Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மழைநீர் சேமிப்பு திட்டம் கட்டமைப்பு கெடு தேதியை நீட்டிக்க மாநகராட்சி முடிவு

Print PDF

தினகரன் 01.06.2010

மழைநீர் சேமிப்பு திட்டம் கட்டமைப்பு கெடு தேதியை நீட்டிக்க மாநகராட்சி முடிவு

பெங்களூர், ஜூன் 1: மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவுவதற்கான கெடுதேதியை நீட்டிக்க பெங்களூர் மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 40க்கு 60 சதுரஅடி பரப்பில் கட்டப்படும் கட்டிடங்களில் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ மாநில அரசு கட்டாய சட்டம் கொண்டுவந்தது. அச்சட்டத்தின்படி, 2010 மே 27ம் தேதியுடன் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். இதனை செய்ய தவறும்பட்சத்தில் குடிநீர் மற்றும் வடிகால் இணைப்புகளை துண்டிக்க பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டது. மே 27ம் தேதிக்குள் மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை நிறுவ இயலாததால், கெடுதேதியை நீட்டிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று, கெடுதேதியை நீட்டிக்க, பெங்களூர் குடிநீர் மற்றும் வடிகால் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு வாரியதலைவர் பி.பி.ராமமூர்த்தி மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். இச்சட்டத்திருத்தம் அடுத்த சட்டமன்ற கூட்டத்தொடரில் தான் நிறைவேற்றப்படும் என்பதால், கெடுதேதியை செயல்படுத்துவதை வாரியம் தளத்தியுள்ளது.

இது குறித்து வாரிய தலைமை பொறியாளர் கெம்பராமையா கூறியதாவது: பெங்களூரில் இதுவரை 25 ஆயிரம் வீடுகளில் மழைநீர்சேமிப்பு கட்டமைப்பு நிறுவப்பட்டுள்ளது. கடந்த இருமாதங்களில் மட்டும் 12 ஆயிரம் வீடுகளில் மழைநீர் சேமிப்பு நிறுவப்பட் டுள்ளது.

ஆளுநரின் ஒப்புதலோடு கெடுதேதியை நீட்டிக்க, மாநில அரசு அவசர சட்டம் கொண்டுவரலாம். மழைநீர் சேமிப்புவிவகாரத்தில் இதனையும் பின்பற்ற முடியவில்லை. எனவே, கெடுதேதியை அலுவலகரீதியாக அல்லாமல் நீட்டிக்கிறோம். இதனால் மழைநீர் சேமிப்பு கட்டமைப்பை நிறுவாத வீடுகளுக்கு அபராதம் விதிக்கமாட்டோம் மற்றும் குடிநீர் இணைப்பை துண்டிக்கமாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.