Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

தமிழகம் முழுவதும் "ஆட்டோ டி.சி.ஆர்.' முறை விரைவில் அறிமுகம் : நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பன்சால்

Print PDF

தினமலர் 04.09.2010

தமிழகம் முழுவதும் "ஆட்டோ டி.சி.ஆர்.' முறை விரைவில் அறிமுகம் : நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் பன்சால்

கோவை : ""நகர ஊரமைப்புத்துறைக்கு வரும் விண்ணப்பங்களை "ஆன்லைன்' முறையில் விண்ணப்பிப்பதற்கான "ஆட்டோ டி.சி.ஆர்' முறை, தமிழகம் முழுவதும் விரைவில் அமல்படுத்தப்படும்,'' என்று நகர ஊரமைப்புத் துறை இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால் தெரிவித்தார்.

கோவையில் நிருபர்களுக்கு நேற்று அவர் அளித்த பேட்டி: கடந்த முறை கோவை உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டம் நடத்தியபோது, "அசாத்தியமான தாமதம்' என்ற புகார்களே அதிகம் வந்தன; விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அலுவலர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அந்த பிரச்னை ஏற்படுவதாக அறிந்து, கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் அலுவலர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

கோவை உள்ளூர் திட்டக் குழும அலுவலகத்தின் நடவடிக்கையில் எனக்கு பெரிய திருப்தியில்லை. இருப்பினும், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த விண்ணப்பங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது. நிலுவையில் இருந்த 628 விண்ணப்பங்களின் எண்ணிக்கை, இப்போது 350 ஆகக் குறைந்துள்ளது. உடனுக்குடன், விண்ணப்பங்களுக்குப் பதில் அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகருக்கான புதிய முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிக்கும் பணி, இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 3 மாதங்களில் அது வெளியிடப்படும். அதேபோல, கோவை உள்ளூர் திட்டக் குழுமத்துக்கு தனி இணையதளம் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது. தமிழக அரசின் இணையதளத்தில் (t.ஞ்ணிதி.டிண/ஞீtஞிணீ) என்ற முகவரியில் நகர ஊரமைப்புத்துறை தொடர்பான விபரங்களை அறியலாம்.

கடந்த 5 ஆண்டுகளில், தமிழகத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்ட லே-அவுட்கள், கட்டட அனுமதி, நகர ஊரமைப்புத் துறையிடம் பரிசீலனையில் உள்ள விண்ணப்பங்களின் விபரம் என எல்லாவற்றையும் அதில் தெரிந்து கொள்ளலாம். தமிழகத்தின் அனைத்து நகரங்களுக்குமான "மாஸ்டர் பிளான்' விபரங்களும் இன்னும் 15 நாட்களுக்குள் அதில் இடம் பெற ஏற்பாடு நடந்து வருகிறது.

கோவை மாநகராட்சியில் இருப்பது போல, நகர ஊரமைப்புத்துறைக்கு வரும் விண்ணப்பங்களை "ஆன்லைன்' முறையில் விண்ணப்பிப்பதற்கான "ஆட்டோ டி.சி.ஆர்.' முறையை தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கான முயற்சி எடுத்து வருகிறோம். இதற்கான "சாப்ட்வேர்' தயாரிக்கும் பணி, முழு வீச்சில் நடந்து வருகிறது; இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் இது நடைமுறைக்கு வரும்.

கோவை உள்ளிட்ட பெரிய நகரங்களில் பொது ஒதுக்கீட்டு இடங்களை வேறு உபயோகத்துக்குப் பயன் படுத்துவதாகவும், திட்டச்சாலைகளின் அகலங்களைக் குறைப்பதாகவும் நிறைய புகார்கள்வருகின்றன. பொது ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதிலோ, திட்டச்சாலைகளின் அகலத்தைக் குறைப்பதிலோ நகர ஊரமைப்புத்துறைக்கு சிறிதும் உடன்பாடு கிடையாது; அதற்கு நாங்கள் ஆதரவளிப்பதும் இல்லை.

திட்டச்சாலைகளுக்கான இடங்களை நிலம் கையகப்படுத்த, சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகளிடம் நிதி இல்லை என்றால், நிலம் கையகப்படுத்த நிதி வழங்கவும் நகர ஊரமைப்புத் துறை தயாராகவுள்ளது. இதுவரை, தமிழகம் முழுவதும் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிக் கட்டணமாக 700 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில், நகரங்களில் ரோடு மற்றும் பாலம் மேம்பாட்டுக்காக 309 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவையில் கல்வி நிறுவனங்கள் அனுமதியின்றி கட்டடம் கட்டுவதாக புகார்கள் வருகின்றன. இத்தகைய கல்வி நிறுவனங்களின் கட்டடங்களை ஆய்வு செய்யவும், அனுமதி பெற்ற கட்டடங்களில் கட்டமைப்புக் கட்டணம் வசூலிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, பன்சால் தெரிவித்தார்.

பேட்டியின்போது, கோவை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் (பொறுப்பு) நாகராஜ் உடனிருந்தார்.

குறைக்கு குறைவேயில்லை : நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் ஒவ்வொரு முறை கோவைக்கு வரும்போதும், குறை கூற வரும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. நேற்று பெரும்பாலானவர்கள், தங்கள் விண்ணப்பத்துக்கு பதில் தெரியாமல் மாதக்கணக்கில் அலைவதாகப் புகார் தெரிவித்தனர். ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர், லே-அவுட் அனுமதிக்காக 8 மாதங்களாக அலைவதாகவும், அலுவலகத்தில் தங்களை பிச்சைக்காரர் போல நடத்துவதாகவும் கண்ணீர் விட்டு புகார் தெரிவித்தார். அதைக் கேட்ட பன்சால், அவருடைய விண்ணப்பத்தை எடுத்து வரச்சொல்லி, விரிவாக விசாரித்ததோடு, அதற்கு உடனே பதில்கொடுக்கவும், தாமதத்துக்குக் காரணமான அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

 

கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

Print PDF

தினமணி 04.09.2010

கட்டட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகாரம்

விழுப்புரம், செப். 3: சென்னை பெருநகரம் நீங்கலாக ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4,000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆர்.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உள்ளூர் திட்டக் குழுமம், புதுநகர் வளர்ச்சிக் குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 49-ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும், அனைத்து விதிகளுக்கு உள்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

இதில் 4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள், 2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடம் மேற்படி கட்டடங்களுக்கு மனை ஒப்புதல்.

அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது.

மேற்படி அதிகார வரம்பு மற்றும் பரப்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்படின் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருப்பினும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது.

அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்துக்கு, மண்டல துணை இயக்குநர் அலுவலகத்துக்கு சமர்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

 

நீர்வழித் தடங்கள் சீரமைப்பு பணி முடிந்தால் வெள்ளப்பெருக்கு இருக்காது

Print PDF

தினமலர் 02.09.2010

நீர்வழித் தடங்கள் சீரமைப்பு பணி முடிந்தால் வெள்ளப்பெருக்கு இருக்காது

சென்னை:""நகரில் வெள்ளப்பெருக்கை தடுக்க நீர்வழித் தடங்கள் சீரமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்,'' என, மேயர் சுப்ரமணியன் கூறினார்.நுங்கம்பாக்கம் கால்வாய் நான்கு கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி நடக்கிறது. அந்த பணியை மேயர் சுப்ரமணியன் நேற்று காலை ஆய்வு செய்த போது கூறியதாவது:

மழைக் காலங்களில் நகரில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்கும் வகையில், மத்திய அரசின் ஜவகர்லால் நேரு நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 1,448 கோடி ரூபாய் மதிப்பில், நீர்வழித் தடங்களை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. நகரில் கூவம், பக்கிங்காம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் போல், 22 நீர்வழித் தடங்கள் தூர்வாரி ஆழப்படுத்தி, அகலப்படுத்தி, கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதுபோல் நுங்கம்பாக்கம் கால்வாய் ஆயிரம் விளக்கு பகுதியில், 900 மீட்டர் நீளம், 9 மீட்டர் அகலத்திற்கு அகலப்படுத்தி, ஆழப்படுத்தி கான்கிரீட் சுவர்கள் அமைக்கும் பணி நான்கு கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பில் நடக்கிறது.நீர்வழித் தடங்களில் எட்டு அடி உயரத்திற்கு கான்கிரீட் சுவர்கள் அமைத்து, அதன் மீது நான்கு அடி உயரத்திற்கு கம்பி வேலி அமைக்கப்படும். இதனால், பொதுமக்கள் நீர்வழித் தடங்களில் குப்பை போடுவது தடுக்கப்படுவதுடன், மழைநீர் தேங்காமல் எளிதில் வடியும் வகையில் சீரமைக்கப் படுகிறது.

22 நீர்வழித் தடங்களிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்புப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும். இந்த பணிகள் முடிவடைந்தால் மழைக் காலங்களில் நகரில் வெள்ளப்பெருக்கு இருக்காது.இவ்வாறு மேயர் கூறினார்.மேயருடன் மழைநீர் வடிகால்வாய் துறை கண்காணிப்பு பொறியாளர் மதியழகன் மற்றும் கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

 


Page 49 of 96