Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி கடைகளை விற்க முயற்சி: 4 கடைகளுக்கு சீல் வைப்பு

Print PDF

தினமணி 18.03.2010

நகராட்சி கடைகளை விற்க முயற்சி: 4 கடைகளுக்கு சீல் வைப்பு

நாமக்கல், மார்ச் 17: நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளை விற்க முயற்சித்த சம்பவத்தை முறியடித்து அந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

நாமக்கல் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதற்காக நகராட்சியிடம் அனுமதி பெற்று உரிமம் பெற்ற நபர்களில் பலர் அந்த கடைகளை உள் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வரும் சூழலில் நகராட்சிக்கு சொந்தமான கடையை விற்பனை செய்யவும் முயற்சித்த சம்பவம் புதன்கிழமை தெரியவந்தது.

பேருந்து நிலையத்தின் சேலம் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு அருகே 4 கடைகள் உள்ளன. 3 பழமுதிர்ச் சோலை, ஒரு செல்போன் கடை என அந்த 4 கடைகளும் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பிறகே அந்த கடைகள் நகராட்சிக்கு சொந்தமானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து நகராட்சி ஆணையர் ஆறுமுகம், நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ், சுகாதார அலுவலர் முகமது மூசா மற்றும் பணியாளர்கள் பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், 4 கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.

இது தொடர்பாக, ஆணையர் ஆறுமுகம் கூறியது:

நகராட்சி சார்பில் பெரியசாமி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த கடைகள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததால் கடைகளை பூட்டி சீóல் வைத்து நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளில் பலர் வாடகை கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.

உடனடியாக வாடகை செலுத்தாவிட்டால் அந்த கடைகளுக்கும் வியாழக்கிழமை முதல் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

Last Updated on Thursday, 18 March 2010 11:34