Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் பிரச்னை: தமிழக அரசுக்கு மனு அனுப்பினால் பரிசீலிக் கப்படும்

Print PDF

தினமணி    17.05.2010

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் பிரச்னை: தமிழக அரசுக்கு மனு அனுப்பினால் பரிசீலிக் கப்படும்

உதகை, மே 16: உதகை நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை ஒருமுறை வரன்முறைப்படுத்தும் வகையிலான திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு தயாராக உள்ளதாக மத்திய தகவல் தொழிற்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்தார்.

மேலும், இதற்காக மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பினால், இதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும், உதகை அரசினர் தாவரவியல் பூங்காவில் மத்திய அரசின் நிதியின் கீழ் ரூ.5 கோடி செலவில் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

உதகையில் அரசினர் தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 114வது மலர்க்காட்சியின் நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஆ.ராசா பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்

அவர் பேசியதாவது:

உதகையில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர்க் காட்சி மிக முக்கியமானது. ஆண்டுதோறும் மலர்க் காட்சிக்கு மட்டுமின்றி, உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சியில் இச்சிறிய மாவட்டத்திற்கு ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் இம்மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் மிகப்பெரும் பாதிப்புகள் ஏற்பட்டபோது தமிழக அரசு எடுத்த விரைவான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகளும் பாராட்டியுள்ளன. திமுக அரசு கலைஞர் காப்பீட்டுத் திட்டம், குடிசை வீடுகளை காங்கிரீட் வீடுகளாக மாற்றுதல், பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பயிலும் முதல் தலைமுறை மாணவருக்கு கட்டண சலுகை உள்ளிட்ட பல்வேறு நல்ல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.

உதகை நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்கள் தொடர்பான பிரச்னை தற்போது உச்சநீதி மன்றம் வரை சென்றுள்ளது. இப்பிரச்னையை சுற்றுச்சூழல் பாதுகாப்பு நோக்கோடும் கையாள வேண்டும். வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும். இருப்பினும் இதில் பாதிக்கப்பட்டுள்ளவர்களையும் பாதுகாக்கும் நோக்கில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களை ஒரு முறை வரன்முறைப்படுத்தும் திட்டம் தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது.

எனவே, இப்பிரச்னையில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பரிசீலனை மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கலாம். அந்த மனுக்கள் தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு உரிய மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கு தமிழக அரசும் தயாராகவே உள்ளது. இந்த ஒருமுறை அளிக்கப்படும் வாய்ப்பு தவிர, மீண்டும் விதி மீறல்கள் இருக்கக் கூடாது.

இத்தகைய முடிவு மகிழ்ச்சியாக இருக்கும் அதே நேரத்தில் வருத்தமளிப்பதாகவும் உள்ளது. உதகை அரசினர் தாவரவியல் பூங்காவை தமிழக அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் மேம்படுத்தி வரும் நேரத்தில், மத்திய அரசின் நிதியுதவியாக ரூ.5 கோடி பெற்று இப்பூங்காவை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் ராசா குறிப்பிட்டார்.

தமிழக கதர் வாரியத்துறை அமைச்சர் இளித்துரை ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக், தோட்டக்கலைத் துறை இயக்குநர் டாக்டர் சந்திரமோகன், தமிழக அரசின் முன்னாள் தலைமைக்கொறடா பா.மு.முபாரக் உள்ளிட்டோரும் பேசினர்.