Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

மாநகரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 435 அடுக்குமாடி கட்டடங்களுக்கு சீல் நகர ஊரமைப்பு இயக்குனர் எச்சரிக்கை

Print PDF

தினகரன்              15.12.2010

மாநகரில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 435 அடுக்குமாடி கட்டடங்களுக்கு சீல் நகர ஊரமைப்பு இயக்குனர் எச்சரிக்கை

திருப்பூர், டிச. 15: திருப்பூரில் உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள 435 அடுக்குமாடி கட்டட உரிமையாளர்களுக்கு இன்று முதல் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளதாகவும், தொடர்ந்து அனுமதிக்கேட்டு விண்ணப்பிக்காவிட்டால் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகர ஊரமைப்பு இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான பனியன் கம்பெனிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இரண்டு மாடிகளுக்குள் கட்டடங்கள் கட்டும்போது, மாநகராட்சிடமோ, நகராட்சியிடமோ அல்லது பஞ்சாயத்து நிர்வாகங்களிடமோ முறைப்படி முன் அனுமதி பெற வேண்டும். மூன்று மாடியோ அல்லது அதற்கு மேலாகவோ கட்டடங்கள் கட்டுவதற்கு நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 49ன் கீழ் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் முன் அனுமதி பெற்று உள் கட்டமைப்பு கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால் திருப்பூரில் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெறாமல் தற்போது, ஏராளமான ஐந்து மாடி கட்டடங்கள் உருவாகி உள்ளது. இப்படி ஐந்து மாடி கட்டடங்கள் கட்டுவதற்கு வணிக நிறுவனங்களுக்கு ஒரு மீட்டருக்கு ரூ. 15.80 வீதம் சுமார் ரூ. 70 ஆயிரம் வரையும், பனியன் நிறுவனங்களுக்கு ஒரு மீட்டருக்கு ரூ. 7 வீதம் சுமார் 35 ஆயிரம் வரையும் உள்ளூர் திட்டக்குழுமத்திற்கு செலுத்த வேண்டும். மேலும் திட்டக்குழுமத்திடம் அனுமதி பெற வேண்டுமானால், ஐந்து மாடி கட்டடத்திற்கு வட, தென்புறம் என ஐந்து அடிக்கு இடமும், கட்டடத்தின் பின்புறம் 10 அடி அகலத்திற்கு இடமும் விட வேண்டும். இதேபோல் கட்டடத்தின் முன்புறம் வானங்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி செய்திருக்க வேண்டும். குறிப்பாக போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத நிலையில் கட்டடத்திற்கான இடம் இருக்க வேண்டும். அப்போது தான் உள்ளூர் திட்டக் குழுமம் அங்கீகாரம் அளிக்கும். ஆனால் திருப்பூரில் உள்ள பெரும்பாலான அடுக்குமாடி கட்டடங்களுக்கு இந்த வசதிகள் ஏதும் இல் லை. கட்டட உரிமையாளர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்றப்படி கட்டடங்களை எழுப்பியுள்ளனர்.

இப்படிப்பட்ட ஐந்து மாடி கட்டடங்கள் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த முக்கிய ரோடுகளில் அமைந்திருப்பதால், இந்த கட்டடங்களில் வாடகைக்கு இருக்கும் மற்றவர்கள் தங்களது இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூ றாக ரோட்டில் நிறுத்தி விடுகின்றனர். இதனால் மேலும் பல இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படக்கூடிய நிலை உருவாகிறது. அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களால் அரசுக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் உள்ளுர் திட்டக்குழும அலுவலகத் தில் நகர் ஊரமைப்பு இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் தலைமையில் பொதுமக்கள் குறை களைவுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துக்கொண்ட பலரும், திருப்பூரில் அனுமதி பெறாத கட்டடங்கள் குறித்து புகார் தெரிவித்தனர். இதைதொடர்ந்து நகர் ஊரமைப்பு இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால் நிருபர்களிடம் கூறுகையில், ஆண்டுதோறும் இதுபோன்று குறைகளைவு கூட்டம் நடத்தப்படும். அப்போது மக்கள் தங்கள் பிரச்னைகள் குறித்து தெரிவிப்பர். திருப்பூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 435 அடுக்குமாடி கட்டடங்கள் உள்ளூர் திட்டக்குழுமத்தின் அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு உள்ளூர் திட்டக்குழுமத்திடமிருந்து நாளை (இன்று) முதல் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும். நோட்டீஸ் கிடைத்த 30 நாட்களுக்குள் நகர ஊரமைப்புச் சட்டம் 56 பிரிவு 57ன் கீழ் உள்ளூர் திட்டக்குழுமத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்காதவர்களின் கட்டடங்களுக்கு சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

சென்னையில் 3 ஆண்டுகளில் 27 கட்டிடங்களுக்கு "சீல்" வைப்பு: 6,500 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்; விதியை மீறி கட்டியதால் நடவடிக்கை

Print PDF

மாலை மலர்                   10.12.2010

சென்னையில் 3 ஆண்டுகளில் 27 கட்டிடங்களுக்கு "சீல்" வைப்பு: 6,500 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்; விதியை மீறி கட்டியதால் நடவடிக்கை

சென்னை, டிச. 10- சென்னையில் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுத்து வருகிறது. 27-7-2007-க்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்களை பாதுகாக்க அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. அதன் பிறகு கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கடந்த 3 ஆண்டுகளில் 9 ஆயிரத்த 816 வீடுகள், 698 வணிக நிறுவனங்கள், 20 நிறுவனங்கள், 66 தொழிற்சாலைகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் பெரும்பாலான கட்டிடங்களில் அனுமதி பெற்றதைவிட கூடுதலாக மாடிகள் கட்டியது, கூடுதல் பரப்பளவில் கட்டியது, பார்க்கிங் வசதி செய்யாததது உள்பட பல முறைகேடுகள் செய்துள்ளனர்.

இதில் 27 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 6 ஆயிரத்து 438 கட்டிடங்களின் பணிகளை நிறுத்தும்படி நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் குறித்த காலக்கெடு முடிந்த 4,161 கட்டிடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடும் நடவடிக்கைகள் இருந்தும் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இதற்கு பல்வேறு தலையீடுகள் காரணமாக உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை 10 ஆயிரத்து 600 கட்டிடங்கள்தான் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் விதிகளுக்கு முரணாக கட்டப்பட்டுள்ளது. அவைகள் மீதும் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிவிதி இல்லை

Print PDF

தினகரன்                07.12.2010

மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு அனுமதி இல்லாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனிவிதி இல்லை

புதுடெல்லி, டிச.7: அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சியில் தனி விதி எதுவும் இல்லைஎன்று மாநகராட்சி கமிஷனர் கே.எஸ். மெஹ்ரா கூறினார்.

லட்சுமி நகர் லலிதாபார்க் அருகே இருந்த 5 மாடி கட்டிடம் கடந்த 15ம் தேதி இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 70 பேர் பலியாயினர். இதைத்தொடர்ந்து அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், ‘அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்களின் மீது எவ்வளவு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்? அதற்கு என தனியாக விதி எதுவும் உள்ளதா?’ என்று டெல்லியை சேர்ந்த சஞ்சய் கன்னா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி மாநகராட்சிக்கு மனுச் செய்து இருந்தார்.

அதற்கு மாநகராட்சி சார்பில் கமிஷனர் கே.எஸ்.மெஹ்ரா அனுப்பியுள்ள பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:

மாநகராட்சி எல்லைக்குள் அனுமதி இல்லாமல் கட்டப்படும் கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க தனியாக சட்டவிதி எதுவும் இல்லை. அதேபோல எவ்வளவு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கால அவகாசமும் வரையறுக்கப்படவில்லை.

அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவதாக தகவல் அல்லது புகார் வந்தால் மாநகராட்சியில் பணிபுரியும் இளநிலை பொறியாளர் நேரில் சென்று விசாரணை நடத்துவார். அதன்பிறகு தேவைப்பட்டால் மாநகராட்சி விதியின்படி நடவடிக்கை எடுப்பார்.

2007 ம் ஆண்டு முதல் இதுவரை விதி முறைகளை மீறி கட்டிடம் கட்ட லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி வழங்கிய 533 மாநகராட்சி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.2009ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010ம் ஆண்டு ஜூன் வரை சிவில் லைன்ஸ் பகுதியில் இருந்து மட்டும் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டுவதாக சுமார் 7,516 புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு மாநகராட்சி கமிஷனர் கே. எஸ். மெஹ்ரா அனுப்பியுள்ள பதிலில் கூறியுள்ளார்.

 


Page 29 of 96