Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

நெல்லை மாநகராட்சியில் கட்டடம் கட்ட நிபந்தனைகள் தளர்வு மேயர் சுப்பிரமணியன் விளக்கம்

Print PDF

தினகரன்                  29.10.2010

நெல்லை மாநகராட்சியில் கட்டடம் கட்ட நிபந்தனைகள் தளர்வு மேயர் சுப்பிரமணியன் விளக்கம்

நெல்லை, அக். 29: நெல்லை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை: மாநகராட்சியில் புதிய கட்டடம் கட்ட விதிக்கப்பட்ட 18 நிபந்தனைகளை தளர்வு செய்ய வேண்டும் என்று மண்டல தலைவர்கள், உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி மேயர், பாளை, நெல்லை மற்றும் தச்சநல்லூர் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் கூடி விவாதித்தனர்.

அதன்படி பொதுமக்கள் நலன் கருதி அனுமதி பெற்ற மனைப்பிரிவுகளுக்கு தாசில்தாரிடமிருந்து தடையின்மை சான்று, விஏஓ அட்டெஸ்ட் எப்எம்பி, விஏஓ அட்டெஸ்ட் சிட்டா அடங்கல் மற்றும் விஏஓ அட்டெஸ்ட் டவுன் சர்வே ஸ்கெட்ச் போன்றவை மனுவோடு சமர்ப்பிக்க தேவையில்லை. மனுவோடு நில உரிமைக்குரிய ஆவணத்தின் நகலில் மனுதாரர் ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட வேண்டும். அதில் நோட்டரி அட்வகேட் கையெழுத்து பெற வேண் டிய அவசியம் இல்லை.

கட்டட இடம் குறித்து தாவா இருந்தால் மட்டும் மனுதார் அரசு வக்கீலிடம் கருத்துரு பெற்று தர வேண் டும். மற்றும் விதிமுறைகள்படி சூரிய அடுப்பு 1500 .அடி மேலுள்ள கட்டடத்திற்கு வரைபடத்தில் காட்டப்பட வேண்டும். புதிய குடிநீர் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்ற 1,2,3,4,8,9,10,19,26,27 மற்றும் 31,32 பாகம் ஆகிய இடங்களில் புதியதாக வீடு கட்ட மனு செய்பவர்கள் குடிநீர் இணைப்பு பெறுவதற்கு சம்மத கடிதம் தர வேண்டும். அதற்குரிய வைப்பு தொகையும் செலுத்த வேண்டும்.

எனவே கட்டடம் கட்ட விரும்புபவர்கள் திங்கள்கிழமை தோறும் மேயரிடம் நேரில் கட்டட வரைபடத்திற்கான மனு, ஆவணங் களை தந்து 24 மணி நேரத்திற்குள் அனுமதியை பெற்றுக்கொள்ளலாம். கட்டி முடிக்கப்பட்ட கட்டடத்திற்கு வரி விதிப்பு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது என்ற புகார் அடிக்கடி எழுப்பப் பட்டது. எனவே சென்ற மாதம் முதல் புதியதாக கட்டிடம் கட்டியதும் கட்டட உரிமையாளர்கள் உரிய படிவத்தில் விபரங்களை பூர்த்தி செய்து மைய அலுவலகத்தில் சமர்பித்து உடனடி வரிவிதிப்பு ஆணை பெறலாம். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள் அதை சரிபார்த்து அதில் ஏதேனும் தவறு இருந்தால் அதற்குரிய அதிக பணத்தை வரியாக விதிப்பார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கட்டடங்கள் கட்ட விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கம்

Print PDF

தினமலர்               29.10.2010

கட்டடங்கள் கட்ட விதிக்கப்பட்டிருந்த தடைநீக்கம்

ஸ்ரீபெரும்புதூர் : ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி, கட்டடங்கள் கட்ட விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீபெரும்புதூர். இங்கு, முன்னாள் பிரதமர் ராஜிவ் மறைந்த இடத்தில், 21 கோடி ரூபாய் மதிப்பில், அழகிய புல்வெளியுடன் கூடிய நினைவு மண்டபம் கட்டப்பட்டது.ராஜிவ் நினைவிடத்திற்கு வந்து செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில், நாடு முழுவதுமிருந்து காங்கிரஸ் கட்சியினர் வந்து செல்கின்றனர்.எனவே, நினைவிடத்தைச் சுற்றி கட்டடங்கள் எழுப்பப்பட்டால், நினைவிடம் பொலிவிழந்துவிடும் எனக் கருதி, நினைவிடத்தைச் சுற்றி 300 மீட்டர் சுற்றளவிற்கு கட்டடங்கள் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது.இப்பகுதியை, 2007ம் ஆண்டு வளர்ச்சியில்லாப் பகுதியாக அரசு அறிவித்தது.இப்பகுதியில், ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம், பாரதி நகர், அம்மன் அவென்யூ, மாதா நகர், கச்சிப்பட்டு, டி.கே.நாயுடு நகர் ஆகியவை உள்ளன.

ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றியுள்ளப் பகுதிகளில் நாளுக்கு நாள் தொழிற்சாலைகள் அதிகரித்து வருகின்றன. அங்கு வேலையில் சேருபவர்கள், ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குடியேறி வருகின்றனர். இதனால், மக்கள் தொகை அதிகரித்து வருகிறது.இந்நிலையில், ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி, 300 மீட்டர் சுற்றளவிற்கு கட்டடம் கட்டக்கூடாது என, அரசு தடை விதித்தது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.அரசு உத்தரவை எதிர்த்து, கோவர்த்தன நகரில் வீட்டு மனை வாங்கியவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கில் ஆஜரான தமிழக அரசின் அட்வகேட் ஜெனரல், தடையை முற்றிலும் நீக்காமல், சில விதிமுறைகளுடன் கட்டடங்கள் கட்ட அனுமதிக்கலாம் எனக் கருத்து தெரிவித்தார்.அதை ஏற்று, நகர் ஊரமைப்பு இயக்குனரகம் ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி கட்டடங்கள் கட்ட விதிக்கப்பட்டிருந்த தடையை தளர்த்தியுள்ளது.நினைவிடத்தைச் சுற்றி, ஏழு மீட்டர் உயரத்திற்கு குடியிருப்பு கட்டடம் கட்ட அனுமதி அளித்துள்ளது. வணிக கட்டடம், சிறிய தொழிற்சாலைகள் போன்றவை கட்ட தடை விதித்துள்ளது.ராஜிவ் நினைவிடத்தைச் சுற்றி, 300 மீட்டர் சுற்றளவிற்கு குடியிருப்பு கட்டடம் கட்ட அரசு அனுமதி அளித்துள்ளது, அப்பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை நகரில் விதிமுறையை மீறி கட்டிய கட்டிடங்கள் பட்டியல் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு

Print PDF

மாலை மலர்                             28.10.2010

சென்னை நகரில் விதிமுறையை மீறி கட்டிய கட்டிடங்கள் பட்டியல் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை நகரில் விதிமுறையை மீறி கட்டிய கட்டிடங்கள் பட்டியல் ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை, அக். 28- சென்னை சூளைமேட்டை சேர்ந்த சாலமன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தார்.

அதில் கூறி இருப்பதாவது:-

சூளைமேட்டில் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு உள்ளன. இதில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இந்த பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு உருவாகி இருக்கிறது.

விதிமுறை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து மாநகராட்சி மற்றும் பெருநகர வளர்ச்சி குழுமத்தில் புகார் கூறியும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அவர்கள் சென்னை நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் பட்டியலை நவம்பர் 12-ந்தேதிக்குள் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று மாநகராட்சி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கு உத்தரவிட்டனர்.

 


Page 39 of 96