Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மயிலாப்பூரில் உள்ளது போல் முக்கிய சாலையில் காரை நிறுத்த 60 தானியங்கி டோக்கன் இயந்திரம் ? வி.சி.மணி

Print PDF

தினகரன் 11.06.2010

மயிலாப்பூரில் உள்ளது போல் முக்கிய சாலையில் காரை நிறுத்த 60 தானியங்கி டோக்கன் இயந்திரம் ? வி.சி.மணி

சென்னை, ஜூன் 11: மயிலாப்பூர், பாண்டிபஜார், தரமணியில் உள்ளதுபோல், முக்கிய சாலையில் கார் நிறுத்துபவர்களிடம் கட்டணம் வசூலிக்க, 60 தானியங்கி டோக்கன் இயந்திரம் வைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை தடுக்கவும், மாநகராட்சி வருவாயை பெருக்கவும் கார் பார்க்கிங் செய்வதில் திருத்தம் செய்யப்பட்டது. சோதனை முறையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், பாண்டிபஜார் நாகேஷ் தியேட்டர், தரமணி சிஎஸ்ஐஆர் சாலை ஆகிய மூன்று இடங்களில் பார்க்கிங் டோக்கன் வழங்க தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டது. இந்த இடங்களில் மாநகராட்சி மற்றும் தனியார் இணைந்து 17 இயந்திரங்களை வைத்துள்ளனர்.

இங்கு கார் பார்க்கிங் செய்ய ஒரு மணி நேரத்துக்கு 5 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.15 செலுத்தி 3 மணி நேரம் மட்டுமே ஒருவர் கார் பார்க்கிங் செய்ய முடியும். இயந்திரத்தில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு டோக்கன் எடுத்துக் கொள்ளலாம்.

இதை அங்குள்ள தனியார் கம்பெனி ஊழியர் கண்காணிப்பார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், மாநகராட்சிக்கு கூடுதல் வருவாயும் கிடைத்துள்ளது.

இதையடுத்து சென்னையில் மாநகராட்சி மூலம் கார் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் 94 இடங்களிலும் படிப்படியாக தானியங்கி டோக்கன் இயந்திரம் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக அண்ணாநகர் 2வது, 3வது அவென்யூ, ரவுண்டானா, சாந்தி காலனி, புரசைவாக்கம் டேங்க், அண்ணாசாலை அருகில் உள்ள ஜெனரல் பீட்டர்ஸ் சாலை, ஒயிட்ஸ் சாலை, பாண்டிபஜார், அடையார் காந்திநகர் ஆகிய 9 இடங்களில் 60 தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன என்று மேயர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

வசூல் தொகையை குறைக்க முடியாது

தானியங்கி டோக்கன் வழங்கப்படாத இடங்களில் ரசீது மூலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இங்கு, அதிக நேரம் காரை நிறுத்தி விட்டு குறைந்த நேரம் விட்டுச் சென்றேன் என்று வாக்குவாதம் செய்ய முடியும். தானியங்கி டோக்கன் வழங்கும் இடங்களில் இப்படி ஏமாற்ற முடியாது. துல்லியமான நேரம், நாள், கார் நம்பர் போன்ற தகவல்கள் துண்டு சீட்டில் இயந்திரம் மூலம் அச்சடிக்கப்படுகிறது. ஒரு மாதத்தில் எவ்வளவு வசூலானது என்பது இயந்திரத்தில் உள்ள சாப்ட்வேர் மூலம் பதிவு செய்யப்படுகிறது. இதனால் அதிக வசூல் செய்து விட்டு குறைவாகத்தான் வசூலானது என்று பொய் சொல்ல முடியாது. கார் பார்க்கிங் கட்டணம் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைக்கிறது.