Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

Print PDF

தினமணி 24.11.2009

மழை நீர் சேகரிப்பு - காலத்தின் கட்டாயம்

தமிழகத்தில் விவசாயம் பருவமழையை ஆதாரமாகக் கொண்டுள்ளது. நமது பாசனத் தேவையில் 45 சதவீதம் நதிகள், சிற்றாறுகள் மூலம் கிடைக்கிறது.

இதுதவிர ஏரிப்பாசனம், கண்மாய்ப் பாசனம், நீர்த்தேக்கங்கள், நேரடிப் பாசன முறைகளும் நடைமுறையில் உள்ளன. வடகிழக்குப் பருவமழையும், தென்மேற்குப் பருவமழையும் உரிய காலத்தில் பெய்தால் நாமே உணவு உற்பத்தியில் முன்னிலை பெறுவோம்.

தமிழகத்தில் 39,202 ஏரி, கண்மாய்களும், 2,295 வாய்க்கால், நேரடிப் பாசனமும் பயன்பாட்டில் உள்ளன. ஆனால் பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இதனால் பருவமழையினால் பெறும் மழை நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் நிச்சயம் உணவு உற்பத்தி கூடும்.

அதேநேரத்தில் நிலத்தடி நீரும் வேகமாக உறிஞ்சப்பட்டு வருகிறது. தற்போது 1,000 அடிக்குக் கீழும் துளைத்து நிலத்தடி நீரை உறிஞ்ச நீர் மூழ்கி மோட்டார்களை வைத்துவிட்டார்கள்.

2009-ம் ஆண்டு கணக்குப்படி 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு, உணவு உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.

இதனிடையே ரியல் எஸ்டேட்காரர்களால் நஞ்சை நிலங்களும், தோட்டங்களும், தென்னந்தோப்புகளும் வீட்டு மனைகளாக மாறியுள்ளன.

இந்த இடங்கள் அனைத்திலும் பூமியைத் துளையிட்டு நீரை உறிஞ்சி வருகின்றனர். இதுபோக பல்வேறு காரணங்களுக்காக கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்து நீர் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர் பாதாளத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வேலூர், சேலம், விழுப்புரம், கோவை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் ஏற்பட்ட வறட்சியின்போது, மாநிலம் முழுவதும் ஏராளமான தென்னை, மாமரங்கள் பட்டுப் போனதற்கு மிகுதியாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டதும் ஒரு காரணம்.

நீரின் தேவையைக் குறைத்துக் கொள்ள முடியாத சூழ்நிலையில், நிலத்தடி நீர் குறைந்து விடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

நிலத்தடி நீரை மேம்படுத்தும் நோக்கத்துடன் இறைவைப்பாசனக் கிணறுகளுக்கு நீர் சுரக்கும் வகையில் தமிழகத்தில் 11,295 கசிவு நீர்க் குட்டைகளையும், 11,648 தடுப்பு அணைகளையும், 16,746 பண்ணைக் குட்டைகளையும் மாநில அரசு அமைத்துள்ளது பாராட்டுக்குரியது. ஆனால் இதனை அரசு முறையாகப் பராமரிப்பதும் அவசியம்.

தற்போது தமிழகம் முழுவதும் 18 லட்சத்து 59 ஆயிரத்து 946 கிணறுகளில் மோட்டார் பம்ப்செட் பயன்பாட்டில் உள்ளது. 12 லட்சத்து 50 ஆயிரத்து 730 திறந்தவெளிக் கிணறுகள் உள்ளதாகப் புள்ளிவிவரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு திறந்தவெளிக் கிணறுகளின் அருகிலும் மழை நீர் சேகரிப்புத் தொட்டி அமைத்து மழை நீரை வடிகட்டி கிணற்றில் குழாய் மூலம் விழச் செய்து நிலத்தடி நீர் வளத்தைப் பெருக்குவது அவசியம்.

திறந்தவெளிக் கிணறுகளில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பு எனப்படும் இத்திட்டம் தற்போது ஆந்திரம், குஜராத், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மழைநீர் சேகரிப்பு வடிதொட்டி அமைக்க குறு சிறு விவசாயிகள் 5 ஏக்கர் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரம், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருந்தால் கிணறு ஒன்றுக்கு ரூ. 2 ஆயிரம் மானியம் என நிர்ணயித்திருக்கிறார்கள்.

மழைநீரைச் சேகரிக்க திறந்தவெளிக் கிணறுகளில் வடிதொட்டி அமைக்கும் திட்டம் அதிகம் பயனளிக்கக் கூடியது.

திறந்தவெளிக் கிணறுகள் அமைந்துள்ள விவசாய நிலங்களில் மழைக்காலங்களில் 50 மி.மீ. மழை பெய்தால் சுமார் 8 ஆயிரம் லிட்டர் முதல் 14 ஆயிரம் லிட்டர் நீர் வடிதொட்டி மூலம் கிணற்றில் தேங்கும் என தோராயமாகக் கணக்கிடப்படுகிறது. மழையளவு அதிகரிக்கும்போது கிணற்றில் தேங்கும் நீரின் அளவு கூடிக்கொண்டே போகும். ஒரு நல்ல மழை திறந்தவெளிக் கிணறுகள் உள்ள பகுதியில் கிடைத்தால், வடிதொட்டி மூலம் கிணற்றில் 4 அடி முதல் 20 அடி வரை நீர் மட்டம் உயரும்.

நிலத்தடி நீரில் உப்புகள், உவர்ப்புகள் ஒரு லிட்டர் அளவில் 500 முதல் 2000 மில்லி கிராம் வரை உள்ளது. மாசில்லாத மழை நீர் கிணற்றில் வடிதொட்டி மூலம் சேர்ந்தவுடன் உப்புகள் உவர்ப்புத்தன்மை மாறி பயிர் வளர்ச்சிக்கும் உதவும்.

கிணற்றில் நீர் சுரப்பது என்பது படிவப்பாறைகள் சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள், இடுக்குப் பாறைகள் இவைகளின் வழியாக நடைபெறுகிறது. மழை நீர் கிணற்றில் சேமிக்கப்பட்டு நீர் மேல் நோக்கி வரும்போது நீர் படிவப் பாறைகள், சிதைந்த பாறைகள், வெடிப்புப் பாறைகள் வழியாக உள்ளே ஊடுருவிச் சென்று கிணற்றுக்கு நீர் சுரக்கும் நிலையை உருவாக்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள திறந்தவெளிக் கிணறுகளின் அருகில் மழை நீர் சேகரிப்பு வடிதொட்டி அமைப்பதன் மூலம் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்துக்கொள்வதுடன், கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாமலும் பார்த்துக் கொள்ள முடியும்.

இதுதவிர வேளாண்மைப் பயிர் விளைச்சலுக்குரிய நல்ல நீர் கிடைக்கும்; விவசாயிகள் அடிக்கிணறு வெட்டுவது, துளைக் கிணறு அமைப்பது போன்ற வீண் செலவுகள் ஏற்படாது.

இத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த வேண்டுமெனில் மத்திய, மாநில அரசுகள் மழை நீர் சேமிப்பு வடிதொட்டி அமைக்க உள்ள நிபந்தனைகளைத் தளர்த்தி சிறுகுறு விவசாயி, இதர விவசாயி என்ற பாகுபாடு காட்டாமல் அனைத்து திறந்தவெளிக் கிணறு பயனாளிகளுக்கும் 100 சதவீதம் மானியம் வழங்கி 2010-ம் ஆண்டில் இத்திட்டத்தைச் சிறப்பாக முடிக்க கவனம் செலுத்த வேண்டும்.

மழைநீர் சேமிப்புத் திட்டத்தை முழுமையாக நிறைவு பெறச் செய்தால் தமிழகம் பாலைவனமாகும் அபாய நிலையிலிருந்து மீட்சியடையும்.

நிலத்தடி நீரை நம் சந்ததியினருக்கு இருப்பு வைக்க முடியும் நம் முன்னோர்கள் பூமியின் மேற்பரப்பு நீரைப் பயன்படுத்தி நமக்கு நிலத்தடி நீரைச் சேமிப்பு செய்து வைத்தார்கள். நாம் அனைத்தையும் உறிஞ்சி விட்டு நம் வருங்காலச் சந்ததியினரை தண்ணீருக்குத் தவிக்க விடக் கூடாது.

(கட்டுரையாளர்: மதுரை மாவட்ட விவசாயிகள் சங்கத் தலைவர்).

Last Updated on Tuesday, 24 November 2009 08:46
 

கொடைக்கானலில் விதி மீறிய கட்டடங்களுக்கு உரிமம் ரத்து

Print PDF

தினமணி 19.11.2009

கொடைக்கானலில் விதி மீறிய கட்டடங்களுக்கு உரிமம் ரத்து

கொடைக்கானல்
,நவ.18: கொடைக்கானலில் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ள கட்டங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி ஆணையாளர் விஜயகுமார் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

கொடைக்கானல் நகர்ப் பகுதிகளில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கப்பட்ட வரைபடத்திற்கு மாறாக கட்டடங்கள் கட்டப்பட்டு வந்தன. இதனையடுத்து நகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்திய பின் 28 கட்டடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளன. அவற்றிற்கு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே கொடைக்கானல் நகராட்சி மூலம் முறையாக விதிமுறைகள் பின்பற்றி கட்டடங்கள் கட்டவேண்டும் என அறிவுறுத்தப்படுவதாக ஆணையாளர் தெரிவித்தார்

Last Updated on Thursday, 19 November 2009 08:26
 

கட்டட அனுமதி முறைகேடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை

Print PDF

தினத்தந்தி 18.11.2009

 


Page 85 of 96