Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

தெற்கு பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ரூ.39.95 கோடியில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்

Print PDF

தினமலர் 14.06.2010

தெற்கு பக்கிங்காம் கால்வாய் பகுதிகளில் ரூ.39.95 கோடியில் மழைநீர் கால்வாய் பணி துவக்கம்

தரமணி: தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளில் 39.95 கோடி ரூபாய் மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகளை மேயர் சுப்ரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.

மழைக்காலத்தில் தென்சென்னை பகுதியில் அடையாறு, தரமணி, வேளச்சேரி, விஜயநகர் உள்ளிட்ட பகுதிகள் மழைவெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்படும் பகுதிகள். இதற்கு தீர்வாக தெற்கு பக்கிங்காம் கெனாலில் இணைக்கும் வகையில் மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. அதன் பயனாக, சென்னை நகரில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் மெகா திட்டம் ஒன்றை சென்னை மாநகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் தீட்டப்பட்டு அதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதிகளில் மழைநீர் வடிகால்வாய் கட்டுமானப் பணிகள் நேற்று துவங்கியது.

மேயர் சுப்ரமணியன் நேற்று அப்பணிகளை துவக்கி வைத்து பேசியதாவது: மத்திய அரசின் ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தில் ரூ.1447.91 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரித்து ஒப்புதல் பெறப்பட்டது. இதன்படி சென்னை மாநகராட்சி ரூ.814.88 கோடியிலும், பொதுப்பணித்துறை ரூ.633 கோடியிலும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல்வர் கருணாநிதி கடந்த வாரம் பொதுப்பணித்துறைக்கான பணிகளை துவக்கி வைத்தார். தற்போது, சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில் ரூ.278.85 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தெற்கு பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில் 13 பிரதான கால்வாய்கள் 9.13 கி.மீ., நீளத்திற்கு ரூ.16.49 கோடியிலும், 45 உள்ளூட்டு கால்வாய்கள் 17.72 கி.மீ., நீளத்திற்கு ரூ.3.14 கோடியிலும் என சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.39.95 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் இன்று முதல் மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, பொதுப்பணித்துறை மூலம் தெற்கு பங்கிங்காம் கால்வாய் அகல மற்றும் ஆழப்படுத்தி அடையாறு முதல் ஒக்கியம் மடுவு வரை10.50 கி.மீ., நீளத்திற்கு ரூ.78.13 கோடி செலவிலும், வேளச்சேரி பஸ் நிலையம் முதல் தெற்கு பங்கிங்காம் கால்வாய் வரை 4.10 கி.மீ., நீளத்திற்கு இணைப்பு கால்வாய் ரூ.58.15 கோடியிலும் என பொதுப்பணித்துறை சார்பில் ரூ.236.90 கோடியில் பணிகள் மேற்கொள்ப்படுகின்றன. இந்த வகையில் சென்னை மாநகராட்சியும், பொதுப்பணித்துறையும் இணைந்து ரூ.276.85 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த மூன்றரை ஆண்டுகளில் 158 கி.மீ., நீளத்திற்கு புதிய மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக சமீபத்தில் 18 செ.மீ., மழை பெய்த போது தண்ணீர் தேங்கவில்லை. இவ்வாறு மேயர் சுப்ரமணியன் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் இணை கமிஷனர் (பணிகள்) ஆஷிஷ் சாட்டர்ஜி, துணை மேயர் சத்தியபாமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

சென்னையில் ரூ.100 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்

Print PDF

தினகரன் 11.06.2010

சென்னையில் ரூ.100 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள்

வேளச்சேரி, ஜூன் 11: சென்னை மாநகராட்சி சார்பில் ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் திட்டப் பணிகள் தொடக்க விழா தரமணி பஸ் நிலையம் அருகே நேற்று காலை நடந்தது. மாநகராட்சி இணை ஆணையர் ஆஷிஷ் சட்டர்ஜி தலைமை தாங்கினார். மழைநீர் வடிகால் வாரிய மேற்பார்வை பொறியாளர் மதியழகன் வரவேற்புரை ஆற்றினார். திட்டப் பணிகளை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

சென்னை மாநகராட்சி சார்பில் தரமணி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளில் சிமென்ட் சாலைகள் மற்றும் அடிப்படை வசதிகள் சிறப்பாக செய்து தரப்பட்டுள்ளது. மேலும் குடிசைகள் இல்லா நகர திட்டத்தின்கீழ் குடிசைகள் அகற்றப்பட்டு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் செலவில் கான்கிரீட் வீடுகள் கட்டப்பட உள்ளது. பயனாளிகள் ரூ.13 ஆயிரம் மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் வழங்க உள்ளது.

ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சிக்கு அதிக நிதியை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. இப்பகுதிகளில் தற்போது துவக்கப்பட உள்ள மழைநீர் வாரிய கால்வாய் பணி ரூ.39 கோடியே 95 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது. இதில் 13 பிரதான கால்வாய்கள் மற்றும் 45 உள்ளீட்டு கால்வாய்கள் 14 சேகரிப்பு கால்வாய்கள் உள்பட 30 கி.மீ. தொலைவுக்கு இந்தப் பணி நடக்க உள்ளது. இவ்வாறு மேயர் பேசினார்.

 

மனை ஒப்புதலுடன் கட்டட அனுமதி: உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு

Print PDF

தினமணி 11.06.2010

மனை ஒப்புதலுடன் கட்டட அனுமதி: உள்ளாட்சிகளுக்கு அதிகார பகிர்வு

திருநெல்வேலி, ஜூன் 10: ஜூன் 1ஆம் தேதி முதல் மனை ஒப்புதலுடன்கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் உள்ளாட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மு. ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

2010-2011ஆம் ஆண்டிக்கான மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகளில் சென்னை பெருநகர் பகுதி நீங்கலாக

தமிழகத்தின் ஏனைய பகுதிகளில் 4 குடியிருப்புகள் அல்லது 4000 சதுர அடிக்குள் கட்டப்படும் கட்டடங்களுக்கு திட்ட அனுமதி வழங்க உள்ளாட்சிகளுக்கு அதிகார ஒப்படைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்து உள்ளாட்சிகளுக்கும் நகர் ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 49ன் கீழ் திட்ட அனுமதியும், பிற முழுமைத் திட்டம் அறிவிக்கப்படாத பகுதிகளில் அமையும் உள்ளாட்சிகளில் தொழில்நுட்ப அனுமதியும் அனைத்து விதிகளுக்கு உள்பட்டு சம்பந்தப்பட்ட உள்ளாட்சிகள் ஜூன் 1-ம் தேதி முதல் மனை ஒப்புதலுடன்கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

அதாவது 4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்கள்.

2000 சதுர அடிக்குள் கட்டப்படும் வாகன நிறுத்துமிடத்துக்கான தரைதளம் மற்றும் முதல்தளம் கொண்ட வணிக கட்டடங்கள். இந்த கட்டடங்களுக்கு மனை ஒப்புதல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 68 of 96