Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை, கோவையில் விரைவில் பெருநகர வளர்ச்சி குழுமம்: வீட்டு வசதி துறை செயலர்

Print PDF

தினமலர் 23.12.2009.

மதுரை, கோவையில் விரைவில் பெருநகர வளர்ச்சி குழுமம்: வீட்டு வசதி துறை செயலர்

மதுரை: ""சென்னையை போல மதுரை, கோவையில் விரைவில் பெருநகர வளர்ச்சிக் குழுமம் (மெட்ரோபாலிடன் டெவல்மென்ட் அதாரிட்டி) அமைக்கப்படும்,'' என, வீட்டுவசதித் துறை முதன்மை செயலாளர் சுர்ஜித்சிங் சவுத்ரி கூறினார். மதுரையில் நகர ஊரமைப்புத் துறையின், மண்டல ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. அரசு முதன்மை செயலாளர் சுர்ஜித்சிங் சவுத்ரி தலைமை வகித்தார். கமிஷனர் அசோக் டோங்ரா, கலெக்டர் மதிவாணன் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், உதவி கலெக்டர் ரோகிணி, கூடுதல் இயக்குனர் மாணிக்கவாசகம், துணைஇயக்குனர் மகாதேவன் பங்கேற்றனர். பின்பு அரசு முதன்மை செயலாளர் நிருபர்களிடம் கூறியதாவது: உள்ளூர் திட்டக் குழுமத்தில் நிறைய குறைபாடுகள் உள்ளன. அவை குறித்த புகார்களும் நிறைய வருகின்றன. இதனால் மண்டல அளவில், ஆய்வுக் கூட்டம் நடத்த அமைச்சர் பரிதிஇளம்வழுதி உத்தரவிட்டார். இதையடுத்து, இதுபோன்ற ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மனுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. மதுரையில் பெறப்பட்ட 83 மனுக்களில் 65 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.

இனி வரும் நாட்களில், உள்ளூர் திட்ட குழுமங்களில் மனு கொடுத்த 30, நாட்களில் தீர்வு காணப்படும். தாமதமானால் உரிய விளக்கத்தை மனுதாரருக்கு தரவேண்டும்.

இதற்காக விண்ணப்பத்துடனே, மனுதாரர் தரவேண்டிய ஆவணங்கள் குறித்த "செக்லிஸ்ட்' வழங்கி, அதன்படியே மனுக்கள் பெறப்படும். விண்ணப்ப அளவில் பல குறைபாடுகள் இருப்பதால், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாமல், அனுமதி வழங்குவதில் தாமதமாகின்றன. விண்ணப்பத்துடன் ஆவணங்கள் முறையாக வைக்காவிட்டால், மனு அளவிலேயே அவை நிராகரிக்கப்படும். ஒப்பந்ததாரர்கள் பலர் தெரிந்தே குறைபாடுள்ள விண்ணப்பங்களை வழங்குகின்றனர். இதுபோன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் உள்ள பெருநகர வளர்ச்சிக் குழுமம், போன்ற அமைப்புகள் மதுரை, கோவையில் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மாநகரில் உள்கட்டமைப்பு வரி வசூலிக்க வேண்டும். மதுரை மாநகராட்சியில் 1994 முதல் இவ்வரியை வசூலிக்கவில்லை. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது குறித்து விசாரித்து வருகிறோம், என்றார்.