Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி பணிகளை ஆய்வுசெய்ய சென்னை கவுன்சிலர் குழு பெங்களூர் வருகை

Print PDF

தினகரன் 09.06.2010

மாநகராட்சி பணிகளை ஆய்வுசெய்ய சென்னை கவுன்சிலர் குழு பெங்களூர் வருகை

பெங்களூர், ஜூன் 9: பெங்களூர் மாநகராட்சியின் செயல்பாடுகளை ஆய்வு செய்வதற்காக சென்னையைச் சேர்ந்¢த அனைத்துக் கட்சி கவுன்சிலர் குழு நேற்று பெங்களூர் வந்தது.

சென்னை மாநகராட்சியின் கவுன்சிலர்கள் 36 பேர் திமுக கொறடா ஏகப்பன் தலைமையில் நேற்று காலை விமானத்தில் பெங்களூர் வந்தனர். அவர்களுடன் உதவி செயற் பொறியாளர் விஜயகுமார் மற்றும் மாநகராட்சி கண்காணிப்பாளர் லட்சுமணசாமி ஆகியோரும் வந்திருந்தனர். தனியார் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர்கள் மதியம் பெங்களூர் மாநகராட்சி தலைமை அலுவலகம் வந்தனர்.

மேயர் நடராஜ், துணை மேயர் தயானந்த், முன்னாள் மேயர் ரமேஷ் ஆகியோர் மலர் கொத்து கொடுத்து கவுன்சிலர்களை வரவேற்றனர். அதன்பிறகு மாநகராட்சி கூட்டம் நடைபெறும் இடத்திற்கு மேயர் நடராஜ் சென்னை கவுன்சிலர்களை அழைத்துச் சென்றார்.

அங்கு கவுன்சிலர்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்ட சென்னை கவுன்சிலர்கள் மேயர் மற்றும் துணை மேயரிடம் பெங்களூர் மாநகராட்சியின் செயல்பாடுகள், சட்ட திட்டங்கள் குறித்து கேள்விகளை எழுப்பி பதில் பெற்று அதை குறித்து வைத்துக் கொண்டனர். சில கேள்விகளுக்கு மேயர், துணை மேயர் பதிலளிக்க முடியாமல் அதிகாரிகளின் துணை கொண்டு பதிலளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

மேயர் நடராஜ் இதுகுறித்து நிருபர்களிடம் கூறும்போது "இதுபோன்ற சந்திப்புகள் இருமாநிலங்களுக்கு இடையேயான நட்புறவை வளர்க்கும். பெங்களூர் மாநகராட்சியில் நிலைக்குழு அமைக்கப்பட்ட பிறகு நமது கவுன்சிலர்கள் குழுவையும் சென்னை அனுப்பிவைக்க திட்டமிட்டுள்ளேன்" என்றார்.

கவுன்சிலர்களுக்கு தலைமையேற்று வந்துள்ள ஏகப்பன், எதிர்க்கட்சித் தலைவர் மங்களராஜ் (காங்.) கூறியதாவது: 8ம்தேதி காலை சென்னையிலிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்துள்ளோம். 9ம்தேதி இரவு இங்கிருந்து புறப்பட்டு கொல் கத்தா மாநகராட்சியை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பிறகு டெல்லி, சண்டீகர், புனே மாநகராட்சி செயல்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு 18ம்தேதி சென்னை திரும்ப உள்ளோம். பெங்களூர் மாநகராட்சி மேயர் எங்களுக்கு சிறப்பான வரவேற்பை அளித்தது மகிழ்ச்சி தருகிறது.

பெங்களூரில் பல விஷயங்கள் வெகுவாக கவர்ந்துள்ளன. நகரம் சுத்தமாக உள்ளது, சுவர்களில் விளம்பரங்கள், சுவரொட்டிகளை பார்க்கமுடியவில்லை. பூங்காக்கள் அருமையாக பராமரிக்கப்படுகின்றன. இதேபோன்று சென்னையிலும் சுவர் விளம்பரங்களை குறைக்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். 9ம்தேதி காலை முதல் மாலை வரை பெங்களூரை சுற்றிப் பார்க்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்தனர். இக்குழுவில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேமுதிக ஆகிய கட்சி கவுன்சிலர்கள் இடம்பெற்றுள்ளனர்.