Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதையும் கட்டடத்தை காப்பாற்ற புதிய 'ஆபரேஷன்' : நவீன தொழில்நுட்பப் பணி விரைவில் துவக்கம்

Print PDF

தினமலர் 03.05.2010

புதையும் கட்டடத்தை காப்பாற்ற புதிய 'ஆபரேஷன்' : நவீன தொழில்நுட்பப் பணி விரைவில் துவக்கம்

கோவை : கோவை அம்மன்குளம் பகுதியில் மேலும் நான்கு கட்டடங்கள் புதைய வாய்ப்புள்ளதாக நிபுணர் குழு அறிக்கை அளித்ததின் அடிப்படையில், அந்த கட்டடங்களின் அடிப்புறத்தை தற்காலிகமாக பலப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன. இந்த வாரத்தில் 'ஜெட் கிரவுட்டிங்' தொழில்நுட்பம் மூலம் மண்ணின் அடிப்பகுதியை நிரந்தரமாக பலப்படுத்தும் பணி துவங்கவுள்ளது.கோவை அம்மன் குளம் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் 936 அடுக்குமாடி குடியிருப்புகள் 16 பிளாக்குகளாக கட்டப்பட்டு வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்ட நிலையில், கடந்த ஏப்ரல் 3ம் தேதி, இதில் ஒரு கட்டடத்தின் பின்புறம் மண்ணில் புதைந்தது.

கட்டட அஸ்திவாரத்தின் அடியில் உள்ள மண் இளகிய தன்மையுடன் இருப்பதே, புதைய காரணம் என நிபுணர் குழுவினர் கண்டறிந்தனர். இதையடுத்து, இக்கட்டடம் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், இதே கட்டடத்தின் எதிர்புறம் உள்ள மற்றொரு கட்டடமும் 25 செ.மீ., மண்ணில் புதைந்தது. இதனால் இக்கட்டடத்தின் இரு பிளாக்குகளை இணைக்கும், 'எக்ஸ்பேன்ஷன் ஜாயின்ட்' இரண்டாக பிரிந்துள்ளது.

இரண்டாவது கட்டடமும் புதைவதைக் கண்ட தமிழக அரசு, உடனடியாக சென்னை ஐ..டி., பேராசிரியர் காந்தி, சென்னை அண்ணா பல்கலை கட்டடவியல் துறை பேராசிரியர் சாந்தகுமார், கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரி சிவில் இன்ஜினியரிங் துறை இணை பேராசிரியர் அருமை ராஜ் ஆகியோர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. கடந்த வாரம் இக்குழுவினர் நடத்திய ஆய்வின் முடிவுகள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 'கட்டடங்கள் புதைய இளகிய மண்தான் காரணம்; இதே பகுதியில் மேலும் நான்கு கட்டடங்களின் அடியில் இளகிய மண் இருப்பதால் அக்கட்டடங்களும் மண்ணில் புதைய வாய்ப்புள்ளது' என, நிபுணர் குழுவினர் அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

இக்கட்டடங்களை இடிக்காமல், 'ஜெட் கிரவுட்டிங்' எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தி மண்ணின் அடிப்பகுதியை உறுதிப்படுத்தலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரை செய்தனர். கட்டடங்களின் அடியில் இருந்து சேகரிக்கப்பட்ட மண் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கோவையில் கடந்த சில நாட்களாக இடையிடையே மழை பெய்து வருகிறது. இதனால் புதைய வாய்ப்புள்ளதாக அடையாளம் காணப்பட்ட கட்டடங்களின் அடிப்பகுதி, 'ஹாலோ பிளாக்' கற்களால் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

பொறியாளர்கள் சிலர் கூறுகையில், 'இனி எந்த கட்டடமும் இடிக்கப்பட மாட்டாது. நிபுணர் குழுவினர் அளித்த பரிந்துரையின்படி கட்டடங்கள் பலப்படுத்தப்பட உள்ளன. ஜெட் கிரவுட்டிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எந்தெந்த மண்ணின் தன்மைக்கு, எந்தெந்த கலவை பயன்படுத்தி பலப்படுத்துவது, இதற்காகும் செலவு ஆகியவற்றை மதிப்பிடும் பணி தற்போது நடந்து வருகிறது. மதிப்பீட்டு அறிக்கை தயாரானவுடன், இந்த வாரத்தில் 'ஜெட் கிரவுட்டிங்' தொழில்நுட்பம் மூலம் மண்ணின் அடிப்பகுதியை பலப்படுத்தும் பணி துவங்கி விடும்' என்றனர்.

'ஜெட் கிரவுட்டிங்' என்றால் என்ன? : 'ஜெட் கிரவுட்டிங்' என்பது கட்டடங்களின் அடிப்பகுதியை உறுதி செய்ய பயன்படுத்தப்படும் ஒரு நவீன தொழில்நுட்பம். இதன்படி, இளகிய மண் (லூஸ் பாக்கெட்) இருப்பதாக சந்தேகிக்கும் கட்டடங்களின் அடிப்பகுதியை பலப்படுத்தலாம். கட்டடத்தின் மேற்பகுதியில் இருந்து 'போர்வெல்' மூலம் துளையிட்டு சிமென்ட் மற்றும் தண்ணீர் அடங்கிய கலவை, அதிவேக அழுத்தத் தில் கட்டடத்தின் அடியில் பீய்ச்சி அடிக்கப்படும்.

கட்டடத்தின் அடியில் உள்ள 'லூஸ் பாக்கெட்டுகளில்' உள்ள இடைவெளிகளில் இந்த சிமென்ட் கலவை சென்று 'செட்டில்' ஆகி, நாளடைவில் பாறை போல் இறுகி விடும். இந்த பாறை அமைப்பு, எவ்வளவு எடையுள்ள கட்டடங்களையும் தாங்கி நிற்கும். இளகிய மண்ணின் தன்மைக்கு ஏற்க, சிமென்ட், தண்ணீருடன் ஒருவித ரசாயனமும் கலக்கப்படும். கட்டடங்களை வீணாக இடிக்கத் தேவையில்லை.

Last Updated on Monday, 03 May 2010 06:03