Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கு நிம்மதி மனை, தள அளவு உயர்கிறது அமைச்சரவை பரிந்துரை

Print PDF

தினகரன் 10.08.2010

அங்கீகாரமற்ற குடியிருப்புகளுக்கு நிம்மதி மனை, தள அளவு உயர்கிறது அமைச்சரவை பரிந்துரை

புதுடெல்லி, ஆக. 10: அங்கீகாரமற்ற குடியிருப்பு பகுதிகளுக்கு விமோசனம் அளிக்கும் வகையில், மனை, தள அளவை உயர்த்தி மத்திய அரசுக்கு மாநில அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது.

மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதியமைச்சர் ஏ.கே.வாலியா கூறியதாவது:

டெல்லியில் 1,639 குடியிருப்புகள் அங்கீகாரம் இல்லாமல் உள்ளன. இதற்கு முக்கிய காரணம், இவற்றின் மனை மற்றும் தள அளவு மாறுபாடுகள்தான். இதனால் அங்கீகார சான்றிதழ் பெற முடியாமல் இருக்கின்றன. இவற்றுக்கு விமோசனம் அளிக்கும் வகையில், நேற்றைய அமைச்சரவையில் மனை, தள அளவை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன்படி, இப்போது 175 சதுர மீட்டர் மனையில், தள அளவு விகிதம் 250 ஆக இருப்பதை, 250 சதுர மீட்டர் மனையில் 350 முதல் 400 தள அளவாக உயர்த்த அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் நான்கு மாடிகள் வரை கட்டிக் கொள்ளலாம் என்றாலும், உயரம் 15 மீட்டர் என்ற அளவு தொடர்ந்து நீடிக்கும். 2007ம் ஆண்டுக்குள் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும்.

இதன் மூலம் லட்சக்கணக்கான வீட்டு உரிமையாளர்கள், அங்கீகாரம் இல்லாத தங்களது வீடுகளுக்கு அங்கீகாரம் பெற முடியும். மேலும், கட்டிடங்கள் இடிபடும் அபாயம் இல்லாமல் போகும்.

மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் பி.ஆர்.டி. காரிடர் பகுதிகளில் கட்டப்பட் டுள்ள ஏராளமான குடியிருப்புகளுக்கு விமோசனம் கிடைக்கும்.

இந்த பரிந்துரை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. மத்திய அரசின் அனுமதிக்கு பின்னர் அது அரசாணையாக வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Last Updated on Tuesday, 10 August 2010 06:33
 

நிலத்தை பயன்படுத்துவது பற்றி பெருநகர வளர்ச்சிக் குழு எடுக்கும் முடிவே இறுதி

Print PDF

தினகரன் 09.08.2010

நிலத்தை பயன்படுத்துவது பற்றி பெருநகர வளர்ச்சிக் குழு எடுக்கும் முடிவே இறுதி

புதுடெல்லி, ஆக.9: தெற்கு டெல்லி ஒல்கா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புக்கள் கட்டுவதற்காக 14.3 ஹெக்டேர் நிலம், தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியை டெல்லி பெரு நகர வளர்ச்சிக் குழுமம் ஏற்கனவே வழங்கி விட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து சுற்றுச் சூழல் மற்றும் வன இலாகா, மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியவற்றின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 14.3 ஹெக்டேர் நிலம், சுற்றுச் சூழல், வன இலாகா , மாசு கட்டுப்பாடு வாரிய எல்லைக்குள் வருகிறது. எனவே அங்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதிக்கக் கூடாதுஎன்று கூறப்பட்டு இருந்தது.

அந்த மனு, நீதிபதி பி.டி. அகமது தலைமையிலான பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி அகமது அளித்த தீர்ப்பு வருமாறு:

டெல்லி நகரில் உள்ள நிலப்பகுதிகளில் கட்டிடம் கட்டுவதற்கான மாஸ்டர் பிளானையும் மண்டல பிளானையும் பெரு நகர வளர்ச்சிக் குழுமம் தான் தயாரிக்கிறது. அந்த திட்டங்களை அமல் நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் முழு அதிகாரமும் பெரு நகர வளர்ச்சிக் குழுமத்துக்கு மட்டுமே உண்டு.எனவே தெக்காண்ட் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு பெரு நகர வளர்ச்சிக் குழுமம் அளித்த அனுமதியை ரத்து செய்ய முடியாது. இவ்வாறு உத்தரவில் நீதிபதி பி.டி. அகமது கூறியுள்ளார்.

 

 

பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்கலாம்: ஆட்சியர்

Print PDF

தினமணி 05.08.2010

பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்கலாம்: ஆட்சியர்

பெரம்பலூர், ஆக. 4: விவசாயிகள் பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்கலாம் என்றார் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் எம். விஜயகுமார்.

பெரம்பலூர் அருகே வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையத்தில் மாவட்ட நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமை மற்றும் ஹேன்ஸ் ரோவர் வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், நீர்வடிப் பகுதி உறுப்பினர்களுக்கான பயிற்சி முகாம் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.

முகாமில், வேளாண்துறை மூலம் தயாரிக்கப்பட்ட நீர் வடிப் பகுதி மேம்பாட்டு முகமை திட்ட விளக்க கையேட்டை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியர் மேலும் பேசியது:

மழைநீர் மேட்டுப் பகுதியில் இருந்து தாழ்வானப் பகுதியை நோக்கி பல திசைகளுக்குச் சென்று ஒன்றிணைந்து, இறுதியாக ஓடை அல்லது கால்வாய் வழியாக ஏரி, ஆறுகளில் கலக்கும் நிலப்பரப்பை உள்ளடக்கிய பகுதிகள்தான் நீர் வடிப் பகுதிகளாகும்.

இந்தப் பகுதிகளில் மழை நீரைச் சேமித்து நீர்நிலை ஆதாரங்களை உருவாக்குவதும், குடிநீர், பாசன வசதிகளை ஏற்படுத்துவதும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் நோக்கமாகும்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 30 நீர் வடிப் பகுதிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, நீர் வடிப் பகுதி உறுப்பினர்களுக்கு பெரம்பலூரில் இரண்டு நாள்களும், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு நாளும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்தப் பயிற்சியில் வேளாண்மைத் துறை தொடர்பான சந்தேகங்களைக் கேட்டறிந்து தெளிவு பெறுவதோடு, தாங்கள் அறிந்த குறிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். பயிற்சியும், முயற்சியும் இருந்தால் வெற்றி பெறுவது எளிதாகும்.

விவசாயச் சாகுபடியின் போது, தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு அதிக மகசூல் பெற முடியாத நிலை ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க விவசாயிகள் அனைவரும் தங்களது வயல்களில் பண்ணைக் குட்டை அமைத்து மழை நீரைச் சேமிக்க வேண்டும்.

அனைத்து துறைகளிலும் பெரம்பலூர் மாவட்டம் முன்னேற்றமடைந்து வருகிறது. அதைப்போல, வேளாண்மைத் துறையிலும் முதன்மை மாவட்டமாக திகழ வேண்டும்.

விசுவக்குடி நீர்த்தேக்கத் திட்டத்துக்காக ரூ. 19 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் தொடங்கப்படவுள்ளது. இதேபோல, சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது என்றார் விஜயகுமார்.

இதில் வேளாண்மை இணை இயக்குநர் சிவக்குமார், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ராஜராஜசோழன், உதவி செயற் பொறியாளர் ராஜேந்திரன், ரோவர் வேளாண் அறிவியல் மைய ஒருங்கிணைப்பாளர் இரா. மாரிமுத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கி. கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 


Page 56 of 96