Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில் எல்லாமே காசுதான்! அதிகரிக்கும் அத்து மீறல் கட்டடங்கள்

Print PDF

தினமலர் 19.08.2010

கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில் எல்லாமே காசுதான்! அதிகரிக்கும் அத்து மீறல் கட்டடங்கள்

கோவை : கோவை உள்ளூர் திட்டக் குழுமத்தில், லஞ்சமும், முறைகேடும் அதிகரித்துள்ளது. கட்டடங்கள் கட்டுவதிலும் விதி மீறல்கள் அதிகரித்து வருகின்றன.

கோவை மாநகராட்சி மற்றும் சுற்றுப்பகுதிகளை உள்ளடக்கிய கோவை உள்ளூர் திட்டக் குழுமம் (எல்.பி..),ஐந்து ஏக்கருக்குட்பட்ட மனைப்பிரிவுகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் அதிகாரத்துக்கு உட்படாத பெரிய கட்டடங்களுக்கும் அனுமதி வழங்குகிறது. புதிய முழுமைத் திட்டம் (மாஸ்டர் பிளான்) தயாரிப்பது, அனுமதியற்ற மற்றும் விதி மீறிய கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுப்பது, திட்டச்சாலைகள் அமைப்பது என இந்த குழுமத்துக்கு கடமைகள் உண்டு. போதிய அளவில் தொழில் நுட்பப் பணியாளர்களோ, கூடுதல் அலுவலர்களோ இல்லாததால், கடமைகளை சரியாக செய்வதில்லை.

இதனால், அனுமதியற்ற மனைப்பிரிவுகள், கட்டடங்கள் மீதான நடவடிக்கை எடுப்பது போன்றவை அபூர்வமாகி விட்டது. கட்டட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்களை, காரணங்கள் கூறித் தட்டிக் கழிப்பது வாடிக்கையாகி விட்டது. குழுமத்தின் தலைவராக இருப்பவர், மாவட்ட கலெக்டர். பொறுப்பிலுள்ள கலெக்டரின் நடவடிக்கைகளைப் பொறுத்தே, குழுமத்தின் செயல்பாடுகளும் அமையும். முறைகேடுகள் நடப்பது, கலெக்டரின் அணுகுமுறைகளைச் சார்ந்ததாகவே இருக்கும்.

கோவை மாவட்டத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்டுமானத் தொழிலும், ரியல் எஸ்டேட் தொழிலும் நல்ல நிலையில் உள்ளதால், குழுமத்துக்கு வரும் விண்ணப்பங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளன. அடுக்கு மாடிக் குடியிருப்புகள், புதிய லே-அவுட்கள் அதிகரித்துள்ளன. செம்மொழி மாநாடு பரபரப்பு முடிந்த பின்னும், மாவட்ட நிர்வாகத்தின் கவனம் வேறு எந்தப் பக்கமும் திரும்பியதாகத் தெரியவில்லை. உள்ளூர் திட்டக் குழும நிதியைப் பயன் படுத்தி மூன்று இணைப்புச் சாலைகள் அமைத்ததைத் தவிர, வேறு எந்த உருப்படியான வேலையும் ஓராண்டில் நடக்கவில்லை. உள்ளூர் திட்டக் குழுமத்தில் லஞ்சமும், ஊழலும் உச்சக்கட்டத்தில் இருப்பதாக கட்டுமான நிறுவனங்களைச் சேர்ந்தோர் புகார் கூறி வருகின்றனர்.

மாவட்ட நிர்வாகத்தின் தீவிரமான கண்காணிப்பு இல்லாததால், கோவை நகரில் பல இடங்களில் "பார்க்கிங்' வசதி, அணுகுசாலை எதுவுமே ஏல்லாமல் ஏராளமான வணிக கட்டடங்கள், கல்வி நிலைய கட்டடங்கள கட்டப்படுகின்றன. பெரும்பாலானவை விதிகளை மீறியவை; பல கட்டடங்கள் அனுமதியற்றவை. கோவை கிராஸ்கட் ரோட்டில் சமீபத்தில் கட்டப்பட்ட, கட்டப்பட்டு வரும் கட்டடம் எதுவுமே முறைப்படி அனுமதி பெறவே இல்லை. சில கட்டடங்கள், பெற்ற அனுமதிக்கும் மேல் கட்டடங்களைக் கட்டியுள்ளன. அதே சாலையிலுள்ள ஜவுளிக்கடை கட்டடம் ஒன்று, கட்டுமான விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளது.

உத்தேச திட்டச்சாலைகளுக்குரிய இடங்களை விற்கவும் குழுமம், நகர ஊரமைப்புத்துறைக்குப் பரிந்துரைப்பதும் அதிகரித்துள்ளது. நகர வளர்ச்சிக்கேற்ப இணைப்புச்சாலைகள் அமைக்கும் வாய்ப்பு கை நழுவி, எதிர்காலத்தில் பெரும் பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகிறது. செம்மொழி மாநாட்டுப் பணிகளில் தீவிர கவனம் செலுத்திய கலெக்டர் உமாநாத், இத்தகைய பிரச்னைகளின் மீதும் கவனத்தைத் திருப்பி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொழில் துறையினரின் எதிர்பார்ப்பு.

இடத்தை மாத்தணும் : கோவை எல்.பி.., அலுவலகத்தில் முன்பெல்லாம், இலை மறை காய் மறையாக லஞ்சம் வாங்குவதும், பேரமும் நடந்து கொண்டிருந்தது. இப்போது, அலுவலகத்திலேயே பகிரங்கமாக பேரம் பேசுவதும், இடைத்தரகர்களே "பைல்'களை கையில் எடுத்துக் கொண்டு செல்லும் அளவுக்கு முன்னேறியுள்ளது.கலெக்டரின் நேரடி கண்காணிப்பு இல்லாததே காரணமாகக் கூறப்படுகிறது. கலெக்டரின் நேரடி பார்வையில் இருக்கும் வகையில், இந்த அலுவலகத்தை, கோவை கலெக்டர் அலுவலக வளாகத்துக்கே மாற்ற வேண்டும் என, கட்டுமானத் தொழிலில் இருப்போர் கருதுகின்றனர்.

Last Updated on Thursday, 19 August 2010 08:39
 

நகராட்சி அனுமதியின்றி உருவாகும் அடுக்குமாடிக்​ கட்டடங்கள்!

Print PDF

தினமணி 18.08.2010

நகராட்சி அனுமதியின்றி உருவாகும் அடுக்குமாடிக்​ கட்டடங்கள்!

அரக்கோணம்,​​ ஆக 17: அரக்கோணம் நகரில் நகராட்சி அனுமதியின்றி பல இடங்களில் 4 அடுக்குமாடி வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.​ இவற்றால் நகரில் பல்வேறு பிரச்னைகள் எழத் தொடங்கியுள்ளன.

அரக்கோணம் நகரையொட்டி ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமானதளம் உருவானபோது,​​ நகராட்சி எல்லைக்குள்ளும்,​​ பெருமூச்சு ஊராட்சி பகுதியிலும் 2 அடுக்குமாடிகளுக்கு மேல் கட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டது.

மூன்று அடுக்கு அல்லது அதற்கு மேல் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்ட முனைவோர் அதற்கான அனுமதியை ஐ.என்.எஸ்.​ ராஜாளி கடற்படை விமானதள செயல் அலுவலருக்கு விண்ணப்பித்து பெற வேண்டும்.

அதன் பின்னரே அவர்களது விண்ணப்பத்தை உள்ளுர் நகரமைப்பு குழுமம் மற்றும் நகராட்சி நகரமைப்பு அலுவலர் பரிசீலிப்பார் என உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில் நகரில் மக்கள் நெரிசல் அதிகமுள்ள காந்தி சாலையில் பழனிப்பேட்டை,​​ ​ பஜார்,​​ பழைய பஸ் நிலையப் பகுதிகள்,​​ சுவால்பேட்டை ஆகிய இடங்களில் 4 அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.​

வணிக வளாகங்களாக இக்கட்டடங்கள் உருவாகும் சூழலில்,​​ இவற்றுக்கு வருவோர் தங்களின் வாகனங்களை நிறுத்த தேவையான இடம் இல்லை என்று புகார் கூறப்படுகிறது.​ இதனால் சாலையோரத்தில் வாகனங்கள் பெருமளவில் நிறுத்தப்பட்டு அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இக்கட்டடங்களில் இருந்து அவசர காலத்தில் வெளியேறுவதற்கான மாற்றுவழி இல்லை.​ இதனால் முக்கிய விழாக் காலங்களில் வணிக வளாகங்களுக்கு நுகர்வோர் பெரும் எண்ணிக்கையில் வரும்போது,​​ அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் அவசரமாக வெளியேறுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன.

மேலும்,​​ நகரில் குடியிருப்புகள் அமைந்துள்ள இடங்களில் உணவகம்,​​ திருமண மண்டபங்கள் அமையத் தொடங்கியுள்ளதால்,​​ சுற்றுப்புறங்களில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அரக்கோணம் நகராட்சி நகரமைப்பு அதிகாரி தயாநிதி கூறியது:

நகரில் பல இடங்களில் அனுமதி பெறாத வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருவதை அடுத்து வளாக உரிமையாளர்களுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.​ இந்த விதிமீறல்களை கண்காணிக்கும் பொறுப்பு மட்டுமே எங்களுக்கு உள்ளது.

அனுமதி தருவது அல்லது நடவடிக்கை எடுப்பது போன்ற பொறுப்புகள் வேலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அலுவலகத்தைச் சார்ந்தது என்றார்.

அரக்கோணம் ஐஎன்எஸ் ராஜாளி விமானதள நிர்வாகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியது:

அரக்கோணம் நகரில் இரண்டடுக்கு மாடிக்கு மேல் எந்தக் கட்டடத்துக்கும் ஐஎன்எஸ் ராஜாளி விமானதள நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.​ ஐன்எஸ் ராஜாளி நிர்வாகத்துக்கு 2 அடுக்குமாடிகளுக்கு மேல் கட்டப்படும் கட்டடங்களுக்கான அனுமதி விண்ணப்பம் எதுவும் வரவில்லை.​

அப்படி ஏதேனும் வந்தாலும் அவை உடனடியாக ஆந்திர மாநிலம்,​​ விசாகபட்டினத்தில் உள்ள ​ கடற்படை கிழக்கு பிராந்திய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்த பிறகே அனுமதி குறித்த பரிசீலனை செய்யப்படுவதும் நடைமுறையில் உள்ளது.

அடுக்குமாடிக் கட்டடங்கள் குறித்த ஆய்வை ஐஎன்எஸ் ராஜாளியின் ஏவியேஷன் துறையினர் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கொள்வது வழக்கம்.​ கடந்த இரு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடைபெறவில்லை.​ விரைவில் இந்த ஆய்வு நடைபெறும் என்றார் அவர்.

 

வாலாஜாபாத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

Print PDF

தினகரன் 18.08.2010

வாலாஜாபாத்தில் மழைநீர் கால்வாய் அமைக்க கோரிக்கை

வாலாஜாபாத், ஆக.18: கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் மழைநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

வாலாஜாபாத் பேரூராட்சி 1வது வார்டில் கங்கை விநாயகர் கோயில் பின் தெரு உள்ளது. இது முட்டுச்சந்து. இங்கு, சில குடிசைகள் உள்ளன. சில மாதங்களுக்கு முன்பு பேரூராட்சி பகுதியில் உள்ள சாலைகள் தார்ச்சாலைகளாக மாற்றப்பட்டன. ஆனால், கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் சாலை அமைக்கவில்லை. வலம்புரி விநாயகர் கோயில் தெரு மக்கள் இந்த சாலை வழியாகதான் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் குளம்போல் தண்ணீர் தேங்கியுள்ளது. குடிசைகளுக்குள் வெள்ளம் புகுந்து விட்டது. வலம்புரி விநாயகர் கோயில் தெருவில் இருந்து வரும் மழைநீரும் கங்கை விநாயகர் கோயில் தெருவில்தான் தேங்குகிறது. இதனால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். 2 மாதங்களுக்கு முன் நடந்த பேரூராட்சி கூட்டத்தில் சிமென்ட் சாலை அமைப்பது பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, பேரூராட்சி நிர்வாகம் கங்கை விநாயகர் கோயில் பின் தெருவில் சிமென்ட் சாலை மற்றும் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


Page 54 of 96