Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

விதிகளை மீறிய கட்டடங்களுக்கு "சீல்': மாநகராட்சி ஆணையர்

Print PDF
தின மணி                   19.02.2013

விதிகளை மீறிய கட்டடங்களுக்கு "சீல்': மாநகராட்சி ஆணையர்

திருச்சி மாநகரில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கு சீல் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருச்சியில் பொறியாளர்கள், நகரமைப்பு திட்ட அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டட வரைபடம் வரைபவர்கள் ஆகியோருடன் சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அவர் இதைத் தெரிவித்தார்.

2007-ம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டடங்களை நகர்ப்புற ஊரமைப்புத் திட்ட விதிகளின்படி ஆய்வு செய்து உரிய வளர்ச்சிக் கட்டணங்களைப் பெற்றுக் கொண்டு வரன்முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனுமதி பெறாமலும், வாகன நிறுத்துமிட வசதி இல்லாமலும் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆணையர். இந்தக் கூட்டத்தில், நகரப் பொறியாளர் எஸ். ராஜா முகம்மது, நகர ஊரமைப்புத் திட்ட உதவி இயக்குநர் முத்தையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 21 February 2013 11:41
 

உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதிக்கு முறைகேடாக நிதி வசூலிப்பதாகப் புகார்

Print PDF
தின மணி          18.02.2013

உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதிக்கு முறைகேடாக நிதி வசூலிப்பதாகப் புகார்

மதுரை மாநகராட்சி உள்ளூர் திட்டக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதிக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை தவிர்த்து, சதுர அடிக்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை நிர்ணயம் செய்து, அதிகாரி ஒருவரின் பெயரைச் சொல்லி சில ஊழியர்கள் முறைகேடாக நிதி  வசூல்  நடத்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.

குறிப்பிட்ட சிலரின் வரைபடங்களை மட்டுமே பிப்ரவரி 26 ஆம் தேதி ஆட்சியர் தலைமையிலான குழுக் கூட்டத்தில் வைத்து ஒப்புதல் பெறவும் திட்டமிட்டு செயல்படுவதாகக் கூறப்படுகின்றது.

இது தொடர்பாக, ஆட்சியர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை மாநகராட்சி பகுதியில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி 1 கி.மீ. சுற்றளவுக்கு, 9 மீட்டர் உயரக் கட்டுப்பாடு தடையை மீறி கட்டப்பட்ட கட்டடங்கள் குறித்து ஆட்சியர் தலைமையில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. விதிமீறல் கட்டடங்களின் பட்டியலும் தயாரிக்கப்படுவதாக, முந்தைய ஆட்சியர் காலத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆட்சியராக அன்சுல் மிஸ்ரா பொறுப்பேற்ற பின்னரும், இந்த விதிமீறல் கட்டடங்கள் குறித்து கிழக்கு, தெற்கு மற்றும் மேற்கு மண்டல அலுவலகங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பட்டியல் தயாரிக்கப்படுவதாக, மாநகராட்சி தரப்பிலும் கூறப்பட்டது.

மேலும், மாநகராட்சி பகுதியில் 2006 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, முந்தைய நகரமைப்பு அதிகாரி ஒருவர் மூலம் பல ஆயிரம் கட்டடங்களுக்கு விதிகளை மீறி அனுமதி வழங்கப்பட்டது குறித்த விசாரணையும் நடைபெற்றது. இதில்,  உள்ளூர் திட்டக் குழுமத்தின் அதிகாரிகளின் கையெழுத்தையும் போலியாக போட்டு, முறைகேடாக கட்டட வரைபட அனுமதி வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்த புகார்கள் குறித்து விசாரணை நடப்பதாக, மாநகராட்சி தரப்பிலும் கூறப்பட்டு வந்தது. மாவட்ட ஆட்சியரும் விதிமீறல் கட்டடங்கள் குறித்து நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால், விதிமீறல் கட்டடங்கள் குறித்த விசாரணை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னணியில், மாநகராட்சியில் உயர் பதவியில் இருக்கும் வி.வி.ஐ.பி.யும் ஒருவர் எனக் கூறப்படுகின்றது.

இதற்கிடையில், ஆட்சியரை தலைவராகக் கொண்டு இயங்கிவரும் உள்ளூர் திட்டக் குழுமத்திலும் வசூல் வேட்டை நடப்பதாக, தற்போது புகார்கள் எழுந்துள்ளன. மதுரை மாநகராட்சி மற்றும் மாவட்டத்திலுள்ள் அனைத்து உள்ளாட்சி அமைப்புப் பகுதிகளிலும், குடியிருப்பு கட்டடங்களுக்கு 4 ஆயிரம் சதுர அடிக்கு மேலும், வர்த்தக கட்டடங்களுக்கு 2 ஆயிரம் சதுர அடிக்கு மேலும் உள்ளூர் திட்டக் குழுமத்தில்தான் அனுமதி பெற வேண்டும். மேலும், 25 ஆயிரம் சதுர அடிக்கு மேற்பட்ட பல அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான கட்டடங்களுக்கும் சென்னையிலுள்ள உள்ளூர் திட்டக் குழும இயக்குநர் அலுவலகத்தில் அனுமதி பெறவேண்டும். அதற்கு முன்னர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதித்து பரிந்துரை செய்யப்பட வேண்டும்.

இந்த வகையிலான கட்டடங்களுக்கு அனுமதி கொடுப்பதா, வேண்டாமா? கட்டடங்களில் விதிமீறல்கள் இருக்கின்றனவா? என ஆலோசித்து அனுமதி வழங்குவது குறித்து, பிப்ரவரி 26 ஆம் தேதி, மதுரை மாவட்ட உள்ளூர் திட்டக் குழும ஆய்வுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், அனுமதி பெறுவதற்காக வைக்கப்படவுள்ள கட்டட வரைபடங்களுக்கு ஒரு அதிகாரி பெயரைச் சொல்லி, உள்ளூர் திட்டக் குழுமத்தைச் சேர்ந்த அதிகாரிகள் சிலர் வசூலில் இறங்கியிருப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. அதிலும், அனுமதி பெறுவதற்காக சமர்ப்பிக்கப்படும் கட்டடத்தின் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய தொகையை தவிர்த்து, சதுர அடிக்கு ரூ. 3 முதல் ரூ. 5 வரை முறைகேடாகவும், கறாராகவும் வசூலிப்பதாகக் கூறப்படுகின்றது.

இதற்கு ஒப்புக்கொள்ளாதவர்களின் கட்டட வரைபடங்களை, ஆட்சியர் தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தில் வைக்கப்படமாட்டாது என, நிதி வசூல் ஊழியர்கள் கூறி வருவதாகத் தெரிவித்தார் நேர்மையான அதிகாரி ஒருவர்.

ஏற்கெனவே, மதுரை மாநகரப் பகுதியில் ஆயிரக்கணக்கில் விதிமீறல் கட்டடங்கள் இருக்கின்ற நிலையில், மேலும் பல விதிமீறல் கட்டடங்களுக்கு போலியான வரைபடங்கள் மூலம் உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதி பெற முயற்சி நடப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் இது குறித்து விரிவான விசாரணை நடத்தி, உள்ளூர் திட்டக் குழுமத்தில் நடைபெறும் வசூல் வேட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும்,  மீண்டும் விதிமீறல் கட்டடங்களுக்கு உள்ளூர் திட்டக் குழுமத்தில் அனுமதி கொடுப்பதைத் தடுக்க, ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Last Updated on Monday, 18 February 2013 08:56
 

கட்டடம் கட்ட இணையத்தில் விண்ணப்பிக்க அனுமதி : சென்னை மாநகராட்சியில் வருகிறது புதிய திட்டம்

Print PDF

தினமலர்       04.09.2012

கட்டடம் கட்ட இணையத்தில் விண்ணப்பிக்க அனுமதி : சென்னை மாநகராட்சியில் வருகிறது புதிய திட்டம்

சென்னை : பணிகளுக்காக சாலைகளை தோண்டும் அனுமதி பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, இணைய தளம் மூலம் அனுமதி வழங்கும் நடைமுறையை மாநகராட்சி விரைவில் கொண்டு வருகிறது. விதிமீறல் கட்டடங்கள் குறித்தும், இணையத்தளத்தில் பதிவு செய்ய முடிவு செய்துள்ளது.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகளுக்காக, தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் சாலைகள் கண்டபடி தோண்டும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு, பொதுமக்களாக இருந்தாலும், குடிநீர் வாரியம், மின் வாரியம், பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட சேவைத்துறைகளாக இருந்தாலும், மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெறவேண்டும். தோண்டிய இடத்தில், மீண்டும் அதேப் போல் சாலை அமைக்க தேவையான செலவு தொகையையும், கட்டணமாக மாநகராட்சிக்கு செலுத்த வேண்டியது கட்டாயம்.

இணைய தள அனுமதிஆனால், சேவைத்துறைகளும், பொதுமக்களும் முறையான அனுமதி கோரி விண்ணப்பித்தாலும், மாநகராட்சி அதிகாரிகள், குறித்த நாட்களுக்குள் அதற்கான அனுமதி கொடுப்பதில்லை. இழுத்தடிப்ப தாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில், சாலை வெட்டு பணி செய்வதற்கான அனுமதியை பெற, இணைய தளத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெறும் நடைமுறையை கொண்டுவர மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான, மாநகராட்சி அதிகார பூர்வ இணைய தளத்தில், பிரத்யேக வடிவமைப்பு செய்யப்படுகிறது.
 
என்ன நடக்கும்?
 
இதன்படி,
 
சேவைத்துறைகள், பொதுமக்கள் விண்ணப்பங்களை இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும். உடனடியாக ஒரு பதிவு எண் இணைய தளம் மூலமே வழங்கப்படும். இதை பயன்படுத்தி, பொதுமக்கள் விண்ணப்பத்தின் நிலை தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தை ஆய்வு செய்து அலுவலர்கள், கட்டணமாக செலுத்தவேண்டிய தொகை விவரங்களை இணைய தளத்திலேயே பதிவாக வெளியிடுவார்கள்.

உரிய கட்டணத்தை செலுத்தியதும், உரிய அனுமதி இணைய தளம் மூலமே வழங்கப்படும். சாலையை வெட்டும் காலம், பணி முடிக்க வேண்டிய காலம் பற்றிய விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்படும்.

அனுமதி பெற்ற சாலையை வெட்டுவது குறித்த விவரம் அடங்கிய நகல், பொதுமக்கள் பார்வைக்காக இணையதளத்திலேயே வெளியிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், காலதாமதம் மற்றும் முறைகேடுகளை தடுக்கவும் முடியும் என, மாநகராட்சி அதிகாரி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கட்டட ஆய்வும் பதிவு

மாநகராட்சி பகுதியில் கட்டடம் கட்ட அனுமதி பெற்றவர்கள் பணி துவங்கியதும், ஆரம்ப நிலையிலிருந்தே மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை இணையத்தளத்தில் பதிவு செய்யலாம். இதன்படி, கட்ட உரிமையாளர் கட்டுமான பணி குறித்து, குறிப்பிட்ட பகுதியில் உள்ள இளநிலைப் பொறியாளரிடம் தெரிவிக்க வேண்டும். இளநிலை பொறியாளர் கட்ட டத்தை நேரில் ஆய்வு செய்து, அறிக்கையாக இணையத்தில் விவரங்களை பதிவு செய்வார்.
கட்டடப்பணி முடியும் வரை, தொடர் ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு மாறாக கட்டடப் பணி நடந்தால் அந்த விவரங்களையும்

அதிகாரி பதிவு செய்வார். விதிமீறல் இருப்பின், அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதையும் இணைய தளத்திலேயே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இதன் மூலம், விதிமீறல் கட்டடங்கள் குறித்த விவரங்களை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். அதன் மூலம் கண்காணிப்பை அதிகரிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரி நம்பிக்கை

இந்த நடைமுறைகள் அனைத்தும் விரைவில் அமலுக்கு வர உள்ளது. இதற்காக இணையதளத்தில் உரிய, வடிவமைப்பை மாநகராட்சி செய்து வருகிறது. இது நடைமுறையில் சாத்தியம்தானா என, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது,"இதை செயல்படுத்துவதில், மேயரும், ஆணையரும் சிறப்புக்கவனம் செலுத்தி வருகின்றனர். வடிவமைப்பு இறுதிகட்டத்தில் உள்ளது.விரைவில் நடைமுறைக்கு வரும். இந்த திட்டம் வெற்றிகரமாக அமையும்,' என்றார்.
 


Page 22 of 96