Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

கட்டட திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

Print PDF

தினகரன் 05.08.2010

கட்டட திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புக்கு கூடுதல் அதிகாரம் மாவட்ட ஆட்சியர் தகவல்

சேலம், ஆக.5: கட்டட திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் நான்கு குடியிருப்புகள் அல்லது 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, உள்ளூர் திட்டக்குழுமத்தின் கீழ் உள்ள அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்புச் சட்டம் 1971ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும் வழங்கப்படுகிறது. பின்வரும் விதிகளுக்கு உட்பட்டு 1.6.2010 முதல் மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அதன்படி, நான்கு குடியிருப்புகள் மற்றும் 4000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள், 2000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் வழங்கலாம்.

அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ அனுமதிக்கக் கூடாது.மேற்படி அதிகார வரம்பு மற்றும் பரப்பிற்குள் அனுமதி வழங்கப்பட்டு, அதே மனையில் கூடுதல் கட்டடம் கட்ட விண்ணப்பம் பெறப்படின், பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகார பரப்பிற்குள் இருந்தாலும் உள்ளாட்சியால் அனுமதி வழங்க இயலாது. அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் உள்ளூர் திட்டக்குழும அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

ஊட்டியில் கட்டட விஷயத்தில் "காளான்' போல உயரும் விதி மீறல்

Print PDF

தினமலர் 05.08.2010

ஊட்டியில் கட்டட விஷயத்தில் "காளான்' போல உயரும் விதி மீறல்

நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பு இல்லாத காரணத்தால், ஊட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில், விதிமுறைகளை மீறி பிரமாண்ட கட்டடம் கட்டுவது அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வரும், "கட்டடக் காடுகளை' கட்டுப்படுத்த, "மாஸ்டர் பிளான்' சட்டம் கொண்டு வரப்பட்டது. எனினும், விதிமுறை மீறி கட்டடம் கட்டுவது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான பொதுநல வழக்கு, சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. ஐகோர்ட் உத்தரவின் பேரில், மாநில அரசு நடவடிக்கை எடுக்கவுள்ள நிலையில், ஊட்டி அருகே கிராமப் பகுதிகளில் குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி, அடுக்கு மாடி, ரிசார்ட்ஸ், கல்வி நிறுவனங்களைக் கட்டுவது அதிகரித்து வருகிறது. இந்த செயல்கள், உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பல ஆளும் கட்சியினரை கோடீஸ்வரர்களாக உருவாக்கும் முக்கிய வியாபாரமாக மாறி வருகிறது. ஆளும் கட்சியைச் சேர்ந்த மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர், கட்டட ஒப்பந்ததாரர்களாகவும் மாறி உள்ளனர். இவர்களால், ஊட்டி அருகே பேரார், ஆடாசோலை, கொல்லிமலை, முத்தொரை பாலாடா, நடுவட்டம் உள்ளிட்ட பல பகுதிகளில், ஊராட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்ட வரன்முறைகளை மீறி, பிரமாண்ட கட்டடங்கள் உயர்ந்து வருகின்றன. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்ததா, மாநில அரசு அனுமதி கொடுத்ததா என்பது குறித்து கட்டட உரிமையாளர்கள் தெரிவிப்பதில்லை. குறிப்பிட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்டாலும் சரியான பதில் கிடைப்பதில்லை.

அரசு அதிகாரிகளையும், ஊராட்சி நிர்வாகிகளையும் பணம் படைத்தவர்கள் "கவனிப்பதே' முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த வரிசையில், தற்போது ஊட்டி அருகே தும்மனட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேரார் பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் கட்டப்பட்டு வரும் பிரமாண்ட கட்டடம் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதுகுறித்து மாநில முதல்வர், மாவட்ட கலெக்டருக்கு சமீபத்தில் பல புகார் மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. சிறிய குடியிருப்புக்கான அனுமதியின் பேரில் பெரிய நிறுவனம் அப்பகுதியில் கட்டப்பட்டு வருவதாகவும், இப்பகுதியில் கட்டடம் கட்ட புவியியல் துறை, மண்வளத்துறை மற்றும் வனத்துறையின் அனுமதி பெறப்படவில்லை எனவும் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து இப்பகுதி ஊராட்சித் தலைவர் விஸ்வநாதன் கூறியதாவது: ஊராட்சி பகுதிகளில் கட்டடம் கட்ட 1,300 சதுர அடிக்குள் இருந்தால் அனுமதி கொடுக்கலாம் என்பதன் அடிப்படையில், இந்த பகுதியில் தனியார் கல்லூரி கட்ட ஊராட்சியிடம் அனுமதி வாங்கப்பட்டுள்ளது. 139 சதுர அடியில், நூலகம் உட்பட பல்வேறு வகுப்பறை கட்ட தனித்தனியாக அனுமதி பெறப்பட்டுள்ளது. ஏழு மீட்டர் உயரத்துக்குள் கட்டடம் எழுப்ப உள்ளதாகவும் அனுமதி பெறப்பட்டுள்ளது. முதல் தளம் கட்டும் போது ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அடுத்த கட்ட ஆய்வுப்பணிகளை மேற்கொண்டால் கொடுக்கப்பட்ட அனுமதியை மீறி, விதிமுறை மீறி அந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிய வரும். விரைவில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு விஸ்வநாதன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி நிர்வாகங்களின் நடவடிக்கை குறித்து, ஐகோர்ட் நீதிபதிகள் சமீபத்தில் அதிருப்தி தெரிவித்தும் கூட, விதிமுறைகளை மீறி கட்டப்படும் கட்டடங்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. இதற்கு, நீலகிரி மாவட்ட நிர்வாகம் போதியளவில் கண்காணிப்புகளை மேற்கொள்ளவில்லை என்பதே முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. புகார்களின் அடிப்படையில், கட்டட ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகள், கண் துடைப்பு நடவடிக்கைகளை மட்டும் எடுத்து, கட்டட உரிமையாளர்களுக்கு சாதகமான அறிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு சமர்ப்பித்து வருவதும், இத்தகைய கட்டடங்கள் உயர்வதற்கு காரணிகளாக அமைந்து வருகிறது. துணை முதல்வர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மலை மாவட்டத்தின் தற்போதைய அழகையாவது பாதுகாக்க முடியும் என்பதே உள்ளூர் மக்களின் கருத்து.

 

விதி மீறி கட்டடங்கள் கட்டினால் கிரிமினல் நடவடிக்கை : தமிழக அரசுக்கு பரிந்துரை

Print PDF

தினமலர் 04.08.2010

விதி மீறி கட்டடங்கள் கட்டினால் கிரிமினல் நடவடிக்கை : தமிழக அரசுக்கு பரிந்துரை

சென்னை : "அனுமதி பெறாமல் மற்றும் விதி மீறி கட்டடங்கள் கட்டினால், அவை "சீல்' வைக்கப்படுவதோடு, உரிய நபர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கலாம்' என்று நீதிபதி மோகன் கமிட்டி தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. சென்னையைப் போன்றே, 33 நகரங்களில் கட்டட அனுமதி பெறுவதையும் வரன்முறைப்படுத்தியுள்ளது.

சென்னையைப் போன்றே பிற நகரங்களில் வணிக மற்றும் சிறப்புக் கட்டடங்கள் கட்டுவதற்கு, தமிழகம் முழுவதிலும் இருந்து சி.எம்.டி..,விற்கு ஏராளமான விண்ணப்பங்கள் வருவதால் கால விரயம் ஏற்படுகிறது. கடந்த 1971ல் சி.எம்.டி.., தமிழ்நாடு நகர ஊரமைப்பு இயக்குனரகம்(டி.டி.சி.பி.,) மூலம் கட்டடங்கள் கட்டுவதற்கு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. கடந்த 1985ம் ஆண்டுக்கு பிறகு பெருகிவிட்ட மக்கள் தொகை, குடியிருப்புக்கான தேவை போன்ற காரணங்களால் அனுமதி பெற்று விதி மீறுவது மற்றும் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டிக் கொள்வது என்று அத்துமீறல் மிதமிஞ்சியது.

"சி.எம்.டி.ஏ., விற்கு உரிய தொகை செலுத்தி விதிமீறலை வரன்முறைப்படுத்திக் கொள்ளலாம்' எனும் நோக்கில், கடந்த 2007, ஜூலை 27ம் தேதி, தமிழக அரசு ஒரு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து ஐகோர்ட்டிற்கு செல்லவே, "விதி மீறிய கட்டடங்களை இடித்துத் தள்ள வேண்டும்' என்று ஐகோர்ட் உத்தரவிட்டது. இதுகுறித்த அப்பீல், சுப்ரீம் கோர்ட்டிற்கு போனது; ஐகோர்ட் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டடங்களை இடிக்க, நடைமுறை சிக்கல் எழுந்துள்ளதால், இந்த தடையை ஆண்டுதோறும் தமிழக அரசு அவசர சட்டம் மூலம் நீட்டித்து வருகிறது. தொடர்ந்து, கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது. இதுகுறித்த அறிக்கையை சமீபத்தில் தமிழக அரசிடம் நீதிபதி மோகன் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து நீதிபதி மோகன் கூறியதாவது: கடந்த 1971ல் கொண்டு வரப்பட்ட விதிமுறைகள் தற்காலத்திற்கு பொருந்தவில்லை; பல்வேறு குறைபாடுகள் உள்ளன. இவற்றை திருத்தியமைத்து, இன்றைய சூழலுக்கு தக்கவாறு மாற்றியமைக்க வேண்டும் என்பதற்காக இந்தக் கமிட்டி நியமிக்கப்பட்டது. விதி மீறி கட்டடங்களைக் கட்டுவது அதிகரித்துள்ளன. அனுமதியின்றி பல மாடிக் கட்டடங்கள் கட்டப்படுகின்றன. விதி மீறுபவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினால், கோர்ட்டிற்கு சென்று விடுகின்றனர். இவற்றை வரன்முறைப்படுத்துவது அவசியம். அந்தக் கட்டடங்களுக்கு உடனடியாக "சீல்' வைக்க வேண்டும். அங்குள்ள கட்டுமானப் பொருட்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யலாம். இவற்றை திரும்பக் கோர முடியாது. சமீபகாலமாக, "சீல்' வைக்கும் நடைமுறை உள்ளது. மேலும், இந்த விதி மீறல் தொடராமல் இருக்க, சம்பந்தப்பட்ட இட உரிமையாளர் அல்லது பில்டர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க, இந்தக் கமிட்டி பரிந்துரைத்துள்ளது. விதிமுறை மீறிய கட்டடத்தை இடித்துத் தள்ளவும் சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்கான செலவுகளை, விதி மீறியோர் கோர முடியாது.

சென்னை தவிர பிற நகரங்களில் கட்டடம் கட்டுவோர் சென்னை வந்து அனுமதி பெற வேண்டும். சென்னையைப் போன்றே 33 நகரங்களில் இனி அனுமதியைப் பெறலாம். அந்தந்த நகரங்களிலேயே அதிகாரிகளை நியமித்து, திட்ட அனுமதியை பெற்றுக் கொள்ளலாம். ஆர்.டி.., அல்லது கலெக்டர் மற்றும் சி.எம்.டி.., அதிகாரி என அனுமதி தரும் அதிகாரிகளை நியமிக்கலாம். சாலை வசதி, நகர அபிவிருத்தி போன்ற நடவடிக்கைகளின் போது தனிநபர்களுக்கு சொந்தமான இடத்தை அரசு கைப்பற்றலாம். நகர அபிவிருத்தியின் போது, அந்த தனிநபர்களுக்கும் சேர்த்து, அபிவிருத்தி செய்துவிட்டு, அதற்கான செலவை அவர்களிடம் பெறலாம். இவ்வாறு நீதிபதி மோகன் தெரிவித்தார்.

கட்டடங்களை இடிப்பதற்கான தடையை ஓராண்டுக்கு நீட்டித்து, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. நீதிபதி மோகன் கமிட்டியின் பரிந்துரை தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. அதிகமான விதிமுறைகள் உள்ள தி.நகர், தங்க சாலை, கீழ்ப்பாக்கம் போன்ற பகுதிகள் உட்பட கட்டடங்களை இடிப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. தமிழக அரசு, நீதிபதி மோகன் கமிட்டியிடம் பெற்ற பரிந்துரைகளில் அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது.

வழிகாட்டுது டில்லி: கட்டடங்களை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக டில்லியில் நடந்த சம்பவத்தை, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு மத்தியில் வர்த்தக கட்டடம் உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குபடுத்துதலை டில்லியில் அமல்படுத்திய போது, கடும் விமர்சனம் எழுந்தது. பிரபல வணிக நிறுவனங்களின் அங்காடிகள் அப்புறப்படுத்தப்பட்டன. அப்போது, முதல்வர் ஷீலா தீட்சித் தலைமையிலான அரசு, அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரன்முறைப்படுத்தின. இரு பாலருக்கும் பாதிப்பு வராமல், நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதைப் பின்பற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. விதி மீறும் கட்டடங்கள் தப்புமா, தவிடுபொடியாகுமா என்பது விரைவில் தெரிய வரும்.

 


Page 57 of 96