Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அன்னூர் தாலுகா எல்லையில் இரு பேரூராட்சி; 25 ஊராட்சிகள்

Print PDF

தினமலர் 24.04.2010

அன்னூர் தாலுகா எல்லையில் இரு பேரூராட்சி; 25 ஊராட்சிகள்

அன்னூர்: அன்னூர் தாலுகா எல்லையில் இரு பேரூராட்சிகள், 25 ஊராட்சிகள் அமைகின்றன. திருப்பூர் மாவட்டம் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரியில் புதியதாக உருவானது. அவிநாசி தாலுகாவில் இருந்த அன்னூர் ஒன்றியம் கோவை வடக்கு தாலுகாவில் சேர்க்கப்பட்டது. அன்னூர் ஒன்றியத்தை சேர்ந்த மக்கள் அவதிக்கு உள்ளாகினர். சான்று பெற, நலத்திட்ட உதவி பெற மூன்று பஸ்கள் மாறி 50 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. அன்னூரை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் தொடர் போராட்டம் நடத்தின. மார்க்சிஸ்ட் சார்பில் உண்ணாவிரதமும், இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது. அன்னூர் மக்கள் மையம் மற்றும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் பல ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு கலெக்டருக்கு அனுப்பப்பட்டது.
தி.மு.., தே.மு.தி.., .தி.மு.., உள்ளிட்ட சர்வ கட்சியினரும், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் மனுக்கள் கொடுத் தனர். பிப்ரவரியில் அன்னூர் வந்த துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் பேசிய மத்திய அமைச்சர் ராசா, 'வருகிற பட்ஜெட் கூட்டத்தில் புதிய தாலுகா அறிவிப்பு வெளியாகும்' என்று தெரிவித்தார். அதன்பின், நேற்று முன் தினம் சட்டசபையில் வருவாய்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்ட அறிவிப்பில், அன்னூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறியதாவது: அன்னூர், சர்க்கார் சாமக்குளம் ஆகிய இரு பேரூராட்சிகளும், அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நாரணாபுரம், பச்சாபாளையம், மசக்கவுண்டன் செட்டிபாளையம், கணுவக்கரை, குன்னத்தூர், பிள்ளையப்பம்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், கரியாம்பாளையம், காரே கவுண்டன்பாளையம், பொகலூர், வடவள்ளி, அக்கரை செங்கப்பள்ளி, குப்பனூர், ஒட்டர்பாளையம், வடக்கலூர், ஆம்போதி, பசூர், .மேட்டுப்பாளையம், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி ஆகிய 21 கிராம ஊராட்சிகளும், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில் அக்ரஹார சாமக்குளம், கள்ளிப்பாளையம், கொண்டையம்பாளையம், வெள்ளமடை ஆகிய நான்கு ஊராட்சிகளும் அமைய உள்ளது. இதற்கான உத்தேச எல்லை அடங்கிய வரைபடம் அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வருவாய் துறையினர் தெரிவித்தனர். அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன. ஊராட்சி ஒன்றிய தலைவர் ராதா கூறுகையில்,'அன்னூர் மக்களின் அவதிக்கு தீர்வு கிடைத்துள்ளது. விரைவில் இதற்கான பணியை துவக்க வேண்டும்' என்றார்.

பேரூராட்சி தலைவர் வசந்தாமணி கூறுகையில்,'அன்னூர் வார சந்தையில் இரண்டு ஏக்கர் இடம் உள்ளது. அரசு விரும்பினால் இங்கு தாலுகா அலுவலகம் அமைக்கலாம், சூலூர் தாலுகாவைச் சேர்ந்த பதுவம்பள்ளி ஊராட்சி அன்னூருக்கு மிக அருகில் உள்ளது. அங்கிருந்து சூலூர் செல்ல மக்கள் சிரமப்படுகின்றனர். பதுவம்பள்ளி ஊராட்சியை அன்னூர் தாலுகாவில் சேர்க்கலாம்' என்றார்.

முன்னாள் பேரூராட்சி தலைவர் சவுந்தரராஜன் அறிக்கையில்,தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் அவினாசி தொகுதி தலைவர் சத்தியபிரீதா கூறுகையில்,' தாலுகா அமைக்கும் பணியுடன் அவினாசி அத்திக்கடவு திட்டத்தையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும்' என்றார். 12வது வார்டு கவுன்சிலர் சாந்தி நன்றி தெரிவித்து முதல்வர், துணை முதல்வர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்பினர் மத்திய அமைச்சர் ராசாவுக்கு நன்றி தெரிவித்து நோட்டீஸ் அடித்து வினியோகம் செய்தனர். பொங்கலூர் ஊராட்சி மக்கள் கூறுகையில்,' பொங்கலூர் அன்னூருக்கு மிக அருகில் உள்ளது, அவினாசி தாலுகா அலுவலகம் செல்ல இரண்டு பஸ் மாறி 30 கி.மீ., தூரம் செல்ல வேண்டும். எனவே, பொங்கலூர் ஊராட்சியை அன்னூர் தாலுகாவில் சேர்க்க வேண்டும்' என்றனர்.

Last Updated on Saturday, 24 April 2010 05:52