Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் மாநகராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்

Print PDF

தினமணி 09.06.2010

சேலம் மாநகராட்சியில் வளர்ச்சித் திட்ட பணிகளை நேரில் ஆய்வு செய்த அமைச்சர்

சேலம், ஜூன் 8: சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார் (படம்).

சேலம் அணைமேடு பகுதியில் ரூ.4.20 கோடியில் நடைபெற்று வரும் அபிவிருத்திப் பணிகள், ஆக்ஸ்போர்டு பள்ளி அருகில் ரூ.2.95 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பாலப் பணிகள், வெள்ளக்குட்டை ஓடையில் இரண்டு பகுதிகளாக ரூ. 9.17 கோடியில் செய்யப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் ஆகியவற்றை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

பின்னர் அப்சரா பாலம் முதல் செவ்வாய்பேட்டை வரை ரூ.3 கோடியில் நடைபெற்று வரும் பணிகள், செவ்வாய்பேட்டை முதல் அன்னதானப்பட்டி பாலம் வரை ரூ.3.85 கோடியில் செய்யப்பட்டு வரும் பணிகள், அன்னதானப்பட்டி பாலம் முதல் கொண்டலாம்பட்டி அணைக்கட்டு வரை ரூ.2.56 கோடியில் நடைபெற்று வரும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.

மேலும் பழைய பஸ் நிலையம் அருகில் ரூ.1.56 கோடியில் கட்டப்பட்டு வரும் ஆட்கொல்லி பாலம், ரூ.77 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் காண்பாயிண்ட் பாலம் என மொத்தம் ரூ.31.63 கோடியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை வேளாண்மைத்துறை அமைச்சர் பார்வையிட்டார்.

பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும். ஆகஸ்ட் மாதத்துக்குள் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். மேலும் திருமணி முத்தாறு கரையில் உள்ள அரசு நிலங்களை அளவீடு செய்து அடையாளக் கல் நட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு வீரபாண்டி ஆறுமுகம் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) .கலைஅரசி, மாநகராட்சி மேயர் ரேகா பிரியதர்ஷிணி, ஆணையர் கே.எஸ்.பழனிச்சாமி, துணை மேயர் சி.பன்னீர்செல்வம் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.