Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கட்டிட அனுமதி வழங்குவதில் தாமதம்: வரைபடம் தயாரிப்பு பணி புறக்கணிக்க முடிவு

Print PDF

தினமலர் 01.03.2010

கட்டிட அனுமதி வழங்குவதில் தாமதம்: வரைபடம் தயாரிப்பு பணி புறக்கணிக்க முடிவு

சேலம்: சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டு வருவதால், புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான வரைபடங்கள் தயாரிக்கும் பணியை புறக்கணிக்க சேலம் உள்ளூர் திட்ட குழுமத்தில் உரிமம் பெற்ற கட்டிட வரைவாளர்கள் முடிவு செய்துள்ளனர். ஒருவர் கட்டுமான பணிகளை மேற்கொள்ள சேலம் மாநகராட்சியில் முறையாக அனுமதி பெற வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான அனுமதி வழங்குவதன் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. சேலம் மாநகராட்சியில் பதிவு செய்து லைசென்ஸ் பெற்ற பொறியாளர்களிடம் இருந்து கட்டிட வரைபடம்(புளூபிரின்ட்) பெற்று வந்தால் மட்டுமே கட்டிட அனுமதி பெற முடியும்.

லைசென்ஸ் பெற்ற பொறியாளர்கள் கட்டிட விதி, திட்ட விதி, முழுமை திட்ட விதி, வளர்ச்சி கட்டுப்பாடு, மலைப்பிரிவு விதி ஆகியவற்றுகுட்பட்டு வரைபடங்களை தயார் செய்து கட்டிட அனுமதியை பெற்று கொடுக்கின்றனர்.சேலம் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்ற பொறியாளர்கள் 120 பேர் உள்ளனர். பொறியாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை சேலம் மாநகராட்சியில் 1,000 ரூபாய் செலுத்தி தங்கள் லைசென்ஸை புதுப்பித்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் பொறியாளர்கள் கட்டிட அனுமதி பெற்று கொடுப்பதன் மூலம் மாநகராட்சிக்கு 10 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்து வருகிறது. சில மாதங்களாக சேலம் மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. சேலம் மாநகராட்சியில் பதிவு பெற்ற பொறியாளர்கள் மூலமாக வழங்கப்பட்ட பெரும்பாலான விண்ணப்பங்கள் கிடப்பில் உள்ளன. அவர்களால் அடுத்த கட்டிடத்துக்கான திட்ட வரைபடங்களை தயார் செய்ய முடியவில்லை. கடந்த ஆண்டு சராசரியாக மாதம் மூன்று அல்லது நான்கு கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று கொடுத்து வந்த பொறியாளர்கள், தற்போது இரண்டு மாதத்துக்கு ஒரு கட்டிடத்துக்கு அனுமதி பெறுவதையே குதிரை கொம்பாக கருதுகின்றனர். பொறியாளர்களிடம் கட்டிட அனுமதி வேண்டி பணம் கொடுத்த பலர், காலதாமதம் ஆவதால் மாநகராட்சி அனுமதியின்றி கட்டுமான பணிகளை துவக்கி வருகின்றனர்.அனுமதி பெற்ற பொறியாளர்கள் மூலம் தற்போது மாதம் 2 லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பதே அரிதாக உள்ளது. சேலம் மாநகராட்சி திட்டப்பிரிவு அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதே இப்பிரச்னைக்கு காரணம்.சேலம் மாநகராட்சியில் லைசென்ஸ் பெற்ற பொறியாளர்கள் பல முறை இப்பிரச்னை குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை.

மாநகராட்சியில் அனுமதி பெற்ற கட்டிட பொறியாளர்கள் புதிய கட்டிடங்களுக்கு அனுமதி வேண்டி வரைபடம் தயாரிக்கும் பணியை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். சேலம் மாநகராட்சி மற்றும் சேலம் உள்ளூர் திட்டக்குழுமத்தில் உரிமம் பெற்ற கட்டிட வரைவாளர்கள் சங்க கூட்டம் வின்சர் கேஸில் ஹோட்டலில் நடந்தது. அதில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் போராட்டம் நடத்தப்பட உள்ளது. லைசென்ஸ் பெற்ற பொறியாளர்களின் முடிவால் சேலம் மாநகராட்சிக்கு ஏற்கனவே கிடைத்து வந்த சொற்ப தொகையும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Last Updated on Monday, 01 March 2010 06:40