம் ஏரியை ஆழப்படுத்தும் வகையில் அதில் நீர் தேக்கம் இல்லாத வகையில் அதிகாரிகள் வைத்துள்ளனர். விரைவில் இந்த ஏரி மண் எடுத்து ஆழப்படுத்தும் பணி துவங்க உள்ளது.

நேமம், போரூர், அயனம்பாக்கம் ஏரிகள் அடுத்த ஆண்டு முதல் குடிநீர் பயன்பாட்டிற்கு உதவும் என்பதால், சென்னை நகருக்கு கூடுதல் குடிநீர் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஒரு டி.எம்.சி., கூடுதல்

இது குறித்து பொதுப்பணி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சோழவரம், அயனம்பாக்கம், நேமம், போரூர் ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம், தற்போதைய கொள்ளளவில் கூடுதலாக ஒரு டி.எம்.சி.,(2,800 கோடி லிட்டர்) நீரை சேமிக்க முடியும். இது ஒட்டு மொத்தமாக சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தப்பட உள்ளது. சென்னைக்கு தற்போது தினசரி 83 கோடி லிட்டர் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

நான்கு ஏரிகளை ஆழப்படுத்துவதன் மூலம் 35 நாட்களுக்கு இந்த நீர், நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க திட்டமிட்டிருப்பதால், அடுத்த ஆண்டு முதல் குடிநீர் பயன்பாட்டிற்கு இந்த ஏரிகள் உதவும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆழப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்படுமா?

நேமம், போரூர், அயனம்பாக்கம், சோழவரம் ஏரிகளை தூர்வாரி ஆழப்படுத்த கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒரு ஒப்பந்ததாரரும், பணிக்கு முன் வரவில்லை. இதேபோன்று நான்கு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு, தோல்வியில் முடிந்தது.

ஒப்பந்தப் புள்ளி மாற்றியமைக்கப்பட்டு, கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் ஒப்பந்தம் கோரப்பட்டது. ஒப்பந்தங்கள் முடிவானது.

மாவட்ட ஆட்சியர் அனுமதி, சுற்றுச்சூழல் துறை அனுமதி என, பல்வேறு காரணங்களுக்காக தூர்வாரும் பணி மட்டும் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.

கோடை துவங்கியுள்ளதால், ஏரிகள் வறண்டு கிடக்கும் தற்போதைய நிலை தான், ஆழப்படுத்த உகந்தது. இதை பயன்படுத்தி, போர்க்கால அடிப்படையில் ஏரியை ஆழப்படுத்தும் பணியை முடுக்கிவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.