Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இந்தர்லோக் ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துக்கு சீல்

Print PDF

தினகரன் 10.06.2010

இந்தர்லோக் ரயில் நிலையத்தில் வணிக வளாகத்துக்கு சீல்

புதுடெல்லி, ஜூன் 10: இந்தர்லோக் ரயில் நிலையம் பகுதியில் அனுமதியின்றி கட்டப்பட்ட வணிக வளாகத்துக்கு மாநகராட்சி சீல் வைத்தது.

இது பற்றி மாநகராட்சியின் சதார் பாகர் கஞ்ச் மண்டல துணை கமிஷனர் ரேணு கிருஷ்ணன் கூறியதாவது:

டெல்லி மெட்ரோ ரயில் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு இந்தர்லோக் ரயில் நிலைய பகுதியில் மாபெரும் வணிக வளாகத்தை தனியார் ஒருவர் கட்டியுள்ளார். ஆனால், மாநகராட்சியின் கட்டிட விதிகளை அவர் சிறிதும் பின்பற்றவில்லை. இதற்கான ஒப்புதலையும் மாநகராட்சியிடமிருந்து அவர் பெறவில்லை. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லாததால்தான், வணிகவளாகத்துக்கு சீல வைக்க கடந்த மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து மாநகராட்சியின் தீர்ப்பாயத்தில் டெல்லி மெட்ரோ கழகம் முறையீடு செய்தது. ஆனால், சீல் வைப்பதற்கு எந்த இடைக்கால தடையும் விதிக்க தீர்ப்பாயம் மறுத்துவிட்டது.

டெல்லி மெட்ரோ ரயில் கழக சொத்துக்களை வர்த்தக பயன்பாட்டுக்கு அனுமதிக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், அதில் கட்டுமான பணிகளுக்கு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் மாநகராட்சிக்கும் மெட்ரோ ரயில் கழகத்துக்கும் எந்த மோதலும் இல்லை. அதனால்தான், வணிக வளாகத்துக்கு சீல் வைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம். இந்த வணிகவளாகத்தில் மொத்தம் 59 கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் முன்னணி நிறுவனங்கள் தங்கள் பொருட்களை விற்பனை செய்து வந்தன. இப்போது, இந்த வணிக வளாகத்துக்கு முழுமையாக சீல் வைத்துள்ளோம். இவ்வாறு ரேணு கிருஷ்ணன் கூறினார். எனினும், மாநகராட்சியின் நடவடிக்கைக்கு மெட்ரோ கழகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறுகையில்,‘ எங்களுக்கு சொந்தமான நிலத்தில் பணிகளை மேற்கொள்ள யாரிடமும் அனுமதி பெற தேவையில்லை. மாநகராட்சி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது. தீர்ப்பாயம் உத்தரவை மீறி மாநகராட்சி செயல்பட்டுள்ளது. இதை தீர்ப்பாயத்தின் கவனத்துக்கு விரைவில் கொண்டு செல்வோம்என்றனர்.