Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அரியாறு வடிநிலக் கோட்டத்தில்: மழை நீரைச் சேமிக்க வாய்க்கால்களில் விரைவில் தூர் வாரும் பணி

Print PDF

தினமணி 28.04.2010

அரியாறு வடிநிலக் கோட்டத்தில்: மழை நீரைச் சேமிக்க வாய்க்கால்களில் விரைவில் தூர் வாரும் பணி

திருச்சி, ஏப். 27: மழை நீரைச் சேமிப்பதற்காக, திருச்சி அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட குளங்களைச் சார்ந்த 19 வாய்க்கால்களில் ஏப்ரல் மாத இறுதியில் தூர் வாரும் பணி தொடங்கப்படவுள்ளது.

இதற்காக ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் வரும்போது, பொதுப் பணித் துறை திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்துக்கு உள்பட்ட குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு வாய்ப்பாக அமைகிறது.

ஆனால், அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட திருச்சி, கரூர் (குளித்தலை பகுதி) மாவட்டத்தில் உள்ள 95 குளங்களில் தண்ணீர் நிரம்புவதற்கான ஒரே ஆதாரம் மழை மட்டுமே.

அபரிமிதமான அளவுக்கு மழை பெய்தாலும்கூட இந்தக் கோட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீர் நிரம்புவதில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவையும் விஞ்சி பெய்தது.

அப்போது, ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்துக்கு உள்பட்ட 99 சதக் குளங்கள் நிரம்பின. ஆனால், அரியாறு கோட்டத்துக்கு உள்பட்ட 95 குளங்களில் 6 குளங்கள் மட்டுமே நிரம்பின.

குளங்களுக்கு தொடர்புடைய நீரோட்டப் பாதையான வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பே இதற்குக் காரணம் என்பது தெரிய வந்தது.

மேலும், அரியாறு கோட்டத்துக்கு உள்பட்ட கோரையாறு, அரியாறு, ஐயாறு, மாமுண்டியாறு உள்ளிட்ட ஆறுகளில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு உய்யகொண்டான் வாய்க்கால் மூலமாக திருச்சி மாநகரில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த ஆறுகளில் வரும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், மழை நீரைச் சேமிக்கும் வகையிலும் கோடை காலத்தில் அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட குளங்களுடன் தொடர்புடைய சிறு வாய்க்கால்கள், வரத்து வாரிகளைத் தூர் வார திருச்சி மாவட்ட நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனை செய்தது.

தற்போது, இந்தப் பணிகளுக்காக அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 55 லட்சத்துக்குப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதைத் தொடர்ந்து, துறையூர், குளித்தலை, மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூர் ஆகிய வட்டங்களில் உள்ள அரியாறு வடிநிலக் கோட்ட சிறு வாய்க்கால்கள், வரத்து வாரிகளில் தூர் வாரும் பணி ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளன. இந்தப் பணி மே 15}ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் தெரிவித்தது:

"முசிறி வட்டத்தில் பாலாயியம்மன் ஏரி வழங்கு வாய்க்கால், எம். களத்தூர் வரத்துவாரி, மணப்பாறை வட்டத்தில் உபரி நீர் வாரி, காப்பாக்குடி வழங்கு வாய்க்கால், பாலக்குறிச்சி மருங்கிகுளம் வாய்க்கால், குமரவாடி வாய்க்கால், திருவெறும்பூர் வட்டத்தில் சூரியூர் பெரிய ஏரி வாய்க்கால் உள்பட 19 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த வாய்க்கால்களில் 2 அடி முதல் 3 அடி ஆழத்துக்குத் தூர் வாரி, அந்த மண் மூலம் கரைகளும் பலப்படுத்தப்படவுள்ளன' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 28 April 2010 11:01