Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரையில் பெருநகர வளர்ச்சி குழுமம்

Print PDF

தினமலர் 23.12.2009

மதுரையில் பெருநகர வளர்ச்சி குழுமம்

மதுரை : சென்னையிலுள்ள சிஎம்டிஏயைப்போல மதுரை, கோவை மாநகராட்சிகளிலும் பெருநகர வளர்ச்சிக்குழுமம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் சுர்ஜித்சிங் சவுத்ரி கூறினார்.

மதுரையில் நகர் ஊரமைப்புத்துறையின் மண்டல ஆய்வுக் கூட்டம் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலர் சுர்ஜித்சிங் சவுத்ரி தலைமையில் நடைபெற்றது.

நகர் ஊரமைப்பு ஆணையர் அசோக் டோங்ரே, கலெக்டர் மதிவாணன் மற்றும் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்ட உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் கலந்துகொண்டனர். பின்னர் நிருபர்களிடம் முதன்மைச் செயலாளர் கூறியதாவது: உள்ளூர் திட்டக் குழுமத்தில் வரைபட அனுமதி கேட்டு வரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஏராளமான புகார்கள் அரசுக்கு வந்தன. இதை தீர்ப்பது குறித்து மாநிலம் முழுவதிலும் ஆய்வுக்கூட்டம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் மதுரையில் ஆய்வு நடத்தப்பட்டது. வரைபட அனுமதி கேட்டு வரும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தீர்வு காணப்படாவிட்டால் அதற்கான காரணத்தை உடனடியாக விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏராளமான விண்ணப்பங்கள் தீர்வு காணப்படாததற்கு முக்கிய காரணம் முழுமையாக சமர்ப்பிக்கப்படாததால்தான். இனிமேல், விண்ணப்பத்துடன் என்னென்ன ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும் என பட்டியல் வைக்கப்படும். அதனடிப்படையில் முழுமையான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும். இதர விண்ணப்பங்கள் உடனடியாக நிராகரிக்கப்படும். சென்னையில் உள்ள சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமத்தைப் போல (சி.எம்.டி..) மதுரை, கோவை நகரங்களிலும் பெருநகர வளர்ச்சிக்குழுமம் தனியாக அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த அமைப்பிற்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்படும். உள் கட்டமைப்பு மேம்பாட்டு நிதிமூலம் ஆண்டுக்கு ரூ.150 கோடி வசூலாகிறது. மதுரையில் 1994ம் ஆண்டிலிருந்து இந்த நிதி வசூலிக்கப்படாதது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து தவறான வரைபடங்களை தாக்கல் செய்யும் வரைபடம் வரைவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 80 சதவீத விண்ணப்பங்கள் மீது தீர்வு காணப்பட்டுவிட்டது. திண்டுக்கல்லில் புதிய நகர் அமைப்பு பிரிவிற்கு ஒரேமனு மட்டும் வந்துள்ளதால், இந்த அமைப்பை மதுரையுடன் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.