Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

நிலத்தடி நீரை பாதுகாப்பதில் யாருக்கும் அக்கரையில்லை: மழை நீரை சேமிக்கும் திட்டங்கள் இல்லை

Print PDF

தினமலர் 21.04.2010

நிலத்தடி நீரை பாதுகாப்பதில் யாருக்கும் அக்கரையில்லை: மழை நீரை சேமிக்கும் திட்டங்கள் இல்லை

ஆண்டிபட்டி:ஆழ்குழாய்கள் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு விரயமாக்கப்படுகிறது. நிலத்தடி நீர் சேமிப்புக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் யாருக்கும் அக்கரையில்லாத நிலை உள்ளது. ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பகுதிகளுக்கு குன்னூர் ஆற்றில் இருந் தும், சேடபட்டி-ஆண்டிபட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலமும் குடிநீர் வினியோகம் உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் இருந்த கன்னிமார்குளம், பொட்டல்குளம், மின்னலடிக்குளம், மாரியம்மன் குளம் ஆகியவை தற்போது குடியிருப்பு பகுதிகளாகி விட்டது. ஓர் ஆண்டில் ஆறு மாதங்கள் வரை இக்குளங்களில் தேங்கி நீற்கும் நீரால் நிலத்தடி நீர் மட்டம் சமன் செய்யப்பட்டு வந்தது. குடிநீர் தேவையில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கில் பேரூராட்சியில் பல இடங்களில் ஆழ்குழாய் அமைத்து மோட்டார் மூலம் உறிஞ்சி தெருக்களில் பல இடங்களில் குழாய்கள் அமைத்துள்ளனர். தற்போது ஆழ்குழாய் நீர் எந்நேரமும் மோட்டார் மூலம் உறிஞ்சப்படுகிறது. குழாய்களில் வரும் நீரை பல வழிகளிலும் விரயமாக்கி விடுகின்றனர். உறிஞ்சப்படும் அளவுக்கு சேமிப்புக்கான வழிவகை இல்லை. புதிதாக கட்டப்படும் கட்டடங்களில் மழைநீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.

சக்கம்பட்டியில் உள்ள 50க்கும் மேற்பட்ட தனியார் சலவைப்பட்டறை மூலம் தினமும் லட்சக்கணக்கான லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வீணாக சாக்கடை வழியாக திருப்பி விடப்படுகிறது. அவ்வப்போது பெய்யும் மழையால் கிடைக்கும் மழை நீரும் சேமிப்புக்கான இடங்கள் இல்லாததால் சாக்கடை கால்வாயில் சென்று வீணாகிவருகிறது. மழை நீரை சேமிக்கவும், நிலத்தடி நீரை பயன்படுத்துவதில் சிக்கன நடவடிக்கை எடுக்கவும் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வரும் காலங்களில் நிலத்தடி நீரை பெற மிகவும் சிரமப்படவேண்டியிருக்கும்.

Last Updated on Thursday, 22 April 2010 06:54
 

"வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு'

Print PDF

தினமணி 23.03.2010

"வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு அமைப்பு'

கோவை, மார்ச் 22: வீடுதோறும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்று, மழைநீர் சேகரிப்பு மைய இயக்குநர் சேகர் ராகவன் கூறினார்.

உலகத் தண்ணீர் தினத்தை ஒட்டி, இந்தியத் தொழில் வர்த்தக சபை சார்பில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, சேகர் ராகவன் பேசியது:

உலகில் மூன்றில் இரு பங்கு கடலால் சூழப்பட்டுள்ளது. மொத்தமுள்ள நீரில் 95 சதவீதம் உப்புநீர். மீதமுள்ள 5 சதவீதம்தான் நன்னீர். இவற்றில் ஒரு சதவீதத்தையே குடிநீராகப் பயன்படுத்த முடியும்.

ஆண்டுதோறும் குடிநீரின் தேவை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதே சமயம், குடிநீரின் இருப்பு குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டு மட்டும் சென்னையில் 1.3 மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழைநீரை அப்படியே சேகரித்து இருந்தால், சென்னை மக்களின் குடிநீர் தேவைகளுக்கு போதுமானதாக இருந்திருக்கும். ஆனால், குடிநீரை சேகரிக்காமல், நாம் வீணடித்து வருகிறோம்.

ஆகாயத்தில் இருந்து கொட்டும் மழையானது தார்ச்சாலை வழியே ஓடி, சாக்கடையை அடைந்து, யாருக்குமே பயனில்லாமல், கடலில் கலக்கிறது. இந்த மழைநீரை பூமிக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்காக மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை வீடுதோறும் அமைக்க வேண்டும்.

கடந்த 2002}ம் ஆண்டு, தமிழகம் முழுவதும் மழைநீர் சேகரிப்பு கட்டாயமாக்கப்பட்டது. அதனால், அனைத்து குடியிருப்புகளிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன. ஓராண்டுதான் இந்த விதி தீவிரமாக அமலாக்கப்பட்டது. அதற்கு பிறகு அரசின் கெடுபிடி தளர்ந்தது.

இன்று பெரும்பாலான வீடுகள் மழைநீர் சேகரிப்பு அமைப்பு இல்லாமலேயே கட்டப்படுகிறது. பாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்துவதற்காக மழைநீர் சேகரிப்பு திட்டத்தை மீண்டும் கடுமையாக அமலாக்க வேண்டும், என்றார்.

Last Updated on Tuesday, 23 March 2010 10:48
 

நகராட்சி கடைகளை விற்க முயற்சி: 4 கடைகளுக்கு சீல் வைப்பு

Print PDF

தினமணி 18.03.2010

நகராட்சி கடைகளை விற்க முயற்சி: 4 கடைகளுக்கு சீல் வைப்பு

நாமக்கல், மார்ச் 17: நாமக்கல் பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சி கடைகளை விற்க முயற்சித்த சம்பவத்தை முறியடித்து அந்த கடைகளை நகராட்சி நிர்வாகம் சீல் வைத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.

நாமக்கல் நகராட்சிப் பேருந்து நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விடப்பட்டுள்ளன. இதற்காக நகராட்சியிடம் அனுமதி பெற்று உரிமம் பெற்ற நபர்களில் பலர் அந்த கடைகளை உள் வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டி வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள் வரும் சூழலில் நகராட்சிக்கு சொந்தமான கடையை விற்பனை செய்யவும் முயற்சித்த சம்பவம் புதன்கிழமை தெரியவந்தது.

பேருந்து நிலையத்தின் சேலம் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு அருகே 4 கடைகள் உள்ளன. 3 பழமுதிர்ச் சோலை, ஒரு செல்போன் கடை என அந்த 4 கடைகளும் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய பிறகே அந்த கடைகள் நகராட்சிக்கு சொந்தமானவை என்பது தெரியவந்தது.

இதையடுத்து நகராட்சி ஆணையர் ஆறுமுகம், நகர்மன்றத் தலைவர் இரா. செல்வராஜ், சுகாதார அலுவலர் முகமது மூசா மற்றும் பணியாளர்கள் பேருந்து நிலையத்துக்கு விரைந்து சென்று கடை உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும், 4 கடைகளுக்கும் பூட்டி சீல் வைத்தனர்.

இது தொடர்பாக, ஆணையர் ஆறுமுகம் கூறியது:

நகராட்சி சார்பில் பெரியசாமி என்பவருக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இந்த கடைகள் விற்பனைக்கு உள்ளதாக விளம்பரம் செய்து அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்ததால் கடைகளை பூட்டி சீóல் வைத்து நகராட்சி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

விசாரணைக்குப் பிறகு மேல் நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பேருந்துநிலையத்தில் உள்ள கடைகளில் பலர் வாடகை கட்டணம் செலுத்தாமல் உள்ளனர்.

உடனடியாக வாடகை செலுத்தாவிட்டால் அந்த கடைகளுக்கும் வியாழக்கிழமை முதல் சீல் வைக்கப்படும் என ஆணையர் எச்சரித்துள்ளார்.

Last Updated on Thursday, 18 March 2010 11:34
 


Page 76 of 96