Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆலந்தூர் நகராட்சி எச்சரிக்கை சாக்கடை இணைப்பு பெறாத வீடுகளுக்கு குடிநீர் துண்டிப்பு

Print PDF

தினகரன் 01.06.2010

ஆலந்தூர் நகராட்சி எச்சரிக்கை சாக்கடை இணைப்பு பெறாத வீடுகளுக்கு குடிநீர் துண்டிப்பு

ஆலந்தூர், ஜூன் 1: ஆலந்தூர் பகுதியில் பாதாள சாக்கடைக்கு இணைப்பு பெறாதவர்களின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என்று, நகராட்சி தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆலந்தூர் நகரமன்ற கூட்டம், மன்றக்கூடத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஆ.துரைவேலு தலைமை வகித்தார். துணைத்தலைவர் என்.சந்திரன், ஆணையர் என்.மனோகரன், நகரமைப்பு அலுவலர் சிவகுமார் முன்னிலை வகித்தனர். 48 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், நடந்த விவாதம் வருமாறு:

வெங்கட்ராமன் (எதிர்க்கட்சி தலைவர்):

எனது வார்டில் 11 நாட்களாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை.

நாஞ்சில் பிரசாத்(காங்கிரஸ்):

ஆதம்பாக்கம் நியூ காலனி பகுதியில் மழைநீர் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணிக்கு டெண்டர் விட்டும், பணி நடக்க வில்லை.

டார்வின்(அதிமுக): பழவந்தாங்கல் பி.வி.நகர் பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.5 லட்சம் செலவில் வாங்கப்பட்ட ஜெனரேட்டர் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இதை பயன்படுத்தினால் மின்சாரம் தடைபட்ட நேரத்தில் குடிநீர் விநியோகிக்க ஏதுவாக இருக்கும்.

ஷீலா (அதிமுக);

மக்கள் தொகை எண்ணிக்கைப்படி எனது வார்டில் ரேஷன் கடைஅமைத்து தரவேண்டும்.

எம்.ஆர்.சீனிவாசன் (திமுக):

அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அதிகம் அவதியுறுகின்றனர். சீரான மின்சாரம் வழங்க, மின்வாரிய அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

(இதே கருத்தை சச்சீஸ்வரி (திமுக), ஷீலா (அதிமுக), டார்வின் (அதிமுக) வலியுறுத்தினர்).

தலைவர் ஆ.துரைவேலு:

அனைத்து வார்டுகளிலும் மின்சாரம் தடையின்றி கிடைக்க சம்பந்தப்பட்ட மின் துறை அதிகாரிகளை அழைத்து பேசப்படும். குடிநீர் பிரச்னை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆலந்தூர் பகுதியில் உள்ள கடைகளில் வரும் 15ம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும்.

அவ்வாறு வைக்காத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை இணைப்பு பெறாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும். அனைத்து வார்டுகளிலும் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.