Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Urban Planning

நகர ஊரமைப்பு இயக்குநரிடம் தொழில் வர்த்தக சங்கம் மனு

Print PDF
 தினமணி                25.11.2010

நகர ஊரமைப்பு இயக்குநரிடம் தொழில் வர்த்தக சங்கம் மனு

மதுரை, நவ.24: உயரமான கட்டடங்களுக்கான வரைபட அனுமதி வழங்கும் முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநில நகர ஊரமைப்பு இயக்குநரிடம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இச்சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினலேல், தமிழ்நாடு நகர ஊரமைப்பு இயக்குநர் பங்கஜ்குமார் பன்சாலிடம் அளித்த மனு விவரம்:

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் கட்டப்படும் 50 அடிக்குக் குறைவான உயரமுள்ள கட்டடங்களுக்கு வரைபட அனுமதியை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்றால் போதுமானது என்று உடனடியாக அறிவிக்கவேண்டும்.

புதிதாகக் கட்டப்படும் பெரிய கட்டடங்களுக்கு கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான கட்டணத்தை அரசு வசூலித்து வருகிறது. ஒரு சதுர மீட்டருக்கு 375 என நிர்ணயிக்கப்பட்ட இக் கட்டணம், 2008-ம் ஆண்டு 250 எனவும், 2009-ல் 125 எனவும் குறைக்கப்பட்டது. ஆனால், எந்த இதர வசதிகளையும் அரசு செய்து தருவதில்லை. எனவே, இக்கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்.

வட்டாரத் திட்டப் பகுதி, உள்ளூர் திட்டப் பகுதி மற்றும் புதிய நகர அபிவிருத்திப் பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாஸ்டர் பிளான் ஒன்று அரசால் ஏற்படுத்தப்பட்டு வணிக, குடியிருப்பு, தொழிற்சாலை போன்ற உபயோகத்துக்கு என்று தனித்தனியாக பகுதிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், 10 ஆண்டுகள் முடிந்த பின்னரும் இத்தகைய மாஸ்டர் பிளான்கள் மறுபரிசீலனை செய்யப்படவில்லை. எனவே, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவ்வப்போது ஏற்படும் தேவைக்கு ஏற்ப இந்த பிளானை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தன.

 

கலப்பட பொருட்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் உடனடி ஆய்வு

Print PDF

தினகரன்                 25.11.2010

கலப்பட பொருட்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் உடனடி ஆய்வு

புதுடெல்லி, நவ. 25: கலப்பட பொருட்களை கொண்டு மோசமாக கட்டப்பட்ட கட்டிடங்களை ஆராய்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுள்ளார்.

கிரேட்டர் கைலாஷ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்தர் சாப்ரா. இவருக்கும், இவரது சகோதரருக்கும் சேர்த்து கிரேட்டர் கைலாஷில் 500 சதுர மீட்டர் இடம் உள்ளது. இதில் நிலநடுக்கத்தினாலும் பாதிக்காத வகையில் கட்டிடம் கட்டி தருமாறு, ஷோமேன் கன்ஸ்ட்ரக்ஷன் அண்டு இம்பெக்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

இதன்படி, அந்த கட்டுமான நிறுவனம் கட்டிடம் கட்டி கொடுத்தது. ஆனால், கட்டிடத்தில் வெகு சில நாட்களிலேயே விரிசல் விழுந்தும், சேதமும் அடைந்தன. இதனால் மோசமான பொருட்களை பயன்படுத்தி கட்டிடம் கட்டியிருப்பதாக அவர்கள் ராஜேந்தர் நம்பினார். இதனால் பொருளாதார குற்றப்பிரிவில் அவர் புகார் செய்தார்.

போலீசார் கட்டிடத்தை ஆராய்ந்ததில், ராஜேந்தர் கூறுவது உண்மை என்று தெரிந்தது. இதையடுத்து அவரது புகாருக்கு சான்று அளித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடருமாறு தெரிவித்தனர்.

இதன்படி கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ராஜேந்தர் வழக்கு தொடர்ந்தார். மாஜிஸ்திரேட் ராகேஷ் பண்டிட் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நிறுவனத்தின் 4 அதிகாரிகள் மீது போலீசார் வழக்கு பதிய மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது மாஜிஸ்திரேட் ராகேஷ் பண்டிட் கூறியதாவது:

கிழக்கு டெல்லி லட்சுமி நகரில் தரமற்ற மற்றும் கலப்பட பொருட்களை கொண்டு கட்டப்பட்ட 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 70 பேர் இறந்தனர். இந்த வழக்கிலும் தரமற்ற மற்றும் கலப்பட பொருட்களை கொண்டு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. இதுபோன்ற கட்டிடங்களை ஆராய்ந்து மாநில அரசும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனெனில், இவை மக்கள் அதிகம் நிறைந்த பகுதிகளில் இருக்கின்றன. அங்கு அசம்பாவிதம் நிகழும்போது பல உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இந்த வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை வரும் 28ம் தேதி நடைபெறும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

 

விதிகளை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி

Print PDF

தினமலர்          24.11.2010

விதிகளை மீறிய கட்டடங்களுக்கு அனுமதி

ஊட்டி: "கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறிய கட்டியுள்ள கட்டட உரிமையாளர்களிடம் கையூட்டு பெற்று கட்டட அனுமதி வழங்கியுள்ளார்,' என நகராட்சி தலைவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடலூர் நகர மன்ற கவுன்சிலர்கள் சார்பில் தமிழ்செல்வன் மற்றும் செல்லதுரை ஆகியோர் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது: கூடலூர் நகராட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நகர மன்ற தலைவராக உள்ள அன்ன புவனேஸ்வரி மீதுள்ள குற்றச்சாட்டுகள்: நகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்ட தொகுப்பு வீடுகளை தனது சொந்தங்களுக்கு ஒதுக்கியது; அந்த பகுதிகளுக்கு நடைபாதை அமைத்து கொடுத்தது. மக்கள் நலத்திட்ட பணிகளை தனது பினாமியும், தனது சகோதரியின் கணவர் பெயரில் ஒப்பந்தம் எடுத்தது; தனது 8வது வார்டின் பணிகளை மேற்கொள்ளாமலேயே அகாரிகளை மிரட்டி, விதிமுறைகளை மீறி பல லட்சம் ரூபாய் மக்கள் வரிப்பணித்தை கையாடல் செய்தது. தெருவிளக்குகளின் பராமரிப்புக்காக 4 மாதங்களுக்கு முன்பு தெருவிளக்கு உதிரி பாகங்கள் வாங்கியதில் ஊட்டியில் உள்ள தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து தரமற்ற பொருட்களை வாங்கி அதில் பெரும் தொகையை முறைகேடு செய்தார். அதற்கான பில் தொகையை கையொப்பமிட்டு ஒதுக்கீடு செய்து தருமாறு நகராட்சி பொறியாளரை வற்புறுத்தி வருகிறார்.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி கட்டியுள்ள கட்டட உரிமையாளர்களிடம் பல லட்சம் ரூபாய் கையூட்டு பெற்று கட்டட அனுமதியும் கதவு எண்ணும் வழங்கினார். நகராட்சி வாகனத்தை தனது சொந்த காரியங்களுக்கு பயன்படுத்துகிறார். நகர மன்றத்தில் உள்ள "மினிட்' புத்தகத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து பல்வேறு ஊழல் முறைகேடுகளை செய்துள்ளார். டெண்டர் விடுவதில் விதிமுறையை கடைபிடிக்காமல் தமது விருப்பம் போல ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து கொடுத்துள்ளார். இதனால், நகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக பணியாளர்கள் நியமனத்தில் பல லட்சம் ரூபாய் வசூல் செய்துள்ளார். இனியும் இவர் நீடித்தால் நகராட்சியின் நிதியை பெருமளவில் மோசடி செய்வார். எனவே, இந்த புகார் குறித்து விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. "இந்த மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,' என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. "இதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்துவோம்,' என கவுன்சிலர்கள் கூறி சென்றனர்.

 


Page 32 of 96