Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

"விதிமீறிய கட்டடங்கள் மீது கரிசனம் கூடாது' குன்னூர் நுகர்வோர் சங்கம் "காட்டம்'

Print PDF

தினமலர்   21.05.2010

"விதிமீறிய கட்டடங்கள் மீது கரிசனம் கூடாது' குன்னூர் நுகர்வோர் சங்கம் "காட்டம்'

குன்னூர்: "நீலகிரியில் தொடர்ந்து விதிமீறிய கட்டடங்கள் கட்டப்படுவதை தவிர்க்க, விதிமீறிய கட்டடங்கள் மீது கோர்ட் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும்; மாஸ்டர் பிளான் சட்டம் குறித்த அரசின் நிலைபாட்டை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்' என, குன்னூர் நுகர்வோர் சங்கம் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவின் படி, நீலகிரியில் விதிமீறி, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் மீதான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் முடுக்கிவிட, விதிமீறி கட்டடம் கட்டியோர், வீதிக்கு வந்து போராடினர். அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகளும் குரல் கொடுக்க, அரசின் கவனம் மாவட்டத்தின் மீது திரும்பியது. இதற்கிடையில், கட்டட விவகாரம் தொடர்பாக குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில், அதன் செயலர் சபாபதி, காட்டமான கடிதத்தை துணை முதல்வருக்கு அனுப்பியுள்ளார்.

அதில் கூறியுள்ளதாவது: மலை மாவட்டத்தின் தனித்தன்மையை உணர்ந்து, தொலைநோக்குடன் செயல்பட்டதால் குடியிருப்புப் பகுதி, மேய்ச்சல் நிலம், நீராதாரம், சோலைக் காடுகள் என பிரித்து, எஞ்சியப் பகுதிகளில் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கி, அதற்குள்ளேயே தோட்ட தொழிலாளர்களுக்கான குடியிருப்புகளை அமைத்து, மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதுகாத்தனர் ஆங்கிலேயர்கள். சுதந்திரத்துக்கு பின் வந்த அரசுகள் தொலைநோக்கு பார்வை இல்லாமல், மாவட்டத்தின் தனித்தன்மையை உணராமல், மாவட்ட மக்களை வாக்கு வங்கியாகவே கருதி செயல்பட்டதால், கண்மூடித்தனமான குடியேற்றம், வணிக ரீதியிலான சுற்றுலா பெருகியது; மலை மாவட்டம் கான்கிரீட் காடுகளாக மாறின; நீராதாரம், வனங்கள் அழிக்கப்பட்டன.

இதை கருத்தில் கொண்டே 1993ல் மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டு வரப்பட்டது; சட்டத்தைப் பற்றி நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறின. சட்டத்தில், நடைமுறைக்கு ஒத்துவராத பல அம்சங்கள் இருப்பதாக கூறப்பட்டாலும், அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து கட்டடங்கள் கட்டப்பட்டன.

உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், சட்டத்தில் உள்ள கடுமையை சாதகமாக்கி, பெரும் தொகையை லஞ்சமாக வாங்கி, கட்டடம் கட்ட அனுமதியளித்தனர்; இதன் மூலம் அவர்கள் கோடீஸ்வரர்களாக மாறினர். கட்டட விவகாரத்தில் பேரம் பேசி செழித்தவர்கள், தற்போது கட்டட விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு விட்டதால், வேறு வழியின்றி மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர்.

நீலகிரியில் சோலைக் காடுகள், மலைக் குன்றுகள், நீராதாரங்கள், சரிவுகள் உள்ள இடங்கள் தவிர, குறிப்பிட்ட சில இடங்களே வீடு கட்ட உகந்தவை. தற்போதுள்ள ஏழு லட்சத்துக்கும் அதிகமான மக்களை தாங்கும் ஆற்றல் மலை மாவட்டத்துக்கு இல்லை; மேலும் கட்டடம் கட்ட அனுமதிப்பது, நீலகிரியின் அழிவுக்கு வித்திடும்.

வெறும் எச்சரிக்கை, அறிவுவரையால் மட்டும் வீதிமீறல்கள் தொடர்வதை தடுக்க முடியாது. மாறாக, விதிமீறிய கட்டடங்களுக்கு அனுமதியளித்த அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு நிலம், சாலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களை அகற்ற வேண்டும்.

விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது கோர்ட் வழிகாட்டுதல் படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மாஸ்டர் பிளான் சட்டம் குறித்த அரசின் நிலைபாட்டை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இவ்வாறு, சபாபதி கூறியுள்ளார்.

கேள்விக்கு என்ன பதில்? விளை நிலங்கள் வீட்டுமனைகளாக மாறுவது குறித்து, துணை முதல்வரிடம் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கேட்டுள்ள விளக்கம்; இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த பணக்காரர்கள், நீலகிரியில் உள்ள தேயிலைத் தோட்டம், விளை நிலங்களை லட்சக்கணக்கில் விலை கொடுத்து வாங்குகின்றனர். குறிப்பாக, நீராதாரம் உள்ள இடங்களை தேர்ந்தெடுத்து வாங்கும் அவர்கள், நவீன இயந்திரம் மூலம் மலையை குடைந்து சாலை அமைக்கின்றனர்; மலைகளின் உச்சியில் வீட்டு மனைகளை உருவாக்குகின்றனர்.

* இவ்வாறு அமைக்கப்பட்ட கட்டடங்கள் முறையான அனுமதி பெற்றவையா?
* நிலநடுக்க அபாயம் உள்ள நீலகிரியில், நவீன இயந்திரங்களை கொண்டு மலையை குடைந்து சாலை அமைக்க, கட்டடம் கட்ட புவியியல் துறை , மண்வளத் துறை, சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு துறை அனுமதிக்கின்றனவா?
* நீலகிரியில் அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவில், கட்டக்கூடாத இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் பாதிக்கப்படுவதும், அவற்றை சீரமைக்க மக்களின் வரிப்பணத்தை அரசு வாரி வழங்குவதும் ஏற்புடையதா?
* குறிப்பிட்ட உயரத்துக்கு மேல் கட்டடம் கட்ட தடையுள்ள போதும், குன்னூர், ஊட்டியில் பூமிக்கு அடியில் (அண்டர் கிரவுண்டு) கட்டடம் கட்டப்படுவது எப்படி?

 

ஆளுநர் உத்தரவை மீறி கட்டிய கட்டிடங்களைதான் இடிக்கிறோம்

Print PDF

தினகரன்        18.05.2010

ஆளுநர் உத்தரவை மீறி கட்டிய கட்டிடங்களைதான் இடிக்கிறோம்

புதுடெல்லி,மே 19: கால அவகாசத்தையும், ஆளுநர் உத்தரவையும் மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் மட்டுமே இடிக்கப்படுகின்றனஎன்று டெல்லி மேம்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.

அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணியில் டெல்லி மேம்பாட்டு ஆணையம் ஈடுபட்டுள்ளது. வசந்த் கஞ்ச், ஜெயித்பூர் ஆகிய பகுதிகளில் மட்டும் அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 500 கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இது பொதுமக்கள் மத்தியில் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது.

எனவே இந்த நடவடிக்கை பற்றி டெல்லி மேம்பாட்டு ஆணையம் நேற்று வெளியிட்ட அறிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:

டெல்லியில் 2007 பிப்ரவரி மாதம் 7 ம் தேதிக்கு பிறகு அங்கீகாரம் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களை மட்டுமே மேம்பாட்டு ஆணையம் இடித்து வருகிறது. அதற்கு முன்னதாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவில்லை.

இந்த கட்டிடங்களை இடிக்கும் முன்னதாக அதற்கான ஒப்புதலை ஆளுநர் தேஜேந்திர கன்னாவிடம் இருந்து எழுத்து மூலமாக வாங்கிய பிறகே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2007 ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதிக்கு பிறகு நகரின் பல்வேறு இடங்களில் அங்கீகாரம் இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அப்படிப்பட்ட கட்டிடங்களை வளர விடாமல் ஆரம்பத்திலேயே இடித்து தள்ளும்படி ஆளுநர் தேஜேந்திர கன்னா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான் மேம்பாட்டு ஆணைய் செய்து வருகிறது.இந்த அனுமதியை நிதி அமைச்சர் ஏ.கே. வாலியா பெற்று வந்தார்.

நகரில் மேம்பாட்டு ஆணையத்துக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை சில தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி விற்க தொடங்கி விட்டன. அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அதையும் மீறி சில இடங்களில் வீடுகள் கட்டி விற்கப்படுகின்றன. இப்படிப்பட்ட நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டுமானால் 2007 ம் ஆண்டு பிப்ரவரிக்கு பின் கட்டப்பட்ட கட்டிடங்களை இடித்து தள்ளலாம்என்ற டெல்லி நகர சட்டத்தை பயன்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

உள்ளூர் திட்டக் குழும ஒப்புதல் இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

Print PDF

தினமணி     18.05.2010

உள்ளூர் திட்டக் குழும ஒப்புதல் இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது நடவடிக்கை: ஆட்சியர்

திருப்பூர், மே 18: திருப்பூர் மாநகராட்சி எல்லைப் பகுதியில் உள்ளூர் திட்டக்குழும ஒப்புதலின்றியும், வாகன நிறுத்துமிடம் இல்லாமலும் கட்டப்பட்டுள்ள வர்த்தக கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வருவாய்த் துறை, உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும எல்லை விரிவாக்கம் குறித்த ஆலோசனைக் கூட்டம் திருப்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சி.சமயமூர்த்தி தலை மையில் நடந்த கூட்டத்தில், திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும பகுதியில் கட்டப்பட் டுள்ள அனுமதியற்ற கட்டடங்கள் குறித்தும், அவற்றைத் தடை செய்ய உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டது.

முதல்கட்டமாக, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பல்லடம் சாலை, காங்கயம் சாலை, தாராபுரம் சாலை, அவிநாசி சாலை, ஊத்துக்குளி சாலை மற்றும் மங்கலம் சாலை பகுதிகளில் வாகன நிறுத்துமிடம் இல்லாமல் கட்டப்பட்டுள்ள வர்த்தக கட்டடங்கள் மற்றும் மாநகராட்சி, உள்ளூர் திட்டக்குழும ஒப்புதல் பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மீது உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த் துறை, உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதியற்ற மனைப் பிரிவுகள் உள்ள இடங்களில் உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் "அனுமதியற்ற மனைப் பிரிவு' என்ற அறிவிப்புப் பலகை வைப்பதுடன், ஏற்கெனவே அந்த இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த கட்டட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளிடம் வரைபட ஒப்புதல் கோரி பெறப்படும் அடுக்குமாடி கட்டடம், பொதுக்கட்டடம், கல்விக்கூடங்கள், வணிக வளாகங்கள் குறித்த விண்ணப்பங்களை உள்ளூர் திட்டக்குழு பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும். மேலும், உள்ளூர் திட்டக்குழும எல்லைக்குள் அமையும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சிகளில் மக்கள் பயன்பெறும் வகையில் இணைப்புச் சாலை மற்றும் சிறு பாலங்கள், பூங்காக்கள் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகள் அமைக்க கருத்துருக்கள் அனுப்ப வேண்டும் என்றார் ஆட்சியர்.

மேலும், சட்டப்பேரவையில் அறிவித்தபடி திருப்பூர் உள்ளூர் திட்டக்குழும எல்லையை விரிவாக்கம் செய்வும், உள்ளூர் திட்டக்குழு உறுப்பினர் செயலருக்கு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வருவாய் அதிகாரி கே.வி.முரளிதரன், திருப்பூர் மாநகராட்சி, 15வேலம் பாளையம், நல்லூர் நகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழு அதிகாரிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பங்கேற்றனர்.

 


Page 71 of 96