Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி வளாகத்தில் வலம் வரும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை

Print PDF

தினமணி    14.05.2010

மாநகராட்சி வளாகத்தில் வலம் வரும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை

சேலம், மே 13: சேலம் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் உலாவும் இடைத் தரகர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி எச்சரித்துள்ளார்.

மாநகராட்சி மைய அலுவலகத்தில் குடிநீர், சொத்து, வருமான வரி செலுத்துதல் மற்றும் பிறப்பு இறப்புச் சான்றிதழ், கட்டட அனுமதி சான்றிதழ் பெறுதல் போன்றவற்றுக்காக நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதில், தேவையான சான்றிதழ் உடனடியாக கிடைக்கப் பெறாமல் அலைக்கழிக்கப்படும் பொதுமக்களிடம் பணம் பெற்றுக்கொண்டு சான்றிதழ் வாங்கிக் கொடுப்பது, விண்ணப்பங்கள் எழுதிக் கொடுப்பது போன்ற பணிகளை இடைத்தரகர்கள் செய்து வந்தனர்.

மைய அலுவலகத்துக்குள் இடைத்தரகர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவே இங்குள்ள இரண்டு நுழைவு வாயில்களில் ஒன்று கடந்த சில மாதங்களாகப் பூட்டப்பட்டு கிடந்தது. இந்நிலையில் மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்தது.

இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் கே.எஸ்.பழனிசாமி, மைய அலுவலகங்களில் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு பிரிவு அலுவலகங்கள் எதிரிலும் கூடி நின்ற பொதுமக்களிடம் அவர்கள் எதற்காக நிற்கின்றனர்?, என்ன பிரச்னை என்று கேட்டார். மேலும் அங்கிருந்த இடைத்தரகர்களை அவர் எச்சரித்தார்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சியில் பொதுமக்களுக்கு ஏதாவது பணிகள் நடைபெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையே அணுக வேண்டும். அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னைச் சந்தித்து முறையிடலாம். மைய அலுவலகத்தில் இதுபோல் உலாவும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.