Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டு பற்றி இணைஇயக்குனர் ஆய்வு

Print PDF

தினமலர் 15.06.2010

ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டு பற்றி இணைஇயக்குனர் ஆய்வு

ஈரோடு: ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டுகள் குறித்து சென்னை நகராட்சி இணை இயக்குனர் மகேஸ்வரி நேற்று திடீர் ஆய்வு செய்தார். ஈரோடு நகராட்சி 2008ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஈரோடு நகராட்சி, வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி, பெரியசேமூர், காசிபாளையம் ஆகிய மூன்றாம் நிலை நகராட்சி, பி.பி., அக்ரஹாரம், சூரியம்பாளையம் ஆகிய டவுன் பஞ்சாயத்துகள், திண்டல், வில்லரசம்பட்டி, கங்காபுரம், முத்தம்பாளையம் ஆகிய பஞ்சாயத்துகள் ஆகியவை ஒருங்கிணைந்த மாநகராட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டன. ஒருங்கிணைந்த பகுதிகளை நான்கு மண்டலங்களாவும், 60 வார்டுகளாகவும் பிரிக்க அரசு உத்தரவிட்டது.

ஒருங்கிணைந்த பகுதிகளில் ஒரு மண்டலத்துக்கு 15 வார்டுகள் வீதம் மொத்தம் 60 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டன. அரசு அனுமதிக்கு பட்டியல் சென்னை அனுப்பப்பட்டது. ஒருங்கிணைந்த மாநகராட்சி வார்டுகள் பட்டியல் குறித்து சென்னை நகராட்சி இணை இயக்குனர் மகேஸ்வரி, ஈரோடு மாநகராட்சியில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். கமிஷனர் பாலச்சந்திரன் அறையில் ரகசியமாக ஆய்வு செய்யப்பட்டது.

"காசிபாளையம் நகராட்சியில் பகுதியில் 48 சதுர கிலோ மீட்டர் தூரம் சேர்க்க வேண்டும்' என, அரசு உத்தரவு உள்ளது. ஆனால், அவ்வளவு பகுதிகள் சேர்க்கப்படவில்லை. இதனால், சரியான முறையில் வார்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா? என்று கேட்டறியப்பட்டது. ஆய்வில், கமிஷனர் பாலச்சந்திரன், காசிப்பாளையம், பெரியசேமூர் நகராட்சி செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாநகராட்சியில் முதலாவது மற்றும் இரண்டாவது மண்டலங்களில் வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதி வார்டுகள் பிரித்தலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என நகராட்சி முன்னாள் தலைவர் லோகநாதன், இணை இயக்குனரிடம் மனு கொடுத்தார்.

மனுவில் கூறியுள்ளதாவது: ஈரோடு மாநகராட்சி வார்டுகள் நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். புதிதாக பிரிக்கப்பட்ட முதலாவது மற்றும் இரண்டாவது மண்டலங்களில் வீரப்பன்சத்திரம் நகராட்சி பகுதி வார்டுகள் பிரித்தலில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக வீரப்பன்சத்திரம் நகராட்சியில் 6, 7, 10 வார்டுகள் மூன்றும் ஒரு வார்டாக பிரித்தல் சரியில்லை. 6, 7, 8 ஆகிய வார்டுகளை ஒன்று சேர்க்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.