Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைக்கு சீல்

Print PDF

தினமணி 01.06.2010

பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடைக்கு சீல்

நாகர்கோவில், மே 31: நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்திய கடைக்கு அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனர்.

நாகர்கோவில் நீதிமன்ற சாலையிலுள்ள டிபார்ட்மென்டல் ஸ்டோரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் பயன்படுத்தப்படுவதாக பொதுமக்களிடமிருந்து ஆட்சியர் ராஜேந்திர ரத்னூவுக்கு தகவல் கிடைத்தது. உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் நாகர்கோவில் கோட்டாட்சியர் எஸ். நடராஜன் தலைமையில் வட்டாட்சியர் ச. நாகராஜன், வருவாய் ஆய்வாளர் திருவாழி, கிராம நிர்வாக அலுவலர் சுயம்பு, வடசேரி இன்ஸ்பெக்டர் ஜமால் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அந்தக் கடையில் திங்கள்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள் 82.85 கிலோ இருந்தது தெரியவந்தது.

அவை பறிமுதல் செய்யப்பட்டன. கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

ஆய்வின்போது, நாகர்கோவில் நகர்மன்ற ஆணையர் ஜானகி ரவீந்திரன், சுகாதார அலுவலர் போஸ்கோ ராஜன், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பூ. கிருபானந்தராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இது தொடர்பாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ கூறியதாவது:

மாவட்டத்தில் விதிமுறைகளுக்கு உள்பட்டு பிளாஸ்டிக் பைகள், கப்புகளின் பயன்பாட்டுக்கு கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள உள்ளாட்சி அமைப்புகளால் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இத் தடை அமலுக்கு வந்துள்ளது.

மாவட்டத்தில் பொதுமக்களுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வரும் இத் திட்டம் தமிழகம் முழுவதும் அனைத்து வகையினராலும் பரவலான பாராட்டைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், சில கடைகளில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்த பிளாஸ்டிக் பைகளை முழுமையாக அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்காமலும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொடுப்பதும் தெரியவந்தது.

இவ்வாறான மீறல்கள் இறுதியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வை முழுமையாக சிதைத்துவிட வாய்ப்புண்டு என மாவட்ட நிர்வாகத்துக்கு தெரியவந்தது.

மேலும், தடை செய்யப்பட்ட கேரி பைகளைப் பயன்படுத்தும் விதிமீறல், நகராட்சி திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் சீர்குலைக்கும் செயலாகவும், அதனால் பொது சுகாதாரம் பாதிப்பதாகவும் தெரிய வருகிறது.

இதனால், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பைகள், கப்புகளை விற்கும் பெரிய கடைகள், வர்த்தக நிறுவனங்கள், விடுதிகள் இன்னும் பிறவற்றின் மீது தமிழ்நாடு குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்கீழ் நடவடிக்கை எடுக்கவும், அவ்வாறான

நிறுவனங்களை சீல் வைத்து, பொதுமக்களின் பொது சுகாதாரத்தைத் தொடர்ந்து பாதுகாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகளை விற்கும் நிறுவனங்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றார் ஆட்சியர்.