Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகராட்சி இடங்களை பொதுமக்கள் வாங்கக் கூடாது: ஆணையர்

Print PDF

தினமணி 21.06.2010

நகராட்சி இடங்களை பொதுமக்கள் வாங்கக் கூடாது: ஆணையர்

போடி, ஜூன் 20: நகராட்சிக்குச் சொந்தமான இடங்களை பிளாட் போட்டு விற்பனை செய்தால் பொதுமக்கள் வாங்கக் கூடாது என போடி நகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

போடி நகரில் பல இடங்கள் பிளாட் போட்டு விற்பனை செய்யப்படுகிறது. மனையிடங்கள் பிளாட்டுகளாகப் பிரித்து விற்கும்போது பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க இடம் ஒதுக்கி அவற்றை நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும்.

சிலர் அவ்வாறு அனுமதி பெற்றுவிட்டு பூங்கா, விளையாட்டு மைதானம் ஆகியவற்றிற்கு ஒதுக்கிய இடங்களையும் விற்பனை செய்து விடுகின்றனர். இதேபோல் பொது உபயோக இடங்களையும் சிலர் பிளாட் போட்டு விற்க முயன்று வருகின்றனர். பொதுமக்களில் சிலர் இதை வாங்கி ஏமாற்றம் அடைகின்றனர்.

இதுகுறித்து போடி நகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

நகராட்சிக்குச் சொந்தமான பூங்கா இடங்கள், பொது உபயோக இடங்கள், சிறுவர் விளையாட்டு மைதானம், சாலைகள், மயானங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் வாங்கவோ, ஆக்கிரமிப்பு செய்யவோ கூடாது. மேலும் வட்டாட்சியர் அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள மயான இடத்தை தற்போது மனைப்பிரிவாக பிரிக்க சிலர் முயற்சி செய்வதாகத் தெரிகிறது.

மயான இடத்தையோ, நகராட்சி எல்லைக்குள் போடப்படும் அனுமதியற்ற மனைப்பிரிவுகளையோ பொதுமக்கள் வாங்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அனுமதியற்ற மனைப்பிரிவு மனையிடங்களுக்கு நகராட்சி மூலம் எவ்வித அடிப்படை வசதியும் செய்து தர இயலாது, மனையிடங்களை வாங்குபவர்கள் நேரடியாக நகராட்சி அலுவலகத்தை அணுகி விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.