Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்தளிப்பு: சென்னைக்கு செல்லும் சிரமம் தவிர்ப்பு

Print PDF
தினமலர்      23.12.2010

நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்தளிப்பு: சென்னைக்கு செல்லும் சிரமம் தவிர்ப்பு


கோவை:லே-அவுட் மற்றும் பெரிய கட்டடங்களுக்கான அனுமதி பெறுவதற்காக, சென்னைக்கு படையெடுக்கும் சிரமத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.புதிய லே-அவுட், பெரிய கட்டடங்கள் மற்றும் வணிக கட்டடங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரம், தமிழக அரசின் நகர ஊரமைப்புத் துறைக்கு மட்டுமே உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள உள்ளூர் திட்டக் குழுமம், புதிய நகர வளர்ச்சிக் குழுமங்கள் மற்றும் நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களுக்கும் குறிப்பிட்ட அதிகாரம் உள்ளது.இவற்றை நிர்வகிக்கும் உறுப்பினர் செயலர், மண்டல துணை இயக்குனர் ஆகியோர் மட்டுமே, 5 ஏக்கருக்குட்பட்ட லே-அவுட், 4 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான குடியிருப்புக் கட்டடம் மற்றும் 2 ஆயிரம் சதுர அடிக்கு அதிகமான வணிக கட்டடங்களுக்கு அனுமதி அளிக்க முடியும். இதற்கும் அதிகமான பரப்புள்ள லே-அவுட் மற்றும் கட்டடங்களுக்கு, அனுமதி அளிக்கும் அதிகாரம் நகர ஊரமைப்புத்துறை இயக்குனருக்கு மட்டுமே உள்ளது. இதனால், 5 ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் லே-அவுட் அமைப்பவர்களும், பல அடுக்கு மாடிக் கட்டடம் கட்டுவோரும் முறையான அங்கீகாரத்துக்காக சென்னைக்கு ஆண்டுக்கணக்கில் அலைய வேண்டியுள்ளது.அங்கீகாரம் பெறுவதற்காக, பல லட்ச ரூபாய் செலவழித்தாலும் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை என்பது புரமோட்டர்கள் மற்றும் கட்டுமானதாரர்களின் நீண்ட கால குமுறல். இதனால், நகர ஊரமைப்புத்துறை இயக்குனரின் அதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, மண்டல அலுவலர்களுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமென்று பல்வேறு அமைப்புகளும் அரசை வலியுறுத்தி வந்தன.ஆட்சியின் முடிவு காலத்தில் இந்த கோரிக்கையை ஏற்று, நகர ஊரமைப்புத் துறையின் அதிகாரம் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. துறையின் இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், இதற்கான சுற்றறிக்கையை தமிழகம் முழுவதுமுள்ள உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர், மண்டல துணை இயக்குனர்கள் மற்றும் கலெக்டர்களுக்கும் கடந்த 20ம் தேதி அனுப்பியுள்ளார்.அதன்படி, கிராம ஊராட்சிகளில் 10 ஏக்கர் பரப்பில் லே-அவுட் அமைப்பதற்கு திட்ட அனுமதி மற்றும் தொழில்நுட்ப அங்கீகாரத்தை அந்தந்த பகுதியிலுள்ள திட்டக்குழும உறுப்பினர் செயலர் மற்றும் நகர ஊரமைப்புத்துறை மண்டல துணை இயக்குனர்களே வழங்கலாம். மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் பழைய நிலையே தொடரும்.கட்டடங்களைப் பொறுத்தவரை, குடியிருப்புக் கட்டடங்களாக இருந்தால், 2,500 சதுர மீட்டர் பரப்பிலான தரை தளம், 15 மீட்டர் உயரமுள்ள கட்டடங்களுக்கு இவர்களே அனுமதி வழங்கலாம்; எல்லா உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இது பொருந்தும். வணிக மற்றும் கல்வி நிறுவன கட்டடங்களுக்கும் 2,500 சதுர மீட்டர் வரையிலும் அனுமதி வழங்க அதிகாரம் தரப்பட்டுள்ளது. பள்ளிக் கட்டடங்களுக்கு இதுவரை தரைதளம் மற்றும் முதல் தளத்துக்கு மட்டுமே, மண்டல அலுவலகங்களில் அனுமதி தரப்பட்டு வந்தது. தற்போது, தரைதளத்துடன் 2 தளங்கள் வரை கட்டுவதற்கு அதிகாரம் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி சம்பத் கமிட்டியின் பரிந்துரைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டுமென்றும் அந்த சுற்றறிக்கை வலியுறுத்தியுள்ளது.மனைகளைப் பிரிப்பது, மனைகளை இணைப்பது, திட்டப் பகுதிகளில் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதிலும் முன்பிருந்ததை விட, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அனுமதி கோரும் விண்ணப்பங்களின் மீது 30 நாட்களுக்குள் இறுதி முடிவெடுக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த உத்தரவால், தமிழகம் முழுவதிலிருந்தும் லே-அவுட் மற்றும் கட்டட அனுமதிக்காக சென்னைக்கு படையெடுக்க வேண்டிய அவதி தவிர்க்கப்பட்டுள்ளது; லஞ்சத்தின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. இதனால், கிராம ஊராட்சிகளில் அங்கீகாரமற்ற லே-அவுட்கள் அதிகரிப்பது தடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். திருந்துவார்களா?கிராம ஊராட்சிகளில் புதிய லே-அவுட்களுக்கு அந்தந்தப் பகுதியிலேயே அனுமதி பெறலாம் என்றாலும், ஊராட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பு அவசியம். கொடுப்பதை வாங்கிக் கொண்டு, இத்தகைய லே-அவுட்களை அனுமதிப்பதே அவர்கள் தான். அவர்கள் திருந்தினால் மட்டுமே, இத்தகைய அதிகாரப் பகிர்வுக்கு உண்மையான பலன் கிடைக்கும்.பேரூராட்சிகளிலும் 10 ஏக்கர் வரையிலும் லே-அவுட் அமைக்க, திட்டக் குழுமங்களில் அனுமதி அளித்தால், அங்கேயும் சட்டவிரோத லே-அவுட் உருவாவதைத் தடுக்கலாம். செயல் அலுவலர்களின் சொத்துக் குவிப்பையும் கட்டுப்படுத்தலாம்.
Last Updated on Friday, 24 December 2010 09:53
 

துறையூரில் குடிநீர் வழங்கல் பாதிக்கும் அபாயம் : நிலுவைத்தொகை பிரச்னை : தவிக்கும் "நகராட்சி நிர்வாகம்

Print PDF
தினமலர்       23.12.2010

துறையூரில் குடிநீர் வழங்கல் பாதிக்கும் அபாயம் : நிலுவைத்தொகை பிரச்னை : தவிக்கும் "நகராட்சி நிர்வாகம்

துறையூர்: துறையூர் நகராட்சி குடிநீர் வாரியத்துக்கு நிலுவைத் தொகை செலுத்தாததால் தண்ணீர் நிறுத்தும் அபாயமுள்ளதாக வெளியான தகவலால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

துறையூர் நகராட்சியில் 24 வார்டுகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். நகராட்சி பகுதியில் குடிநீருக்கு பயன்படுத்த முடியாத உப்புநீர் மட்டுமே இருந்ததால் காவிரி குடிநீர் கேட்டு மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 1996- 2001 தி.மு.க., ஆட்சியில் துறையூர் நகராட்சிக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் 33 கோடி ரூபாய் செலவில் அமலாக்கப்பட்டது. முதல் கட்டமாக நகரில் பழைய இணைப்பு வைத்திருந்தவர்களுக்கு அவசரமாக காவிரி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. காவிரிக்குடிநீர் பெற உயர்த்தப்பட்ட புதிய டிபாஸிட் தொகை, நிலுவை குடிநீர் கட்டணம் செலுத்தாத பழைய இணைப்புதாரர்கள் உள்ளதாக தெரிகிறது.

புதிய குடிநீர் இணைப்பு வழங்க பகிர்மான குழாய் பதிக்கும் பணிகள் நடந்து கடந்த மூன்றாண்டுக்கு முன் புதிய இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. புதிய இணைப்பு வழங்கப்பட்டதில் அரசின் விதிமுறைப்படி ஏழு நாளிலிருந்து குடிநீர் கட்டணம் செலுத்த வேண்டும். இணைப்பு வழங்கப்பட்டதிலிருந்து இன்று வரை குழாயில் குடிநீர் வரவில்லையென பலரும் புகார் கூறுகின்றனர். இவர்களது நிலுவைத் தொகையும் வசூலாகும் வாய்ப்பில்லாமல் உள்ளது. நகராட்சியில் குடிநீர் பிரச்சனை தீர போதுமான அலுவலர்கள், பணியாளர்கள் நகராட்சியில் இல்லாததும், அனைத்து வார்டுகளிலும் குழிவெட்டி பிடிப்பது, மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவது, ப்ளோ கண்ட்ரோல் வால்வு குடிநீர் இணைப்புகளில் பொருத்தாதது என பல காரணங்கள் தொடர்ந்து கூறப்படுகிறது.

கடந்த 19, 21ம் தேதியில் நகரில் குடிநீர் விநியோகிக்கவில்லை. குடிநீர் வடிகால் வாரியத்திற்கு நகராட்சி செலுத்த வேண்டிய எட்டு லட்ச ரூபாய் நிலுவைத்தொகை செலுத்தாததால், குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்போவதாக குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் பரவியது.

துறையூர் நகராட்சி கமிஷனர் (பொ) மற்றும் இன்ஜினியர் ரவிச்சந்திரன் கூறியதாவது: குடிநீர் வாரியத்திற்கு நிலுவைத் தொகை செலுத்த வேண்டியுள்ளது. அதனால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை நிறுத்தப்போவதாக பரப்பப்படும் செய்தி தவறு. இதுகுறித்து நகராட்சித் தலைவர், துணைத்தலைவருக்கு தெரிவிக்கப்பட்டது. நகரில் குடிநீர் பிரச்னை தீர அரசு கவனம் செலுத்தி வருகிறது. கவுன்சிலர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். நிலுவைத் தொகை செலுத்த இணைப்புதாரர்களுக்கு நகராட்சி சார்பில் ஏற்கனவே கடிதம் அனுப்பியதில் 40 சதவீதம் வசூலானது. மீதமுள்ளோரும் நிலுவைத்தொகை வழங்கி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 

20 கட்டிடங்களுக்கு சீல் அனுமதியின்றி கட்டிய 29 கட்டிடங்கள் இடிப்பு

Print PDF
தினகரன்       17.12.2010

20 கட்டிடங்களுக்கு சீல் அனுமதியின்றி கட்டிய 29 கட்டிடங்கள் இடிப்பு

புதுடெல்லி, டிச. 17: டெல்லியில் அனுமதியின்றி கட்டப்பட்ட 29 கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. 20 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

கிழக்கு டெல்லியின் லட்சுமி நகரில் கடந்த மாதம் 15ம் தேதி ஐந்து மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 70 பேர் பலியானார்கள். இந்த கட்டிடத்தில் 2 மாடிகள் அனுமதியில்லாமல் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாநகராட்சி முடுக்கிவிட்டுள்ளது.

நேற்று முன்தினம் ஒரேநாளில் வடமேற்கு டெல்லி மற்றும் கிழக்கு டெல்லியில் 29 கட்டிடங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகள் இடிக்கப்பட்டன. 20 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

ஷாதரா மண்டலத்தில் உள்ள பர்ஷ் பஜார், பாண்டவ் நகர், சஷி கார்டன், காந்தி ஆகிய இடங்களில் 22 கட்டிடங்களிலும், நஜப்கர் மண்டலத்தில் உள்ள ஜமினி பார்க், ராணாஜி என்க்ளேவ், மெயின் ஜரோடா சாலை, வசந்த் கஞ்ச், சாகர்பூர் மேற்கு, கீதாஞ்சலி பார்க், நிலோத்தி ஆகிய இடங்களில் தலா ஒரு கட்டிடத்திலும் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகளை மாநகராட்சி அதிகாரிகள் இடித்தனர்.

ஷாதரா மண்டலத்தில் உள்ள பாண்டவ் நகர், மந்தவளி, லட்சுமிநகர், காந்தி நகர் ஆகிய இடங்களில் 17 கட்டிடங்களுக்கும், பாலம் விரிவு, துவாரகா, நஜப்கர் ஆகிய இடங்களில் 3 கட்டிடங்களுக்கும் சீல் வைக்கப்பட்டது. கிழக்கு டெல்லியின் ஷாதரா மண்டலத்தில் மட்டும் கடந்த ஒரு வாரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட 150 கட்டிடங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

கட்டிடங்கள் இடிக்கும் போது சம்பந்தபட்ட பகுதி களில் பெரும் பரபரப்பு நிலவியது.
 


Page 27 of 96