Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

குழித்துறை நகராட்சியில் கட்டட அனுமதி வரம்பை உயர்த்த கோரிக்கை

Print PDF

தினமணி 28.04.2010

குழித்துறை நகராட்சியில் கட்டட அனுமதி வரம்பை உயர்த்த கோரிக்கை

மார்த்தாண்டம், ஏப். 27: குழித்துறை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி வரம்பை உயர்த்த வேண்டும் என, நகர்மன்ற உறுப்பினர் பொன். ஆசைத்தம்பி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நகரமைப்பு இயக்குநருக்கு அனுப்பிய மனு:

குழித்துறை நகராட்சி பகுதியில் கட்டட அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் கட்டடங்களின் அளவு அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.

இதனடிப்படையில் 1,000 சதுர அடி வரையிலான வணிக வளாகங்களுக்கும், 2,000 சதுர அடி வரையிலான வீடுகளுக்கும் நகராட்சியிலே அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த அளவுகளுக்கு மேல் உள்ள வணிக வளாகங்களுக்கு நகர் ஊரமைப்பு துணை இயக்குநர் அனுமதியும் குடியிருப்புகளுக்கு நகரமைப்பு இயக்குநர் அனுமதியும் பெற வேண்டியுள்ளது.

இதனால் கட்டட அனுமதிக்காக வரும் பொதுமக்களுக்கு அதிக அலைச்சலும் பொருள்செலவும் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில் 5000 சதுர அடி வரையிலான குடியிருப்புகளுக்கும், 10000 சதுர அடி வரையிலான வணிக வளாகங்களுக்கும் நகராட்சியிலேயே அனுமதி வழங்க ஆவன செய்ய வேண்டும் என்றார் அவர்.

 

அரியாறு வடிநிலக் கோட்டத்தில்: மழை நீரைச் சேமிக்க வாய்க்கால்களில் விரைவில் தூர் வாரும் பணி

Print PDF

தினமணி 28.04.2010

அரியாறு வடிநிலக் கோட்டத்தில்: மழை நீரைச் சேமிக்க வாய்க்கால்களில் விரைவில் தூர் வாரும் பணி

திருச்சி, ஏப். 27: மழை நீரைச் சேமிப்பதற்காக, திருச்சி அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட குளங்களைச் சார்ந்த 19 வாய்க்கால்களில் ஏப்ரல் மாத இறுதியில் தூர் வாரும் பணி தொடங்கப்படவுள்ளது.

இதற்காக ரூ. 75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவிரியில் தண்ணீர் வரும்போது, பொதுப் பணித் துறை திருச்சி ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்துக்கு உள்பட்ட குளங்களில் தண்ணீர் நிரப்புவதற்கு வாய்ப்பாக அமைகிறது.

ஆனால், அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட திருச்சி, கரூர் (குளித்தலை பகுதி) மாவட்டத்தில் உள்ள 95 குளங்களில் தண்ணீர் நிரம்புவதற்கான ஒரே ஆதாரம் மழை மட்டுமே.

அபரிமிதமான அளவுக்கு மழை பெய்தாலும்கூட இந்தக் கோட்டத்தில் உள்ள பெரும்பாலான குளங்களில் தண்ணீர் நிரம்புவதில்லை.

கடந்த 2009 ஆம் ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை இயல்பான அளவையும் விஞ்சி பெய்தது.

அப்போது, ஆற்றுப் பாதுகாப்புக் கோட்டத்துக்கு உள்பட்ட 99 சதக் குளங்கள் நிரம்பின. ஆனால், அரியாறு கோட்டத்துக்கு உள்பட்ட 95 குளங்களில் 6 குளங்கள் மட்டுமே நிரம்பின.

குளங்களுக்கு தொடர்புடைய நீரோட்டப் பாதையான வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பே இதற்குக் காரணம் என்பது தெரிய வந்தது.

மேலும், அரியாறு கோட்டத்துக்கு உள்பட்ட கோரையாறு, அரியாறு, ஐயாறு, மாமுண்டியாறு உள்ளிட்ட ஆறுகளில் வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு உய்யகொண்டான் வாய்க்கால் மூலமாக திருச்சி மாநகரில் வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

எனவே, இந்த ஆறுகளில் வரும் வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கும், மழை நீரைச் சேமிக்கும் வகையிலும் கோடை காலத்தில் அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு உள்பட்ட குளங்களுடன் தொடர்புடைய சிறு வாய்க்கால்கள், வரத்து வாரிகளைத் தூர் வார திருச்சி மாவட்ட நிர்வாகம் சில மாதங்களுக்கு முன்பு ஆலோசனை செய்தது.

தற்போது, இந்தப் பணிகளுக்காக அரியாறு வடிநிலக் கோட்டத்துக்கு ரூ. 75 லட்சம் நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது. இதில், திருச்சி மாவட்டத்தில் மட்டும் ரூ. 55 லட்சத்துக்குப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதைத் தொடர்ந்து, துறையூர், குளித்தலை, மணப்பாறை, திருச்சி, திருவெறும்பூர் ஆகிய வட்டங்களில் உள்ள அரியாறு வடிநிலக் கோட்ட சிறு வாய்க்கால்கள், வரத்து வாரிகளில் தூர் வாரும் பணி ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கப்படவுள்ளன. இந்தப் பணி மே 15}ம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் மேலும் தெரிவித்தது:

"முசிறி வட்டத்தில் பாலாயியம்மன் ஏரி வழங்கு வாய்க்கால், எம். களத்தூர் வரத்துவாரி, மணப்பாறை வட்டத்தில் உபரி நீர் வாரி, காப்பாக்குடி வழங்கு வாய்க்கால், பாலக்குறிச்சி மருங்கிகுளம் வாய்க்கால், குமரவாடி வாய்க்கால், திருவெறும்பூர் வட்டத்தில் சூரியூர் பெரிய ஏரி வாய்க்கால் உள்பட 19 பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த வாய்க்கால்களில் 2 அடி முதல் 3 அடி ஆழத்துக்குத் தூர் வாரி, அந்த மண் மூலம் கரைகளும் பலப்படுத்தப்படவுள்ளன' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Last Updated on Wednesday, 28 April 2010 11:01
 

அனுமதி பெறாத கட்டடங்களில் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: ஊட்டியில் அதிரடி நடவடிக்கை

Print PDF

தினமலர் 26.04.2010

அனுமதி பெறாத கட்டடங்களில் குடிநீர், மின் இணைப்பு துண்டிப்பு: ஊட்டியில் அதிரடி நடவடிக்கை

ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், விதிமுறையை மதிக்காமல், கவுன்சிலர்கள், அதிகாரிகள் சிலர் ஆதரவுடன் விதிகளுக்கு புறம்பாக கட்டடம் கட்டியவர்கள், இன்று பெரும் அவலத்தில் நிற்கின்றனர்.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், கோத்தகிரி தாலுகாக்களில் அனுமதியின்றியும், விதி மீறியும் 1,337 கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன; கட்டடங்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், 'அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடங்களை இடிக்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதன்படி, 32 கட்டடங்களில், விதிமீறிய பகுதிகள் இடிக்கப்பட்டன. பலர், சுப்ரீம் கோõர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

சென்னை ஐகோர்ட்டில் நடந்த கட்டடங்கள் தொடர்பான விசாரணையில், ஊட்டியில் அனுமதியின்றியும், விதிமீறியும் கட்டப்பட்ட கட்டடங்களில், வழக்கு நிலுவையில் உள்ளதை தவிர, 985 கட்டடங்களின் பட்டியலை தயாரித்து, இதற்கான மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்க வேண்டும் என, நீதிபதிகள் தர்மாராவ், சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

பணிகளை மேற்கொள்ள, போலீசார் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; பணிகள் முடிந்து, வரும் 29ம் தேதி ஊட்டி நகராட்சி கமிஷனர், ஊட்டி மின்வாரிய கண்கணிப்பு பொறியாளர், குடிநீர் வடிகால் வாரிய கண்காணிப்பு பொறியாளர் ஆஜராகி, கோர்ட் உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்' எனவும் உத்தரவிடப்பட்டது.உத்தரவுக்கு பின், மின் இணைப்பு மற்றும் நீர் இணைப்பை துண்டிக்கும் பணிக்கான கூட்டம் நடந்தது.

நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, கமிஷனர் கிரிஜா உத்தரவின் படி, பொறியாளர் ராமமூர்த்தி மேற்பார்வையில், நீர் இணைப்பு துண்டிக்கும் பணி துவங்கியது. ஊட்டி சவுத்விக், குன்னூர் சாலை, கோடப்பமந்து, பிங்கர்போஸ்ட், ஹில்பங்க் பகுதிகளில், நகராட்சி ஊழியர்கள், துண்டிப்பு பணியில் ஈடுபட்டனர். மின்வாரிய செயற்பொறியாளர் ஆல்துரை மற்றும் உதவி பொறியாளர் சிவகுமார் தலைமையில், மின் இணைப்பு துண்டிப்பு பணி நடந்து வருகிறது.

Last Updated on Monday, 26 April 2010 06:13
 


Page 74 of 96