Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

4 மணி நேரத்தில் மழைநீர் வடிய 1,400 கோடி ரூபாயில் மெகா திட்டம்

Print PDF

தினமலர் 26.07.2010

 4 மணி நேரத்தில் மழைநீர் வடிய 1,400 கோடி ரூபாயில் மெகா திட்டம்

சென்னை : சென்னைவாசிகளுக்கு பெரும் சவாலாக இருக்கும் மழை வெள்ள நீரை, நான்கு மணி நேரத்தில் வடிந்தோடி கடலில் கலக்கச் செய்ய, 1,400 கோடி ரூபாய் செலவில், மழைநீர் வடிகால், கால்வாய்கள் அமைக்கும் பணி, "ஜரூராக' நடந்து வருகிறது.சென்னையின் சராசரி மழையளவு 1,300 மில்லி மீட்டர். 60 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத நிலையாக, 2005ம் ஆண்டு 2,570 மி.மீ., மழை பெய்தது.இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்தது.பாதிப்புகளை சீர் செய்ய, நிவாரணம் வழங்க பல கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில், நிரந்தர தீர்வுக்கு திட்டமிடப்பட்டது.

சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் சிறிய மழைநீர் வடிகால் மற்றும் பொதுப்பணித் துறையின் பராமரிப்பின் கீழ் வரும் பெரிய வடிகால் மற்றும் நீர்வழித் தடங்களை ஒருங்கிணைத்து,சீரமைக்க முடிவு செய்யப்பட்டது.சென்னையில் உள்ள 12 வடிநிலங்களை வடக்கு, தெற்கு, கிழக்கு, மத்திய பகுதி என நான்காகப் பிரித்து 1,444.91 கோடி ரூபாயில் நான்கு திட்டங்கள் தயாரிக்கப்பட்டன. 2008 டிசம்பரில், உள்ளாட்சி துறை அமைச்சர் தலைமையில் நடந்த எட்டாவது மாநில வழிகாட்டி குழுக் கூட்டத்தில் இந்தத் திட்டம், மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் இந்தத் திட்டத்தை மத்திய ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டக் கமிஷனுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றது. பொதுப்பணித் துறைக்கு 633.03 மற்றும் மாநகராட்சிக்கு 814.88 கோடி ரூபாய் எனப் பகிர்ந்தளிக்கப்பட்டது.

மாநகராட்சி, தான் பெற்ற நிதியில் இருந்து மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை 70 சதவீதத்திற்கும் மேல் முடித்துள்ளது. கடந்த மே மாதம் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்த திட்டத்தை துவக்கி வைத்தார். 2012-13ம் நிதியாண்டுக்குள் இது நிறைவடையும். திட்டங்கள் குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் விஜயகுமார், மகேஸ்வரன், ஜெயபிரகாஷ் கூறியதாவது:சென்னைக்குள் தேங்கும் மழைநீரை வடிகால் மற்றும் கால்வாய்கள் வழியாக கடலுக்குள் கொண்டு செல்வது தான் திட்டத்தின் நோக்கம்.மழைக்குப் பின் ஒரு வாரமானாலும் மழைநீர் தேங்கி, இயல்பு வாழ்க்கையை பாதித்து வரும் நிலையில், சில மணி நேரத்திலேயே மழை நீரை கடலுக்குள் கொண்டு செல்ல முடியும்.சென்னையில் மிகப் பெரிய அளவில் மழைநீர் தேங்கும் பகுதியாக வேளச்சேரி உள்ளது. வேளச்சேரி, புழுதிவாக்கம், உள்ளகரம், மூவரசம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கும் மழைநீர், பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிக்கு கொண்டு சென்று, அங்கிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்குள் விடப்படும்.வீராங்கல் ஓடையை மேம்படுத்தி வெள்ளத் தடுப்புச் சுவர் அமைத்தல், வேளச்சேரி ஏரி உபரி நீரை பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்ப புதிய இணைப்புக் கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகள் நடந்து வருகின்றன.தெற்கு பக்கிங்காம் கால்வாயின் வெள்ள நீரை ஒக்கியம் மடுவில் இருந்து கடலுக்குத் திருப்ப, புதிதாக நேர்வெட்டுக் கால்வாய் அமைக்கப்படுகிறது. பக்கிங்காம் கால்வாயை 100 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.அம்பத்தூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீரை தொழிற்பேட்டை வழியாக கொரட்டூர் கால்வாய்க்கு கொண்டு செல்லுதல், கொளத்தூர் ஏரி உபரி நீரை வெளியேற்ற புதிய கால்வாய் அமைத்தல் ஆகிய பணிகளும் துவங்கியுள்ளன.விருகம்பாக்கம் - அரும்பாக்கம் கால்வாயில் இருந்து கூவம் ஆற்றிற்கு புதிய நேர்வெட்டுக் கால்வாய் அமைத்தல், கால்வாயை மேம்படுத்துதல் ஆகிய பணிகளும் நடந்து வருகின்றன.கோயம்பேடு நூறடி சாலை வழித் தடத்தில், நான்கு மீட்டர் அகலத்தில் 2.34 கிலோ மீட்டர் நீளத்தில் மழைநீர் கால்வாய் அமையும். இவை நிலத்தடியில் நீரைக் கடத்திச் செல்லும் வழித்தடமாக இருக்கும். 2013க்குப் பிறகு சென்னைக்குள் மழை நீர் தேங்கும் சூழ்நிலை இருக்காது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆக்கிரமிப்பும், நில ஆர்ஜிதமும் : சென்னை மற்றும் புறநகரை வெள்ள நீரில் இருந்து காப்பாற்றுவதில் கூவம் ஆறு, அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவை பெரும் பங்காற்றி வருகின்றன.நீர்வழித் தடங்களில் ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு, அவற்றை அப்புறப்படுத்தி மீண்டும் ஆக்கிரமிக்காமல் காப்பது அவசியம். இந்த புதிய திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்யவும், அதற்கான இழப்பீடு வழங்கவும் உள்ளனர். மின் வாரியத்திற்கு 11.40 கோடி ரூபாய் தரப்பட்டுள்ளது.அரும்பாடுபட்டு உருவாக்கும் இந்த திட்டம், மீண்டும் ஆக்கிரமிப்பின் பிடியில் போகாமல் இருக்க வேண்டும்.

Last Updated on Monday, 26 July 2010 05:57
 

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மாநகராட்சியின் 3 பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது

Print PDF

தினகரன்   22.07.2010

மெட்ரோ ரயில் திட்டத்துக்காக மாநகராட்சியின் 3 பூங்கா தற்காலிகமாக மூடப்படுகிறது

சென்னை, ஜூலை 22: மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தும் பகுதியில் உள்ள 3 பூங்காக்கள் தற்காலிமாக 3 ஆண்டுகளுக்கு மூடிவைக்கப்படவுள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரூ600 கோடி செலவில் மெட்ரோ ரயில் திட்டத்தை 3 பகுதியாக பிரித்து தமிழக அரசு நிறைவேற்றவுள்ளது. இந்த திட்டத்தின்படி வண்ணாரப்பேட்டை& விமான நிலையம் (வழி:அண்ணாசாலை) வரை ஒரு பகுதி, சென்ட்ரல்&பரங்கிமலை (வழி: ஈவெரா பெரியார் சாலை) வரை ஒரு பகுதி என இந்த இரண்டு பகுதியிலும் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் நிறைவேற்றப்படவுள்ளது.

இந்த 2 திட்டங்கள் நிறைவேற்றப்படும் இடத்தில் மே தின பூங்கா (சிந்தாதிரிப்பேட்டை), நேரு பூங்கா (கீழ்ப்பாக்கம்), திருவிக பூங்கா (அண்ணாநகர் கிழக்கு) உள்ளன. இந்த 3 பெரிய பூங்காக்களை மாநகராட்சி பராமரித்து வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்தி முடிக்கும் வரை இந்த 3 பூங்காக்களையும் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு வைத்துக்கொள்ள தமிழக அரசும் ஒப்புதல் அளித்துள் ளது.

இந்த 3 பூங்காக்களும் 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக மூடப்படும். மெட்ரோ ரயில் பணி முடிந்த பிறகு மாநகராட்சியிடம் அந்த பூங்காக்கள் திரும்ப ஒப்படைக்கப்படும்.

சுமார் 8.84 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள திருவிக பூங்கா, 2.54 ஏக்கரில் உள்ள நேரு பூங்காவை மெட்ரோ ரயில் நிறுவனமே மீண்டும் புதுப்பித்து மாநகராட்சியிடம் ஒப்படைக்கும். மேலும் இந்த இடங்களை பயன்படுத்தியதற்கான குத்தகை தொகையையும் மாநகராட்சிக்கு வழங்கும்.

அதுபோலவே, மே தின பூங்காவையும் மீண்டும் புதுப்பிப்பதற்கான தொகையை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கும்.

 

குர்கானில்41 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம்

Print PDF

தினகரன் 20.07.2010

குர்கானில்41 இடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டம்

புதுடெல்லி, ஜூலை 20: குடிநீர் பிரச்னையை சமாளிக்க மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்த குர்கான் மாநகராட்சி தீர்மானித்துள்ளது.

இதுபற்றி குர்கான் மாநகராட்சி கமிஷனர் ஆர்.கே. குல்லார் கூறியதாவது:

நிலத்தடி நீரை மட்டுமே குர்கான் மாநகராட்சி முழுக்க முழுக்க நம்பி இருக்கிறது. குர்கான் நகரில் நிலத்தடி நீர் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கிறது. ஆண்டுக்கு 6அடி ஆழம் நிலத்தடி நீர் குறைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

நிலத்தடி நீர் எடுக்க அனுமதிக்கப்பட்டதை விட தினமும் 3 மடங்கு அதிகமாக இப்போது நிலத்தடி நீரை பயன்படுத்துகிறோம். இந்த நிலை தொடர்ந்தால் நிலத்தடி நீர் குறைவது 10 அடியாக அதிகரிக்கும் அபாயம் வந்துள்ளது.

எனவே வரும் காலங்களில் குடிநீர் பிரச்னையை சமாளிக்க நகரம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குர்கானில் எந்த எந்த இடங்களில் மழை நீர் சேகரிப்பு மையம் அமைக்கலாம்? என்பதை கண்டறியவும், திட்டத்தை செயல்படுத்தவும் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லா இஸ்லாமியா என்ற தனியார் கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அந்த நிறுவனம் நகரில் உள்ள அனைத்து இடங்களையும் ஏற்கனவே பரிசீலித்து 41 இடங்களில் மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கலாம் என்று பரிந்துரைத்துள்ளது.

அதில் சிக்கந்தர் பூர் சவுக், இயற்பியல் பூங்கா, சுக்ராலி ஏரி, குர்கான் மாநகராட்சி, துணை கமிஷனர் அலுவலகம் உட்பட 8 இடங்களில் மழை நீர் சேகரிப்பு மைய கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன.

நகரில் பல தனியார் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் ஏற்கனவே மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் கீழ் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டியுள்ளனர்.

குர்கானில் உள்ள டிஎல்எப் சிட்டியில் மட்டும் 17 மழை நீர் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர பிரசாரம் மேற்கொள்ள ப்படும். இவ்வாறு குர்கான் மாநகராட்சி கமிஷனர் ஆர். கே. குல்லார் கூறினார்.

 


Page 62 of 96