Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மதுரை நகர அடிப்படை வசதி விபரங்கள் விரல் நுனியில் : 'சாட்டிலைட் சர்வே' 3 மாதத்தில் முடியும்

Print PDF

தினமலர் 16.03.2010

மதுரை நகர அடிப்படை வசதி விபரங்கள் விரல் நுனியில் : 'சாட்டிலைட் சர்வே' 3 மாதத்தில் முடியும்

மதுரை : மதுரை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கட்டடங்கள், காலி இடங்கள், குடிநீர் இணைப்புகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் கொண்டு வருவதற்கான, "சாட்டிலைட் சர்வே' நேற்று துவங்கியது.

தமிழகத்தில் உள்ள சில நகரங்களைப் பற்றிய முழு விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து, தேவைப்படும்போது பயன்படுத்துவதற்கான திட்டத்திற்கு உலக வங்கி, கடன் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஏற்கனவே கோவை மாநகராட்சி, ராஜபாளையம், கோபி நகராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு, முடியும் நிலையில் இருக்கிறது. தற்போது இத்திட்டத்திற்காக "சர்வே' எடுக்கும் பணி மதுரையில் நேற்று முதல் துவங்கியது.

இப்பணியை "டாடா கன்சல்டிங் சர்வீசஸ்' (டி.சி.எஸ்.,) நிறுவனம் மேற் கொண்டுள்ளது. 60 பேர், 30 குழுக்களாக பிரிந்து ஒவ்வொரு வீடாக செல்வர். இவர்கள் செல்லும்போது, ஒவ்வொரு கட்டடத்தின் அளவு, வரி விதிக்கப்பட்ட விபரம், அதன் எண், குடியிருப்பா வணிக ரீதியிலானதா, வாடகைக்கு விடப்பட்டுள்ளதா சொந்த உபயோகத்தில் உள்ளதா, குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, என்ன வகையான கட்டடம் (குடிசை, ஓடு, கான்கிரீட்), தெருக்களின் அளவு ஆகிய விபரங்கள்; விளையாட்டு மைதானங்கள், பள்ளிகள், சினிமா தியேட்டர்கள், மருத்துவமனைகள், பஸ் ஸ்டாண்டுகள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றின் அமைவிடங்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படும். இவற்றைக் கொண்டு ஒரு வரைபடம் தயாரிக்கப்படும்.

சென்னையில் உள்ள மாநில தகவல் மையத்திற்கு இத்தகவல்கள் அனுப்பப்படும். அதன் பிறகு இவை, இணையதளத்தில் ஏற்றப்படும். மாநகராட்சி முக்கிய அதிகாரிகள் எப்போது வேண்டுமானாலும் ஒரு கட்டடத்தைப் பற்றிய விபரங்களை கம்ப்யூட்டரில் "கிளிக்' செய்து அறியலாம். சில குறிப்பிட்ட வரைமுறைக்குள் பொதுமக்களும் விபரங்களை அறியலாம். கட்டட உரிமையாளரின் பெயர், வரி விதிப்பு எண், தெருவின் பெயர் போன்ற விபரத்தில் ஏதாவது ஒன்றை குறிப்பிட்டால் கூட, கட்டடம் பற்றிய முழு விபரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கான "இணையதள' முகவரி பின்னர் அறிவிக்கப்படும். மூன்று மாதங்களுக்குள் இப்பணியை முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளத்தை பயன்படுத்தும் விதம் குறித்து மாநகராட்சி அலுவலர்களுக்கு "டி.சி.எஸ்.,' நிறுவன அலுவலர்கள் பயிற்சி அளிப்பர். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்நிறுவனத்தை சேர்ந்தவர்களே இணையதளத்தை பராமரிப்பர். மேயர் தேன்மொழி, கமிஷனர் செபாஸ்டின் நேற்று இத்திட்டத்தை துவக்கினர். தலைமை பொறியாளர் சக்திவேல், உதவி கமிஷனர் ராஜகாந்தி, மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.பாஸ்கரன், செயற்பொறியாளர் சந்திரசேகரன் கலந்துகொண்டனர்.

Last Updated on Tuesday, 16 March 2010 09:35