Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

அடுக்குமாடி வீடுகள் ஆபத்தானதா? 'அச்சம் வேண்டாம்' என்கிறார், கமிஷனர்

Print PDF

தினமலர் 19.01.2010

அடுக்குமாடி வீடுகள் ஆபத்தானதா? 'அச்சம் வேண்டாம்' என்கிறார், கமிஷனர்

கோவை : கோவை நகரை குடிசையில்லா நகராக்கும் திட்டம், மூன்று கட்டமாக 443.55 கோடி ரூபாயில் செயல்படுத்தப்படுகிறது. கோவை நகரம் நில அதிர்வு மண்டலமாக இருப்பதால், ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட வேண்டாம், என, கம்யூ., கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. நகர்ப்புற ஏழை மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, கோவை மாநகர பகுதியை குடிசையில்லா நகராக்கும் திட்டம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக மாநகர பகுதியிலுள்ள 173 குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு அதே இடத்தில் கான்கிரீட் வீடுகள் கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, 258.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில் கான்கிரீட் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது.

அதே போன்று, மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியி<லுள்ள நீர் நிலைகள், நெடுஞ்சாலையோர பகுதிகள், ரயில்வே துறைக்கு சொந்தமான இடம், தனியார் நிலம், ஆட்சேபகரமான பகுதிகள் என்று 91 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு, நீண்ட காலமாக ஆக்கிரமிப்பு செய்து வசிக்கும் குடிசை வாழ் மக்களின் எண்ணிக்கை குறித்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இவர்களுக்கு, உக்கடம் பிலால் நகர் அருகே உள்ள மாநகராட்சி கழிவு நீர் பண்ணை இருந்த 80.66 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 91 குடிசை பகுதியில் வசித்து வந்த 9,600 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு 184.80 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்து, மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமான பணிகளுக்கு மாநகராட்சி மதிப்பீடுகள் தயார் செய்துள்ளது.கோவை நகரம், நில அதிர்வு மண்டலத்தில் மூன்றாமிடத்தில் இருப்பதால், குடிசைவாழ் மக்களுக்காக கட்டப்படவுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், நில அதிர்வை தாங்கும் வகையில் வலுவாக(மோனோலித்திக் கான்கிரீட் கொண்டு) கட்டப்படவுள்ளது.

இதற்காக, பொதுப்பணித்துறையினர் மதிப்பீடு தயார் செய்து 430 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிட்டுள்ளனர். திட்ட நிதி ஒதுக்கீட்டுக்கும் கூடுதலாக 245.20 கோடி ரூபாய் செலவழித்து பணிகளை மேற்கொள்ள முடியாததால், கட்டடப்பணிகளை இரு பகுதியாக மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக தரை மற்றும் மூன்று தளங்களை கொண்ட 48 அடுக்குமாடி கட்டடங்களில் 3,960 குடியிருப்புகள் கட்டவும், இரண்டாம் கட்டமாக 23 அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கு, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மா.கம்யூ., கட்சி தலைவர் பத்மநாபன் கூறுகையில், "" 400 கோடி ரூபாயை கான்கிரீட்டில் போடுவதற்கு பதிலாக, மாநகரை ஒட்டியுள்ள வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தை மாநகராட்சி கையகப்படுத்தி, தனி வீடுகளை கட்டித்தர வேண்டும்,'' என்றார். மாநகராட்சி இ.கம்யூ., கட்சி தலைவர் புருஷோத்தமன் கூறுகையில், ""நில அதிர்வு மண்டலமாக கோவை நகரம் கண்டறியப்பட்டுள்ளதால், மாநகராட்சி சார்பில் 4,5 அடுக்குகளை கொண்ட குடியிருப்புகளை கட்டுவதை தவிர்க்க வேண்டும். மாற்று குடியிருப்பு திட்டச் செலவுக்கு மாநகராட்சி கூடுதலாக 240 கோடி ரூபாயை பொது நிதியிலிருந்து பெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால், மாநகராட்சிக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும். பெரும் தொகையை கட்டடத்தின் மீது செலவு செய்தால் பெரிய அளவில் வருவாய் ஏதும் கிடைக்காது. இதனால், இத்திட்டத்தை ஒத்திவைப்பது நல்லது,'' என்றார். இது குறித்து, மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில்,""எர்த் புரூப் போடப்பட்ட பின்னரே அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்படுகிறது; அச்சம் தேவையில்லை,'' என்றார்.

Last Updated on Tuesday, 19 January 2010 06:50
 

நகராட்சி திட்டச்சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் : அதிகாரிகளே அனுமதி அளித்துள்ளதால் அதிர்ச்சி

Print PDF

தினமலர் 20.01.2010

நகராட்சி திட்டச்சாலையை ஆக்கிரமித்து கட்டடங்கள் : அதிகாரிகளே அனுமதி அளித்துள்ளதால் அதிர்ச்சி

உடுமலை : உடுமலை நகராட்சிக்கு சொந்தமான திட்டச்சாலையை ஆக்கிரமித்து பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதோடு, அதற்கு நகராட்சியே அனுமதியும் வழங்கியுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. உடுமலை நகர பகுதியில் உள்ள ரோடுகள் குறுகலாக உள்ளதாலும், ஆக்கிரமிப்புகள் அதிகரிப்பு காரணமாகவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

நெடுஞ்சாலைத்துறை சார்பில், உடுமலையின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பைபாஸ் ரோடு அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், ஏற்கெனவே நகராட்சி ஆவணங்களில் உள்ள திட்டச்சாலையை மீட்டு, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 100 அடி திட்டச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. நகராட்சி எல்லையான பி..பி., வாய்க்கால் முதல், நவீன எரிவாயு மயானம் வரையில் ஆறு கிலோ மீட்டர் தூரத்திற்கு, பொள்ளாச்சி - பழநி தேசிய நெடுஞ்சாலைக்கு இணையாகவும், திருப்பூர் ரோடு, தாராபுரம் ரோடு ஆகியவற்றை இணைக்கும் வகையிலும் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. பி..பி., வாய்க்கால் முதல் திருப்பூர் ரோடு வரை 100 அடி ரோடாகவும், திருப்பூர் ரோடு முதல் நவீன எரிவாயு மயானம் வரை 60 அடி அகல ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, நகராட்சி சார்பில் திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டது. நகராட்சி வசம் உள்ள வரைபடத்தில் உள்ள இடங்களை சர்வே செய்ய சென்ற நகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். நகராட்சிக்கு சொந்தமான திட்ட சாலை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய கட்டடங்கள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, நகராட்சி அதிகாரிகளே அனுமதியும் கொடுத்துள்ளனர். பல ஆண்டுகளாக நகராட்சிக்கு சொந்தமான திட்டச்சாலை உள்ளது குறித்து அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் , பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதோடு, முறைகேடாக நகராட்சிக்கு சொந்தமான திட்டச்சாலை இடத்தில் பெரிய அளவிலான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதோடு, ஆக்கிரமிப்பு கட்டடங்களுக்கு நகராட்சியே அனுமதி வழங்கியதோடு, அனைத்து வசதிகளும் செய்து கொடுத்துள்ளது. இந்த கட்டடங்களுக்கு நகராட்சி வரியும் வசூலித்து வருகிறது. பல இடங்களில் இலவச வீட்டு மனை பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. இதனால், திட்டச் சாலைக்கு நிலம் எடுப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திட்டச்சாலையில், பாரதியார் காலனியில் 40 ஆண்டுகளாக 45 குடும்பங்கள் வசித்து வருகின்றன. திட்டச்சாலைக்காக ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என நகராட்சி தெரிவித்துள்ள நிலையில், நேற்று இப்பகுதி மக்கள் 40 ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என உடுமலை வருவாய் கோட்டாட்சியர் செல்வராசனிடம் மனு அளித்தனர். இதனால், திட்டச் சாலை அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

அனுமதியின்றி அமைத்த மனைகளை வாங்க கூடாது! ஆற்காடு நகராட்சி சேர்மன் வேண்டுகோள்

Print PDF

தினமலர் 07.01.2010

அனுமதியின்றி அமைத்த மனைகளை வாங்க கூடாது! ஆற்காடு நகராட்சி சேர்மன் வேண்டுகோள்

ஆற்காடு:"ஆற்காட்டில் நகராட்சி அனுமதி இல்லாமல் போடப்பட்ட வீட்டு மனைகளை பொதுமக்கள் வாங்கக்கூடாது' என நகராட்சி கூட்டத்தில் சேர்மன் கூறினார்.ஆற்காடு நகராட்சி கூட்டம் சேர்மன் ஈஸ்வரப்பன் தலைமையில் நடந்தது. நகராட்சி துணை தலைவர் ராஜசேகரன், ஆணையர் பாரிஜாதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், அதிகாரிகளிடையே நடந்த விவாதம்:

நடராஜ் (திமுக): 5 ஆண்டுகளாக குழாய்வரி கட்டாமல் இருக்கிறார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

ரகுநாதன் (அதிமுக): எனது பகுதியில் உள்ள சுடுகாட்டை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? இதே நிலை ஏற்பட்டால் பிணத்தை புதைக்க கூட இடம் கிடைக்காது.

தலைவர்: அந்த சுடுகாட்டுக்கு உடனடியாக சென்று, ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ராஜி (அதிமுக): பூங்காக்கள் பராமரிக்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதை அந்த இடத்தில் காம்ப்ளக்ஸ் கட்டினால் நகராட்சிக்கு வருமானம் கிடைக்கும்.

தலைவர்: பூங்காக்கள் உள்ள இடத்தில் "காம்ப்ளக்ஸ்' கட்ட முடியாது. மேலும், ஆற்காட்டில் மாலை நேரங்களில் பொழுதுபோக்க எந்த இடமும் இல்லை.

கஸ்தூரி (சுயே.,): எனது வார்டுக்கு இதுவரையில் 11 லட்சம் ரூபாய் செலவில் பணிகள் செய்யப்பட்டுள்ளது. அதற்கு என வார்டு மக்கள் சார்பில் சேர்மனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ராஜா (சுயே.,): பூங்காவை சுற்றிலும் காம்பவுண்டு சுவர் எழுப்பி பாதுகாக்க வேண்டும்.செல்வரசு (அதிமுக): ஆற்காட்டில் உள்ள 15 வார்டுகளுக்கு தெரு விளக்குகள் பராமரிக்கும் பணியை தனியாருக்கு, விதிக்குட்பட்டு ஒதுக்கப்பட்டதாக கூறியுள்ளீர்கள். அது என்ன விதி என்பதை உறுப்பினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

செல்வம் (பாமக): என் வார்டில் சிமென்ட் சாலை போட டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் வேலை எடுத்தவர் அந்த சாலையை கொத்தி, அதில் இடிக்கப்பட்ட கட்டடங்களின் தூள்களை கொட்டி அதன் மீது சிமென்ட் கலவை போட முற்பட்டதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் அந்த பணியை நிறுத்தி விட்டார்கள். சிமென்ட் சாலை போடுவதை அதிகாரி சென்று பார்வையிடுவதே இல்லை. பார்வையிட்டு இருந்தால் இதுபோல் மோசடியான வேலை நடப்பதற்கு வழியில்லை.

சுந்தரம் (சுயே.,): ஆற்காட்டில் பல இடங்களில் அனுமதி இல்லாமல் செல்போன் டவர் அமைக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு இடிதாங்கி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. மேலும் அதற்கு நகராட்சி வரி போட வேண்டும். ஆற்காட்டில் தற்போது அடிக்கடி சாலை விபத்துக்கள் ஏற்பட்டு பலர் இறந்து விடுகிறார்கள். அதனால் சாலையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வாகனங்கள் நகருக்குள் "ஏர் ஹாரன்' அடிக்க கூடாது என்ற விதி இருந்தும், அதை யாரும் மதிப்பது இல்லை. சம்பந்தப்பட்ட போக்குவரத்து ஆய்வாளர்கள் காவல் துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்த வேண்டும்.

சண்முகம் (அதிமுக): ஆற்காட்டில் பல இடங்களில் அனுமதி இல்லாமல் வீட்டு மனைகள் விற்கப்படுகிறது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

தலைவர்: அனுமதி இல்லாமல் வீட்டு மனைகளை வாங்க கூடாது என்று பத்திரிகைகள் மூலமும், சம்பந்தப்பட்ட இடங்களில் போர்டுகள் வைத்தும் பொதுமக்களை விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். மீண்டும், நகராட்சி அனுமதி இல்லாமல் விற்கப்படும் வீட்டு மனைகளை பொதுமக்கள் வாங்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில், ஆற்காடு போலீஸ் ஸ்டேஷன் பக்கத்தில் உள்ள ஆடு அறுக்கும் தொட்டி இருந்த இடத்தில் நகராட்சி ஆணையர், பொறியாளர், நகர அமைப்பு அலுவலர் மற்றும் துப்புரவு அலுவலர்களுக்கு அரசின் நிதியுதவியுடன் குடியிருப்புகள் கட்டுவது என்றும், ஆற்காடு நகரில் உள்ள வடமேற்கு பகுதியிலும், பாலாற்றங்கரை ஓரமாகவும், ஏரிக்கரை அருகிலும் காரிய மேடைகள் கட்டுவது போன்ற பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Last Updated on Thursday, 07 January 2010 06:37
 


Page 79 of 96