Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கமிஷனருக்கு மேயர் கடிதம் மாநகராட்சி காவல் பணிக்கு 10 போலீசார் நியமனம்

Print PDF

தினகரன் 11.06.2010

கமிஷனருக்கு மேயர் கடிதம் மாநகராட்சி காவல் பணிக்கு 10 போலீசார் நியமனம்

பெங்களூர், ஜூன் 11:பெங்களூர் மாநகராட்சியில் காவல் பணிக்காக 10 போலீசாரை நியமிக்குமாறு போலீஸ் கமிஷனர் சங்கர்பிதரிக்கு மேயர் எஸ்.கே.நடராஜ் கடிதம் எழுதியுள்ளார்.

புதிய பெங்களூர் மாநகராட்சி பதவியேற்றபிறகு, கடந்த இரண்டுமாதங்களாக நடந்த மன்ற கூட்டத்தில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவையை ஒத்திவைக்க நேர்ந்தது. கடந்த கூட்டத்தில் மேயர் மாடத்திற்கு அருகே சென்று எதிர்க்கட்சியினர் தர்ணா போராட்டம் நடத்தியதால், அவை அமளிக்காடாக காட்சியளித்தது. இதற்கு முடிவுக்கட்ட தீர்மானித்துள்ள மேயர் எஸ்.கே.நடராஜ், மன்றத்தை கட்டுப்பாட்டோடு நடத்துவதற்கு 10 அவை காவலர்களை நியமிக்குமாறு பெங்களூர் போலீஸ் கமிஷனர் சங்கர்பிதரிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து மேயர் எஸ்.கே.நடராஜ் கூறியதாவது: அவையை கட்டுப்பாடோடு நடத்தவிரும்புவதால், அவை காவலர்களின் உதவியை கேட்டுள்ளோம். முதல்முறையாக கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவுன்சிலர்கள் பலருக்கு மாதகூட்டத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பது தெரியவில்லை. நியமன உறுப்பினர்களையும் சேர்த்து முன்னர் 110 பேர் இருந்தனர். இப்போது இது இரண்டுமடங்காகியுள்ளது.

மன்றத்தில் காவலர்களின் பணி, சட்டப்பேரவையை போன்றதாகவே அமையும். அவமரியாதையாக நடந்து கொண்டால், கவுன்சிலர்கள் அவையில் அப்புறப்படுத்துவார்கள். நடைமுறைவிதிகள் குறித்து போலீசாருடன் விவாதித்துவருகிறோம். அவை காவலர்களுக்கு மாநில அரசு சம்பளம் அளித்துவருகிறது. மன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு மாநகராட்சி சார்பில் சம்பளம் கொடுப்பதா? என்பது பற்றி ஆராய்வோம். மன்ற கூட்டத்தில் அவைகாவலர்களை நியமிக்க கர்நாடக முனிசிபல் சட்டம், 1976ல் இடமுள்ளது. சென்னை, மும்பை, டெல்லி மாநகராட்சியில் இருந்தபோதும், பெங்களூர் மாநகராட்சியில் அவை காவலர்களை வைத்திருக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.