Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குமரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டுவோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்

Print PDF

தினகரன் 28.06.2010

குமரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டுவோர் மீது நடவடிக்கை: ஆட்சியர்

நாகர்கோவில், மே 27: கன்னியாகுமரியில் அனுமதியின்றி தங்கும் விடுதிகள் கட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆட்சியரைத் தலைவராகவும், வன அலுவலர், மீன்வள உதவி இயக்குநர், நகராட்சி நிர்வாக இயக்குநர், பேரூராட்சிகள் உதவி இயக்குநர், மாவட்ட தொழில் மைய மேலாளர், ஊரமைப்புத் துறை துணை இயக்குநர், மாசுக்கட்டுப்பாடு வாரிய உதவி செயற்பொறியாளர் ஆகியோரை உறுப்பினர்களாகவும் கொண்ட கன்னியாகுமரி மாவட்ட கடற்கரை மேலாண்மைக் குழு செயல்பட்டு வருகிறது.

இக் குழு கடற்கரை ஒழுங்குமுறை விதிகள் 1991-ஐ செயல்படுத்தி வருகிறது. கடல் மேல்மட்ட அலையிலிருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் எவ்விதக் கட்டடம், அபிவிருத்தி பணிகளுக்கு உரிய ஒப்புதல் பெற வேண்டும். கன்னியாகுமரி பேரூராட்சியில் இக் குழுவின் அனுமதியின்றி கட்டடம் கட்டுவது தொடர்பாக புகார் மனுக்கள் ஏற்கெனவே பெறப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடற்கரை மேலாண்மைக் குழுவின் 43-வது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுப்படி அதிகாரிகள் குழுவினர் கன்னியாகுமரி சன்னதி தெரு, கோவளம் சாலை, சர்ச் தெருக்களில் கட்டப்பட்டு வரும் 12 இடங்களில் ஆய்வு நடத்தியது.

ஆய்வின்போது பெறப்பட்ட அனுமதிக்கு அதிகமாக தளங்கள் கட்டுவதும், முன்அனுமதியின்றி கட்டடங்கள் கட்டுவதும் அறியப்பட்டன. அவ்வாறு கட்டடங்கள் கட்டக் கூடாது என்றும், கட்டடப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றால் நகராட்சிகள் சட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின்கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது.

கன்னியாகுமரி பேரூராட்சி பகுதியில் கடற்கரை ஒழுங்கு பிராந்தியத்துக்குள் வரும் அனைத்துக் கட்டடங்களும், மாவட்ட கடற்கரை மேலாண்மைக் குழு மற்றும் பேரூராட்சியிடம் அனுமதி பெற்ற பின்னரே கட்டப்பட வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.