Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் குழு ஆய்வு

Print PDF

தினமணி 09.06.2010

பெங்களூர் மாநகராட்சியில் சென்னை கவுன்சிலர்கள் குழு ஆய்வு

பெங்களூர், ஜூன் 8: பெருநகர பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்து மேயர் எஸ்.கே. நடராஜை சந்தித்த சென்னை மாநகராட்சியின் அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள், மாநகராட்சி நிர்வாகத்தின் செயல்பாடு, புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

சென்னை மாநகராட்சி மன்றத்தின் திமுக கொறடா ஏகப்பன் தலைமையில் காங்கிரஸ் கவுன்சிலர் மங்கள ராஜ், பாஜக கவுன்சிலர் ஏழுமலை, மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் தேவி, பகுஜன் சமாஜ் கட்சி கவுன்சிலர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்ட அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் 36 பேரும், சென்னை மாநகராட்சி சூப்பிரண்டு லஷ்மணசாமி, உதவி செயற்பொறியாளர் விஜயகுமார் ஆகியோரும் செவ்வாய்க்கிழமை காலை பெங்களூருக்கு வந்தனர்.

பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்து மேயர் எஸ்.கே. நடராஜ், துணை மேயர் தயானந்த், மாநகராட்சி மன்ற கட்சித் தலைவர்கள் சத்தியநாராயணா, நாகராஜ் ஆகியோரை சந்தித்தனர்.

மாநகராட்சி நிர்வாக செயல்பாடு குறித்து தெரிந்துகொள்ள வந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கவுன்சிலர்களை மேயர், துணை மேயர் உள்ளிட்டோர் மாநகராட்சி மன்ற கூட்ட அரங்கிற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு மேயர், துணை மேயர் ஆகியோரை பெங்களூர் மாநகராட்சி தமிழ் கவுன்சிலர் தன்ராஜ் சென்னை கவுன்சிலர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி திமுக கொறடா ஏகப்பன் அளித்த பேட்டி:

சென்னையில் அமல்படுத்தப்படாத நாட்டில் பிற முக்கிய நகரங்களில் செயல்படுத்தப்படும் புதுவித திட்டங்கள் என்னென்ன, மாநகராட்சிகளின் நிர்வாக செயல்பாடு உள்ளிட்டவை குறித்து தெரிந்துகொள்வதற்காக அனைத்துக் கட்சி கவுன்சிலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த குழுவில் உள்ள நாங்கள் முதல் முறையாக பெங்களூருக்கு 2 நாள் பயணமாக வந்துள்ளோம். இங்கு மாநகராட்சி செயல்படுத்தும் திட்டங்கள், மாநகராட்சியின் செயல்பாடு குறித்து மேயர், கவுன்சிலர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டோம். புதன்கிழமை நகரில் சுற்றுப் பயணம் செய்து பார்வையிட உள்ளோம்.

அதைத் தொடர்ந்து சண்டீகர், தில்லி, புனா, கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் சென்று அங்கு செயல்பாட்டில் உள்ள திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வோம். பிறகு சென்னைக்கு திரும்பி பிற நகரங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மேயரிடம் அறிக்கை அளிப்போம்.

பெங்களூரில் குப்பைகள் இல்லாமல் தூய்மை நகராகவும் சாலை வசதிகளும் நன்றாக உள்ளது. பூங்காக்கள் நல்ல முறையில் பராமரிக்கப்படுகிறது. சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அதிகம் இல்லை. ஆனால் சென்னையில் இதுபோன்ற திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. சென்னையில் நகரம் முழுவதும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பெங்களூர் மாநகராட்சி மேயரின் பதவிக்காலம் ஓராண்டு மட்டுமே.

மாநகராட்சித் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்த மேயருக்கு ஓராண்டு காலம் போதாது. ஆனால் சென்னையில் மேயரின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும் என்றார். இதுகுறித்து மேயர் நடராஜ் கூறுகையில், மாநகராட்சியின் பல்வேறு குழுக்கள், விதிமுறை,திட்டங்கள் குறித்து சென்னை கவுன்சிலர்களுக்கு விளக்கிக் கூறினோம். சென்னை கவுன்சிலர்கள் இங்கு ஆய்வு செய்தது போல பெங்களூர் கவுன்சிலர்கள் குழுவும் சென்னைக்கு சென்று வரும் என்றார்.