Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2 புரோட்டா கடைகளுக்கு பூட்டு

Print PDF

தினமணி 06.05.2010

2 புரோட்டா கடைகளுக்கு பூட்டு

திருநெல்வேலி,மே 5: திருநெல்வேலி நகரத்தில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 2 புரோட்டா கடைளை மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பூட்டினர். மேலும் ஹோட்டல்கள், டீ கடைகளில் சுகாதாரமற்ற முறையில் தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மாநகரத்தில் உள்ள ஹோட்டல்கள், புரோட்டா கடைகள், டீ கடைகள், சாலையோர உணவகங்கள் ஆகியவற்றில் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு, விற்கப்படுவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன. அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரன், மாநகர சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, மாநகர சுகாதார அலுவலர் கலு. சிவலிங்கம் தலைமையில் உணவு ஆய்வாளர்கள் ஏ.ஆர். சங்கரலிங்கம், காளிமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் சாகுல்ஹமீது, முருகேசன், சுப்பிரமணியன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் திருநெல்வேலி நகரம் ரத வீதிகள், கூலக்கடை பஜார் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

மொத்தம் 25 ஹோட்டல்கள், உணவகங்களில் இச் சோதனை நடைபெற்றது. மேலும் 100-க்கும் மேற்பட்ட டீ கடைகள், புரோட்டா கடைகள், சாலையோர உணவகங்களிலும் சோதனை நடைபெற்றது.

இதில் தெற்கு மற்றும் வடக்கு ரத வீதிகளில் உள்ள 2 புரோட்டா கடைகள் உணவுக் கலப்பட தடைச் சட்டத்தின் அனுமதி இன்றியும், உரிமம் இல்லாமலும் செயல்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டினர். இதேபோல, சுகாதாரமற்ற முறையில் தயாரித்து விற்பனைக்கு வைக்கப்பட் டிருந்த வடை உள்ளிட்ட உணவுப் பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அழித்தனர். சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்தால் கடைக்காரர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.