Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வேலூர் மாநகரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4 கோடியில் புதிய திட்டம் மேயர் தகவல்

Print PDF
தினத்தந்தி         01.05.2013

வேலூர் மாநகரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4 கோடியில் புதிய திட்டம் மேயர் தகவல்


வேலூர் மாநகரில் குடிநீர் மேம்பாட்டு பணிகளுக்காக ரூ.4 கோடியில் புதிதாக திட்டமிடப்பட்டுள்ளதாக மேயர் தெரிவித்தார்.

குடிநீர் மேம்பாட்டு பணிகள்

வேலூர் மேயர் கார்த்தியாயினி மாநகராட்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:–

வேலூர் மாநகரில் நிலவும் குடிநீர் பிரச்சினையை போக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை நிரந்தரமாக போக்கும் வகையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக அந்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டம் நடைமுறைக்கு வரும்போது வேலூர் மாநகராட்சியின் குடிநீர் பிரச்சினை பெருமளவு தீர்ந்து விடும் என நம்பப்படுகிறது.

இதற்கிடையே தற்போது லாரிகள் மற்றும் டிராக்டர் மூலம் 4 மண்டலங்களிலும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து வினியோகம் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது,

மேலும் 2013–14–ம் ஆண்டில் இறைவன்காடு தலைமை நீரேற்று நிலையத்தில் புதிதாக 2 ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் பிரதான குழாய் அமைத்தல், கழிஞ்சூர் ஏரிப்பகுதியில் 4 ஆழ்துளைக்கிணறு அமைத்தல் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் அருகில் இருக்கும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குடிநீர் அபிவிருத்தி செய்தல், திருமணி நீரேற்று நிலையம் முதல் தலையாரம்பட்டு தலைமை நீரேற்று நிலையம் வரை நீரேற்று குழாய் அமைத்தல் போன்ற குடிநீர்மேம்பாட்டு பணிகளை ரூ.4 கோடியே 40 லட்சம் மதிப்பில் மேற்கொள்ள உத்தேசங்கள் அரசிற்கு அனுப்பப்பட்டு அரசின் அனுமதியை எதிர்ப்பார்த்து இருக்கிறோம். அனுமதி கிடைத்ததும் பணிகள் தொடங்கப்படும். இவ்வாறு மேயர் கூறினார். முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:–

அனுமதி

துணை மேயர்:– வேலூரில் புதிதாக கட்டிடம் கட்ட வரைபடத்துடன், மாநகராட்சியில் அனுமதி கோருபவர்கள் அந்த வரைபடத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் இருக்கிறதா? என பார்த்த பிறகுதான் கட்டிடம் கட்ட அனுமதி வழங்க வேண்டும்.

அத்துடன் இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்.

கோதண்டபாணி:– வேலூரில் கட்டிடம் கட்டுபவர்கள் மாநகராட்சியில் அனுமதி பெற்றுள்ளார்களா? ஒரு மாடி கட்ட அனுமதிபெற்றுவிட்டு பல மாடிகளை கொண்ட கட்டிடங்கள் கட்டுகிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா?

அதிகாரி:– அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டுபவர்களுக்கு நோட்டீசுகள் வழங்கப்படுகின்றன.

கோதண்டபாணி:– பல கட்டிடங்களுக்கு வரி விதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அப்படியே வரி விதிக்கப்பட்டிருந்தாலும் குறைவாக விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறதே? சரியான வரிவிதித்தால் தானே மாநகராட்சிக்கு வருமானம் கிடைக்கும்.

கமிஷனர்:– வரி விதிப்பு குறித்து ஆய்வு செய்ய ஒரு கமிட்டி அமைக்கப்பட உள்ளது.

நடவடிக்கை

துரை அரசன்:– குடிநீர் பிரச்சினைக்காக தினமும் ஆங்காங்கே சாலை மறியல், போராட்டம் போன்றவைகள் நடத்தப்படுகிறது. அது பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக இருக்கிறது. எனவே போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிச்சமுத்து:– வேலூர் பாலாற்றங்கரையில் உள்ள குடிநீர் மோட்டார்கள் பழுதடைந்து 25 நாட்கள் ஆகிறது. அதுபோல தண்ணீர் தொட்டி 3 மாதங்களாக பழுதடைந்து உள்ளது. எனவே மேற்கண்டவைகள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.